மலேசிய டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணனுக்கு குளோபல் ஐகான் விருது வழங்கி கெளரவித்த ரோட்டரி கிளப்!

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணனுக்கு குளோபல் ஐகான் விருது வழங்கி கெளரவித்த ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக‌, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் அவ‌ருக்கு மதிப்புமிக்க குளோபல் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தது.

நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஷபீர் நசீர், செயலர் மேரி அமுதா, டிஓடி தலைவர் ஜோசப் ராஜா, வொகேஷனல் இயக்குந‌ர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளை தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் சரவணன் தனது ஏற்புரையில், “ரோட்டரி சங்கத்திடம் இருந்து மதிப்புமிக்க‌ இந்த விருதை பெறுவது மிகுந்த பெருமையையும் மிக்க மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இங்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த‌ விருதை கொடுத்து என்னை கெளரவித்தார்கள் என்பதை விட இந்த விருது பெற்றதால் நான் கெளரவிக்கப்படுகின்றேன். இந்த விருதால் எனக்கு பெருமை.

என்னை பொருத்தவரை விருதுகள் என்பது இது வரை நாம் உழைத்ததற்காக கொடுக்கப்படுவது அல்ல, இன்னும் உழைப்பதற்காக கொடுக்கப்படுவது என்பதை உணர்ந்து, இது வரை நீங்க‌ள் கொடுத்த விருதுக்கு நான் தகுதி பெற்றவனோ இல்லையோ, நிச்சயமாக இனி வரும் காலங்களில் என்னை தயார்படுத்துவேன், நன்றி வணக்கம்,” என்று கூறினார்.