‘மாரீசன்’ திரைப்பட விமர்சனம்

வடிவேலு ,பகத் பாசில் ,கோவை சரளா, சித்தாரா,விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல். தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் நடித்துள்ளனர்.

சதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். கதை திரைக்கதை வசனம் படைப்பு இயக்கம் வி கிருஷ்ணமூர்த்தி, ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி ,இசை யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங், தயாரிப்பு சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. செளத்ரி .தமிழ்நாடு வெளியீடு தியா மூவிஸ்.

‘மாரீசன்’ என்பது ராமாயணத்தில் இடம் பெறும் ஒரு பாத்திரமாகும். அதில் வரும் மாரீசன் இராவணனின் உறவினன். சீதையை மயக்குவதற்காகப் பொன்மான் வேடத்தில் வருவான். சூழ்ச்சிக்கும் மாயத்திற்கும் தந்திரத்திற்கும் மாரீசன் கதாபாத்திரம் குறியீடாக்கப்படுகிறது.அப்படித்தான் இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள். பெயர் பொருத்தத்திற்கு ஒரு பாராட்டு.

படத்தில் வரும் பல பாத்திரங்கள் தங்கள் அசல் முகத்தை ஒளித்து வைத்துவிட்டு வேடம் பூண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அசலான மாரீசன் யார் என்பது படத்தின் முடிவில் தெரியும். 

சின்னச் சின்ன திருட்டு வேலை செய்யும் பகத் பாசில் தண்டனை முடிந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார்.ஆடிய கால்களும் பாடிய வாயும் மட்டுமல்ல களவாடிய கைகளும் சும்மா இருக்காது.வெளியில் வருகிற போதே அவரது வேலையை ஆரம்பித்து விடுகிறார். ஒரு குளிக்கும் படித்துறையில் செல்போன்,போகிற போக்கில் யமஹா மோட்டார் சைக்கிள் என்று திருடிக் கொண்டு செல்கிறார். எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் பிடிக்கிறார். வாசல் திறந்து தன்னைத் திருட வா வா என்று அழைக்கும் வீடாகப் பார்த்து ஒரு வீட்டில் நுழைகிறார்.வீடு அமைதியாக இருக்கிறது.
வீட்டில் பொருள் இருக்கிறதா என்று துழாவுகிறார்.அங்கே ஒரு அறையில் வடிவேல் இருப்பதைப் பார்க்கிறார் . அவர்  சங்கிலியால் பிணைக்கப்பட்ட கையுடன் இருக்கிறார். அவரை சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆனால் அவரோ தன்னை அங்கிருந்து விடுவித்து விடுமாறு கெஞ்சுகிறார் . ஒரு பேரத்திற்குப் பிறகு விடுவித்தால் வெளியே சென்று ஏடிஎம் இல் எடுத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறுகிறார். தனக்கு ஞாபக மறதி பிரச்சினை இருப்பதாகவும்  வீட்டை விட்டுக் காணாமல் போய்விடுவதால் மகன் கட்டி வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.வந்தவரை லாபம் என்று அவர் கூறுவதை நம்பி அவரை விடுவிக்கிறார் பகத் .இருவரும் பைக்கில் புறப்படுகிறார்கள்.

