மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் & ஜான் விஜய் ஆகியோர் இந்தப்படத்தில் வில்லன்களாக நடிக்க, முக்கிய வேடங்களில் கடைக்குட்டி சிங்கம் புகழ் நடிகைஅர்த்தனா பினு, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், மாரி முத்து & சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.
இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
இந்த படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.