பாலைவன சொர்க்கம் என்று கருதப்படும் துபாய்க்கு செல்கிற இளைஞர்கள் பிரச்சினையில் சிக்கி நரகம் அனுபவிப்பதை சொல்ல முயன்ற கதைதான் மணல் நகரம்.
டிஜேஎம் அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. ஒருதலைராகம் சங்கர் இயக்கியுள்ளார்.
பிரஜின், தனிஷ்கா, கௌதம் கிருஷ்ணா, வருணா ஷெட்டி நடித்துள்ளனர்.
துபாயிலிருக்கும் பிரஜின் இந்தியாவிலிருக்கும் கௌதமைக் கூப்பிட்டு வேலை கிடைக்க உதவுகிறார். போன இடத்தில் வேலையை மட்டும் பார்க்காமல் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கும் தனிஷ்காவுடன் நட்பாகிக் காதலிக்கிறார். பிரஜின். வேலை கொடுத்த முதலாளி பெண் வருணாமீது கண் வைக்கிறார். கௌதம்.
அங்கு வேலைபார்க்கும் தனிஷ்கா, இந்தியாவில் ஒரு கம்பெனிக்காக பண வசூல் செய்து மோசடிக்காகத் தேடப்படுகிறவர்.
ஓட்டலின் முதலாளிக்கு தனிஷ்கா மீது ஒருகண். எனவே அவர் காதலன் பிரஜினை வெறுக்கிறார்.
ஒரு கட்டத்தில் மோசடியில்தனிஷ்காவிடம் பணம் இழந்த ஆள், துபாய் வந்து தனிஷ்காவை மிரட்ட 50 லட்சம் கேட்கிறார். தன் காதலியை மீட்க பிரஜின் பணம்தேடிஅலைய, ஒருவர் உதவுகிறார். பணம் கொடுக்கும் தருவாயில் போலீஸ் வந்து பிடிக்க,பிறகு உதவியவர் மாரடைப்பில் மரணிக்கிறார். இன்னொரு மோதலில் ஓட்டல் முதலாளி மாடியிலிருந்து விழுந்து இறந்து விட கொலைப்பழி கௌதம் மீது விழுகிறது. இத்தனைக்கும் பிறகு காதலி கிடைப்பாளா? நண்பன் பிழைப்பானா என்கிற முடிச்சுடன் க்ளைமாக்ஸ்
படத்தில் பிரஜின் பிரதான வேடம் ஏற்று பல பாவங்கள் காட்டும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
சக நண்பனாக வரும் கௌதமும் பதிகிறார். கூடவே அவர்களது அறைத் தோழர்களும் ,சோழி உருட்டி ஜோதிடம் சொல்லும் ஐயரும் கூட பதிகிறார்கள்.
தனிஷ்கா மூக்கும் முழியுமாக இருக்கிறார். அவரை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம். வருணாவுக்கு உயரம் ஒன்றுதான் குறைவு. மற்றபடி அவரும் அழகுதான். காதலனுக்காக காதலையே தியாகம் செய்யும் யதார்த்தத்தில் மனதில் நின்று விடுகிறார் வருணா .
துபாயின் கட்டடங்கள் எனும் கான்கிரீட் காடுகளின் அழகை அள்ளிக்கொண்டு வந்து காட்சி விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.ஸ்ரீதர்.துபாயில் பெரும்பாலும் வெளிப்புறப் படப்பிடிப்பில் காட்சிகளை காட்டுகிறார்கள். பாஸ்போர்ட் ,விசா இல்லாமல் நாடடைச் சுற்றிப் பார்த்த உணர்வு.
வசனம் ஆர்.வேலுமணி ஆங்காங்கே இயல்பு கெடாமல் பஞ்ச்சும் வைத்து எழுதியுள்ளார்.
பளிச்சென ஒளிப்பதிவு பாதகமில்லாத இசை. மிகையில்லாத வசனம்.ஆபாசமில்லாத காட்சிகள் என்று சாதகங்கள் நிறைய உண்டு .ஆனால் அழுத்தமாக கதையைச் சொல்லியிருந்தால் பாலைவனம் சோலைவனமாக மாறியிருக்கும். நாட்டை காட்டும் மும்முரத்தில் மனதைத் தொடத் தவறி இருக்கிறார்கள்.
துபாய் நாடு, சட்டத்திட்டம், பற்றிய நடைமுறைகள் பற்றி நிறைய புரிய வைக்கிறது படம் .மணல் நகரம் சொல்கிற நீதி போகிற இடத்தில் வேலையை மட்டும் பாருங்கள்.