முதல் கிருஷ்ணவேணி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிறார். பிறகு நண்பன் சாரியைப் பார்க்க வேண்டும் என்கிறார்.வடசேரி, பாலக்காடு, திருவண்ணாமலை என்று மாற்றி மாற்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்கிறார்.ஞாபகமறதியால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகப் பகத்பாசில் நினைக்கிறார். வடசேரி போனால் அங்கே யாரை சந்திப்பது என்று குழப்பம். பிறகு திருவண்ணாமலை என்கிறார். இருவரும் பயணப்படுகிறார்கள். ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள், ஒரு விடுதியில் தங்குகிறார்கள்.தங்கியிருந்தபோது இருவரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள்.ஒரு கட்டத்தில் வடிவேலு கையில் வேறு ஏடிஎம் கார்டுகள் இருப்பதைப் பார்க்கிற பகத் பாசில் அதைக் கொண்டு மேலும் பணத்தைக் கறக்கலாம் என்று முடிவு செய்கிறார்.அதற்கு தன் நண்பன் நெட்வொர்க் கணேஷ் என்கிற விவேக் பிரசன்னா உதவியை நாடுகிறார். அவரோ அவற்றைப் பிரதி எடுத்து அனுப்புமாறும் விரைவில் போலி கார்டு தயாரித்து அனுப்புவதாகவும் கூறுகிறார்.அந்தப் புதிய கார்டு வரும் வரை பல இடங்களுக்கு போக்கு காட்டி நேரத்தை கடத்துகிறார் பகத் . அப்படியே திருவண்ணாமலை செல்கிறார்கள், போலி ஏடிஎம் கார்டுகளும் வந்து செய்கின்றன.விடுதியில் தங்குகிறார்கள். பிறகு அங்கே விவேக் பிரசன்னாவும் வந்து சேர்ந்து கொள்கிறார்.தனது வீட்டுக்கு வடிவேலுவை அழைத்துச் செல்கிறார் பகத் பாசில். அவரது அம்மா தான் ரேணுகா.சற்று நேரத்தில் அங்கிருந்து புறப்படுகிறார்கள். என்னை விட்டுவிடு, பாலக்காடு போகும் பஸ்ஸில் விட்டு விடு என்று கேட்கிறார். அதற்குள் தனது கெஸ்ட் ஹவுஸில் இருந்து தங்கிவிட்டு ஜாலியாக இருந்து விட்டுச் செல்லலாம் என்று விவேக் பிரசன்னா கூறுகிறார்.அதன்படி அங்கே செல்கிறார்கள் இப்படிச் செல்கிற முற்பாதிப் படம் ஒரு பயண அனுபவமாக நம்மை மாற்றுகிறது.வடிவேலு -பகத் பாசிலுடன் அந்த யமஹா பைக்கும் ஒரு பாத்திரமாக வருகிறது.படத்தின் இரண்டாம் பாதி ஒரு திரில்லர் படமாக மாறுகிறது.அதன் பிறகு நடக்கும் திடுக் திடுக் திருப்பங்கள்,நெகிழ வைக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தை அடர்த்தி மிக்கதாக மாற்றுகின்றன.பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.அது வேறொரு படமாக மாறுகிறது. முதல் பாதியில் இரண்டாவது கியரில் சென்ற கதை, இரண்டாவது பாதியில் டாப் கியரில் வேகம் எடுக்கிறது. முடிவு என்ன  என்பதைச் சொல்வதே 154.17 நிமிடங்கள் கொண்ட ‘மாரீசன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

முதலில் வடிவேலு ,பகத் பாசில் என்ற கூட்டணியை யோசித்த இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்.ஏனென்றால் வடிவேலு உடல் மொழியாலேயே அசத்துபவர் என்றால்,பகத் பாசில் தன் கறுப்புக் கண்களாலேயே வண்ண வண்ணமாய் ஆயிரம் பாவனைகளைக் காட்டுபவர்.இந்த இருவரும் சேர்ந்து இருக்கும் அந்த சேர்மானம் படத்தில் ரசிகர்களுக்குப் புதுப்புது நடிப்பு வெளிப்படும் தருணங்களை அளித்து அனுபவங்களாக மாற்றுகிறது.

ஒருவரை ஒருவர் சந்தேகம் கொண்டே நம்பியும் நம்பாமல் செல்கிற அந்தப் பயணமே குணச்சித்திரங்களின் ஒரு சுவாரசியமான  முரண்பாட்டை நமக்கு காட்டுகிறது. அதில் இருவரும் சரியாக வெளிப்பட்டு உள்ளனர்.

