’மதறாஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்பட விமர்சனம்

ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனிஷ்காந்த், ராம்ஸ், ஆராத்யா நடித்துள்ளனர். ஏ எஸ் முகுந்தன் இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி சுகந்தி அண்ணாதுரை தயாரித்துள்ளார்.

பெரிய நிறுவனங்களுக்கு கிளை அலுவலகங்கள் இருப்பது போல சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள் போல் சின்ன சின்ன ரவுடிகள் செயல்பட்டு குற்றத்தொழிலை செய்து வருகிறார்கள்.இவ்வளவையும் செய்யும் ஆனந்தராஜ் எல்எல்பி படித்து விட்டு ஒரு பெரிய மனிதர் போல் தன் மீது ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படாமல் வெள்ளுடை வேந்தராக உலா வருகிறார்.பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை அவரது மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவனை மிரட்டியதில் அவன் காயப்பட்டு இறந்தே போகிறான். ஆனாலும் அவர்கள் வீட்டினர் புகார் கொடுக்க முன்வரவில்லை.அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று அவரது விரோதிகள் காத்திருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடிவதில்லை. இந்நிலையில் அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறது சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு.தொழில் போட்டியில் உடன் இருப்பவர்களும் அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த இரண்டு பக்கங்களில் போடப்படும் திட்டங்களில் இருந்து அவர் தப்பித்தாரா? தனது ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’யைத் தொடர்ந்து நடத்தினாரா என்பது தான் இந்தப் படத்தின் மீதி கதை.

அன்று முதல் இன்று வரை கட்டு குலையாமல் தன் உடம்பை வைத்திருக்கும் ஆனந்தராஜ் ,ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி இப்போது நகைச்சுவையிலும் கலக்குகிறார்.இந்தப் படத்தில் பூங்காவனம் பாத்திரத்தில் அவர் சிரித்துக் கொண்டே செய்யும் வில்லத்தனம் மிரட்டல் ரகம். அது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புது அனுபவம்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா,முறைப்பும் விரைப்புமாக அந்தக் காக்கி சீருடையில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.ஆக்சன் காட்சியிலும் கவனிக்க வைக்கிறார்.

ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் பாத்திரத்தில் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்.சக்களத்தி சண்டையில் சிரிக்கவும் வைக்கிறார்.

கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில் நானும் ரவுடிதான் என்று டம்மி ரவுடியாக வரும், முனிஷ்காந்த் தனது பங்கிற்கும் சிரிக்க வைக்கிறார்.

ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா,அளவான அழகு ,தேவையான நடிப்பு என்று வந்து கவர்கிறார்.

ராம்ஸ், சசிலயா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வரும் குத்துப்பாட்டு கமர்சியல் ரகம்.இனிய பாடலும் உள்ளது பின்னணியும் குறையில்லை.

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா வண்ணமயமாக்கி அமைத்திருக்கும் காட்சிகளில்  வசீகரிக்கிறது.
வன்முறைக் கதையாகத் தொடங்கி நகைச்சுவையாக வளர்ந்து இறுதியில் தத்துவார்த்த ரீதியில் முடிகிறது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன்,ஒரு தீவிரமான உலகியல் கருத்தைச் சொல்ல நகைச்சுவையைப் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனந்தராஜ் என்ற நடிகரை கதையின் நாயகனாக வைத்து மக்களுக்குக் கருத்து சொல்லி இருக்கிற இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன்,வணிக ரீதியிலான, அனைத்து அம்சங்களையும் கலந்து பார்வையாளர்களுக்குப் பொழுதுபோக்கு விருந்து படைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ வியாபாரம் களை கட்டி லாபம் தரும் வகையில் உருவாகி உள்ளது.