பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன் ,அப்பு குட்டி நடித்துள்ள படம்.கதை திரைக்கதை எழுதி சுசீந்திரன் தயாரித்துள்ள படம். இயக்கம் மனோஜ் பாரதிராஜா.இசை இளையராஜா, ஒளிப்பதிவு வாஞ்சிநாதன் முருகேசன்.
படம் ஆரம்பித்ததும் என் இனிய தமிழ் மக்களே என்று தனது படத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்யும் பாரதிராஜா, இதில் முதன் முதலில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் தன் மகனை அறிமுகப்படுத்திப் பரிந்துரைக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். கவிதாவுக்குப் பெற்றோர் இல்லை. தாத்தா ராமையா ஆதரவில் உள்ளார்.தன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு படித்து தன்னைவிட அதிக மதிப்பெண் எடுப்பதால் நாயகன் மீது நாயகி விதாவுக்குப்பொறாமையும் எரிச்சலும் வருகிறது . நாயகனோ காதலில் விழுகிறான்.ஒரு கட்டத்தில் நாயகிக்குத் தன்னை முதல் மார்க் எடுக்க விட்டுக்கொடுத்த நாயகன் மேல் ஈடுபாடு வருகிறது. பிறகு அது காதலாக மாறுகிறது.
வினோத் மீது தனக்குள்ள காதலை தாத்தாவிடம் தெரிவிக்கிறாள். முதலில் அதிர்ச்சி காட்டும் தாத்தா ராமையா, பேத்திக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்தின் பெற்றோரிடம் பேசி திருமணம் முடிக்க சம்மதிக்கிறார். இருப்பினும், அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் திருமணம் . அதுவரை இருவரும் சந்திக்கவோ பேசவோ கூடாது என்கிறார். கவிதா, தாத்தா விதித்த நிபந்தனைகள் ஒப்புக்கொள்கிறாள். பின்னர் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். படிப்பு முடித்துவிட்டு ஊர் திரும்பும்போது, வினோத்தையும் அவனது குடும்பத்தினரையும் எங்கும் காணவில்லை. இந்நிலையில் அவர்களது காதல் என்ன ஆகிறது ?படிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? என்பதே கதை.
அண்மைக் கால சாதிய ரீதியிலான ஆணவப் படுகொலைகள் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா. தனது முதல் படத்திற்கு வேறு மாதிரியான கதைக்களத்தை எடுத்திருக்கலாம். பல படங்களில் பார்த்துப் பார்த்து மிகவும் தேய்ந்து போன கதையைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான இந்த படத்தில் திருப்பமும், கதையும் கடைசி நேரத்தில் மட்டுமே இருக்கின்றன.
அதற்கு முந்தைய காட்சிகள் எல்லாம் செயற்கையாக அமைக்கப்பட்டது போல் உள்ளது. சுசீந்திரன் களத்தைத் தேர்வு செய்தவர் கதை மாந்தர்களின் உணர்வுகளை ஆழப்படுத்தாமல் விட்டு விட்டார்.
பொதுவாக இது மாதிரி காதல் கதை எடுக்கும்போது ஆணவக் கொலை என்று மிகையான வன்முறைக் காட்சிகளைச் சினிமாவில் காட்டுவார்கள் . இப்படத்தில் அது இல்லாதது பெரிய ஆறுதல்.
பள்ளி மாணவர்களைப் பற்றிய படத்தில் கலகலப்புக்கு நிறைய வாய்ப்பிருந்தும் அந்த இடத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.படம் முழுக்க காதலையே காட்டுகிறார்கள். இது பார்த்து அலுத்துப் போன உணர்வைத் வைத்திருக்கிறது.
கவிதாவாக நடித்திருக்கும் ரக்ஷனா காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். மாறாக வினோத்தாக வரும் ஷ்யாம் முட்டி மோதி தேறி விடுகிறார்.
பாரதி ராஜாவின் குரலில் வயதின் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும் பலவற்றையும் தோற்றத்திலேயே ஈடு செய்து தாத்தாவாக மாறி நன்றாக நடித்துள்ளார்.
இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். படத்தின் ஆரம்ப இசையிலே நம்மை 1990 களின் காலக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்.பாடல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் ஒரு இசை யாகத்தை நடத்தி உள்ளார் ராஜா.
தன்னை ஏற்றுக்கொண்டது போல மக்கள் தனது மகன் மனோஜை மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது பாரதி ராஜாவின் விருப்பம். மனோஜ் சிறந்த படங்களைத் தர வேண்டும். அறிமுக இயக்குநராக அவர் இதில் வெற்றி பெற்றிருந்தாலும் நல்ல கதையைத் தேர்வு செய்வதில் கவனம் பிசகி இருக்கிறார். வருங்காலத்தில் நல்ல கதைகளை இயக்கினால் அவர் சிறந்த இயக்குநராக வலம் வரலாம்.வாழ்த்துக்கள்!