வடிவேலுவை இதுவரை கைப்புள்ள காமெடிகளில் பார்த்திருக்கிறோம் .ஆனால் இதில் வேறு வகையான நடிப்பில் அவர் கலக்கியிருக்கிறார் என்றே கூற வேண்டும். அந்த வேலாயுதம் பிள்ளை கதாபாத்திரம் சரியாக அவருக்குப் பொருந்தியுள்ளது.முதல் பாதியில் அப்படி ஒரு வெள்ளந்தியாக ஞாபகம் மறதி பாத்திரத்தில் அச்சு அசலாக வெளிப்பட்டு இருப்பார். அவருக்கு ஞாபக மறதியா? பாவனை செய்கிறாரா? என்று பகத் பாசில் சந்தேகப்படும் போதெல்லாம் சரியாக அந்த மீட்டர் தவறாமல் நடித்துக் காட்டி இருப்பார் . .படத்தின் இரண்டாவது பாதியில் வேறு ஒரு பாத்திரமாக மாற்றிக் காட்டி  நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை நோக்கிப் பயணம் செய்கிறார்.இதே குணச்சித்திரப் பாதையில் அவர் பயணித்தால் மேலும் உயரங்களைத் தொடலாம்.

பகத் பாசில் ஒரு நடிப்பு ராட்சசன்தான்.வாய்ப்பு கிடைத்தால் விளாசிச் தள்ளி விடுவார். இதில் ஒரு திருடனாக வந்து படம் முழுக்க பேண்ட் சட்டை என்று ஒரே உடையில்  வந்து அசத்தியுள்ளார்.அவரது நடிப்பில் தான் எத்தனை சின்னச் சின்ன நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன.

பகத்பாசிலின் நண்பன் மோசடிகளின் மன்னனாக வரும் விவேக் பிரசன்னா கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்துள்ளார்.போலீஸ் அதிகாரிகளான கோவை சரளா, பி..எல். தேனப்பன் குழுவினர் குற்ற செயலை கண்டுபிடிக்கும் விசாரணையில் இறங்குகிறார்கள். போலீஸ் துறையின் நடவடிக்கை வேகத்தை’யும் காட்டுகிறார்கள்.மேலும் லிவிங்ஸ்டன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் என துணைப் பாத்திரங்களில் நடித்த
மற்றவர்களும் அந்தந்த பாத்திரத்தில் நடித்து படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி. படத்தின் பெரும் பகுதி இரவில் நடக்கிறது . ஒரு திருடனே முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் இந்தப் படத்தில் அந்த திருட்டு, இருட்டு, நிழல் என்கிற சேர்மானத்தை இயல்பாகக்காட்டித் திறம்பட ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்களைவிட பின்னணியில் பிரமாதப்படுத்தியுள்ளார். வழக்கமற்ற இசைக்கருவிகள் கொண்டு பின்னணியில் புதிய நிறம் காட்டியுள்ளார்.ரீமிக்ஸ் கலக்கலும் உண்டு.

படத்தின் வசனங்கள் நேர்த்தியாகவும் இயல்பாகவும் தத்துவார்த்தத்துடனும் உள்ளன.’பாம்பு தான் எலியை தேடிப் போகும். இப்ப ஒரு எலியே பாம்பைத் தேடி வருது’.’கடந்த கால மும் எதிர்காலமும் இல்லாம வாழறேன். நிகழ்காலத்தையே மறந்திடுவோமான்னு பயமா இருக்கு’ போன்றவை சின்ன சின்ன உதாரணங்கள்.

முதல் காட்சியில் வரும் பொறியில் சிக்கித் தப்பி ஓடுகிற அந்த எலி, கதை செல்லும் பாதையைக் குறியீடாகக் காட்டுகிறது என்று தோன்றுகிறது.

படத்தொகுப்பு செய்திருக்கும் ஸ்ரீஜித் சாரங் முதல் பாதியில் மித வேகத்திலும் இரண்டாவது பாதியில் அதிவேகத்திலும் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மொத்தத்தில் இந்தப் படம் கதாநாயகன் ,நாயகி ,வில்லன் என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டுகளில் இருந்து விலகி நடிகர்களின் நடிப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் கதை சொல்லும் அனுபவத்தைத் திரை அனுபவமாக மாற்றி உள்ளது. நிச்சயமாகப் படம் பார்க்க வருகின்ற ரசிகர்களைத் திருப்தி அளிக்கும் ஒரு படைப்பாக யமாரீசன்ய மாறி உள்ளது.