ராஜபாளையம் பகுதியில் மிகுந்த அரசியல் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் ராதாரவி. அவரது வலதுகையாக செயல்பட்டு வரும் ஆர்.கே.சுரேஷ், எம்.எல்.ஏ. ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
அதே ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவரை அப்பத்தாதான் வளர்த்து வருகிறார். இவருடைய நண்பரான சூரியும், இவருடனே வளர்ந்து வருகிறார். அப்பத்தாவை மதிக்கும் விஷால், அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாத செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.
ஒருநாள் கடையில் இருக்கும்போது, அங்கு வரும் ஸ்ரீதிவ்யா மீது தவறுதலாக விஷாலின் கைபடவே, ஸ்ரீதிவ்யா விஷாலை கன்னத்தில் அறைந்து விடுகிறார். கோபமடைந்த அப்பத்தா, ஸ்ரீதிவ்யாவை பதிலுக்கு அறைய, இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.
இருப்பினும், ஸ்ரீதிவ்யாவின் துணிச்சல் அப்பத்தாவுக்கு பிடித்துவிடுகிறது. அவர்களை சேர வைக்க ஏதாவது செய்யும்படி சூரியிடம் கூறுகிறார். சூரி, ஒருவழியாக இரண்டு பேரையும் காதலிக்க வைக்கிறார்.
இந்நிலையில் அந்த பகுதியில் நடக்கும் கொலைகளுக்கு சுரேஷ்தான் காரணம் என்று ஸ்ரீதிவ்யாவின் அப்பா மாரிமுத்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தனது எம்.எல்.ஏ. கனவு பலிக்காமல் போய்விடும் என்பதால், ஆர்.கே.சுரேஷ் மாரிமுத்துவிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார். ஆனால், அவரோ மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் அவரைக் கொலை செய்ய சுரேஷ் முடிவெடுக்கிறார்.
இந்த விஷயம் விஷாலுக்கு தெரிய வந்ததும் ஸ்ரீதிவ்யாவுக்காக ஆர்.கே.சுரேஷை எதிர்க்க புறப்படுகிறார். இறுதியில், ஆர்.கே.சுரேஷை எதிர்த்து ஸ்ரீதிவ்யாவையும் அவளது அப்பாவையும் விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
ராஜபாளையம் பகுதி என்கிற பின்னணியும் விஷால் சுமை தூக்குபவர் என்கிற பாத்திரச் சித்தரிப்பும் படத்துக்குப் புது நிறம் கூட்டுகின்றன. படம் முழுக்க வியர்வை வழிய உழைப்பாளியாக வருகிறார் விஷால். கறுப்பு தோலும், தொடை தெரியும் அளவுக்கு கைலி உடுத்தி, ஒருசுமை தூக்கும் தொழிலாளியாகவே காட்சியளிக்கிறார். அளவான நடிப்பாலும் சிலநேரம் ஆவேச நடிப்பாலும் கவர்கிறார்.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று இருக்கிற ஸ்ரீதிவ்யாவின் பாத்திரமும் கவர்கிறது. அவர் ஒரு கிராமத்து பெண்ணாக மனதில் பதிகிறார். துணிச்சலான பெண்ணாக நடித்து அசர வைக்கிறார்.
விஷால் கூடவே சுற்றும் சூரி படம் முழுக்க கலகலப்பூட்டி இறுதிக் காட்சியில் அப்பத்தாவுக்காக இவர் கதறி அழும் காட்சிகளில் கனக்க வைக்கிறார் மனதை.
மென்மையான வில்லனாக வரும் ராதாரவி அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருபொருள் பட இருவரையும் மனதில் வைத்து எழுதப்பட்ட வசனங்கள் கலகலப்பு
ஆர்.கே.சுரேஷ் படத்தின் இன்னொருநாயகன் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு வில்லத்தனத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.
அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மலையாள நடிகை கொள்ளப்புள்ளி லீலா. இந்த படத்தில் கதாநாயகியை விட முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. அதை சிறப்பாக செய்திருக்கிற அவர் இறுதிக்காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
அந்த ‘சிலம்பம் மாரியம்மா ‘ கூட அட.. போட வைக்கிறார்.
இமானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். ‘சூறாவளிடா….’ ‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’ ஆகிய பாடல்கள் தியேட்டரில் துள்ளல் ரகம்.து. ‘கருவக்காடு கருவாயா’ பாடல் இனிமை ரகம். பின்னணி இசையிலும் தன் பங்குக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ராஜபாளையத்தின் மண்ணை வாழ்க்கையை இவரது கேமரா அழகாக நம் முன் காட்டியிருக்கிறது.
படத்தில் இயக்குநர் முத்தையா போலவே வசனகர்த்தா முத்தையாவும் பளிச்சிடுகிறார். நறுக் சுருக் வசனங்கள் நச்.
படத்தில் வன்முறையைக் குறைத்திருக்கலாம் . படம் முடிந்து தனியேநின்று சித்தித்தால் பலவும் பழக்கப்பட மசாலாபோல இருந்தாலும் அந்த நேரம் ரசிக்க வைத்தது முத்தையாவின் பலம்.
.