வினோத் மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன்,ஜான் விஜய், கஞ்சா கருப்பு ,சாய் தீனா,ராஜசிம்மன், ஸ்ரீரஞ்சனி,ரஞ்சனா நாச்சியார் நடித்துள்ளனர். ஜே. ராஜேஷ் கண்ணா
இயக்கி தனது ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார் .இணை தயாரிப்பு டத்தோ கணேஷ் மோகனசுந்தரம். ஒளிப்பதிவு கே.அருண் பிரசாந்த் இசை எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் .
நல்ல சக்திக்கும் தீய சக்திக்குமான பகைமை போராட்டம் மோதல் கொண்ட கதையை பல தலைமுறைகள் பின்னணியில் ஆன்மீகப் பின்புலத்தைக் கலந்து ஒரு விறுவிறுப்பான 113.21 நிமிடங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கி உள்ளார்கள்.
‘இந்த ஜென்மத்திலேயேயும்நீயே ஜெயிச்சிட்ட இல்ல ‘என்று வில்லன் நடிகர் சாய் தீனா கூறுவது போல் மூன்று ஜென்மத்திலும் காட்சிகள் வருகின்றன.
உலகம் 13 நாட்களில் அழியப்போகிறது என்று கூறிவிட்டுக் கதை தொடங்குகிறது.அதற்கு முன்பு தமிழினத்தின் வரலாறு கூறப்படுகிறது. மெக்சிகோவில் உள்ளவர்கள் நம் தமிழர்கள் என்றும் குமரிக்கண்டம் அழிவுற்றதைப் பற்றி காட்டுகிறார்கள்.
ஆடுகளம் நரேன் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தில் கதாநாயகன் வினோத் மோகன் வேலை பார்க்கிறார்.அவரது பாத்திரத்தின் பெயர் ஆதி.
ஆடுகளம் நரேனின் மகள் தான் பிந்து மாதவி ,பாத்திரப் பெயர் கோப்பெருந்தேவி.தன து நிறுவனத்தில் வேலை பார்க்கும்
வினோத் மோகனை ஆடுகளம் நரேன் மிகவும் இழிவாக நடத்துகிறார் .வினோத் தனது குடும்பம் தங்கையின் திருமணம் வீடு அம்மா என்ற குடும்பப் பொறுப்புகள் அழுத்துவதால் தன்னை சீண்டும் அத்தனை அவமானங்களுக்கும் எதிர்வினை புரியாமல் பொறுமையாக இருக்கிறார்.வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி ஒரு ப்ளாட்டை வாங்குகிறார்.குடும்பத்தை அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு சென்ற பின் அவருக்குள் அதுவரை அடக்கி வைத்திருந்த ரோஷத்தை,கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். ஆடுகளம் நரேனை எதிர்த்துப் பேசி வேலையைத் தூக்கி வீசி விட்டுச் செல்கிறார்.அப்படிப்பட்டவரை பிந்து மாதவி காதலிக்கிறார் அதிரடியாகத் திருமணமும் செய்து கொள்கிறார்கள் . அதுவரை கண்ணில் தெரியும் அநியாயங்களை எல்லாம் பொறுமையாகக் கடந்து போனவர் அதன் பிறகு ஒவ்வொருவராக அடித்து வெளுத்து வாங்குகிறார்.இதனால் பலரது பகை துரத்துகிறது.முடிவு என்ன என்பதுதான் கதை.
கதையை மித்தாலஜிக்கல் ஸ்டைலில் கலந்து கூறியிருப்பது புதுமையான போக்காகத் தெரிகிறது.சிவனின் அவதாரம் ,எமனின் ஆவேசம், காலபைரவரின் விஸ்வரூபம் என்று காட்டப்படுகின்றன.
கதாநாயகன் வினோத் மோகன் பாத்திரத்துக்கு ஏற்றபடி தோற்றம், உடல் மொழி, வசனஉச்சரிப்பு, ஆக்சன் காட்சிகள் என்று சரியாகப் பொருந்தியுள்ளார்.
பிந்து மாதவி தோற்றத்தில் தான் விதவிதமாக வேறுபாடுகள் தெரிகின்றன.சில காட்சிகளில் பளிச்சென்றும் சில காட்சிகளில் மங்கலாகவும் தோன்றுகிறார்.
வெவ்வேறு காலகட்டத்தில் காட்சிகள் எடுத்திருப்பார்களா என்னவோ?அவருக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கோவிலில் அவசரத் திருமணம் செய்யும்போது மாலை மாற்றும் காட்சியில் பெண்ணுக்குரிய தயக்கத்தை முகத்தில் காட்டி இருப்பது அழகு.
பிந்து மாதவியின் தந்தையாக ஆடுகளம் நரேன் தொழிலதிபராக வருகிறார். அவர் குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகளிலேயே வருகிறார்.
ஜான் விஜய் மோசமான போலீஸ்காரராக வருகிறார். ஐபிஎஸ் படித்து விட்டு இருப்பவராகப் படத்தில் காட்டப்படுகிறது.ஆனால் சாதாரண நிலை போலீஸ் போல் தோன்றுகிறார்.
நல்ல நடிகர் சாய் தீனா வழக்கம்போல ரவுடியாக வருகிறார்.
13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்று சொன்ன பிறகு, அது பற்றிப் பிற பாத்திரங்கள் அறியாமல் உள்ளன.ஆதி பாத்திரத்திற்கு மட்டுமே அது தெரிகிறது. அந்த மாயனாக வரும் ஆதிதான் இறைவன் என்று உணர்த்துகிறார்கள்.
இப்படத்தில் அருண் பிரசாந்தின் ஒளிப்பதிவும் ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் படத்தின் தரத்தை உயர்த்தும் படி உள்ளன.காதல் பாடல் ஒன்றும் அம்மா பாசத்தைக் காட்டும் பாடல் ஒன்றும் உள்ளன.
படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நல்லவன் கெட்டவன் என்று இரு துருவ சக்திகளைச் சித்தரிக்க சில கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அதை மட்டும் பார்க்கும் போது நன்றாக உள்ளன.குறிப்பாக உச்சகட்ட காட்சியின் போது வருகின்ற கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரட்டுகின்றன. ஆனால் கதையோடு ஒட்டாமல் சரியாக அமைவிடப் பொருத்தம் இல்லாததால் இந்தத் தொழில்நுட்பக் காட்சிகள் தனியே துண்டாக தெரிகின்றன.இதே கதை நான் லீனியர் முறையில் கூறியிருந்தால் மேலும் சுவாரஸ்யம் கூடி இருக்கும்.
இந்தப் படத்தின் கதை சொல்லும் கருத்தின் படி எத்தனை ஜென்மம் ஆனாலும் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் பகைமை உணர்ச்சி மாறாது, தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதுதான்.இதுதான் கதை சொல்லும் நீதி . இதை நாம் கண்கூடாகச் சமகாலத்தில் பார்க்கத்தானே செய்கிறோம்?
மொத்தத்தில் ‘மாயன்’ திரைப்படம் ஹீரோ வில்லன் மோதலை புதிய விதத்தில் கூற முயன்றுள்ள படம் என்று கூறலாம்.