கவின், ஆண்ட்ரியா ஜெர்மையா , ருஹாணி ஷர்மா , சார்லி ,ரமேஷ் திலக், கல்லூரி வினோத் ., அர்ச்சனா சந்தோக் ,ரெடின் கிங்ஸ்லீ, பவன்,ஆடுகளம் நரேன்,சுப்ரமணியம் சிவா,ரோகித் டெனிஸ்,
வெங்கட் பேட்டரி,மகாலட்சுமி நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக். இசை: ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: RD ராஜசேகர், படத்தொகுப்பு: R ராமர், கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன் ,பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி நடன அமைப்பு: அசார், விஜி சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி ,தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.தயாரிப்பாளர்கள்: ஆண்ட்ரியா ஜெர்மையா- எஸ்.பி.சொக்கலிங்கம்.
படத்தில் பிரதான காட்சியாக ஆரம்பத்தில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அவர்கள் பொருள்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா என்றால் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள்.அது ஓர் அரசியல்வாதியால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம்.
இக்கொள்ளையை மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளை அடித்து இந்தக் கைவரிசையில் ஈடுபடுகிறார்கள்.இந்தப் பணம் அரசியல் வாதி பவனுக்குச் சொந்தமானது. அவை மக்களிடம் விநியோகிப்பதற்கு ஏதுவாக பல்வேறு பார்சல்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்பாடு .இதைக் கண்டுபிடிக்க தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார். பல சமூக சேவைகள் என்கிற பெயரை சமூக விரோத செயல்களையும் செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள்.ஒருவரை ஒருவர் விழுங்கவும் காத்திருக்கிறார்கள்.இவர்கள் நோக்கம் என்ன? பணம் கிடைத்ததா? அரசியல் வாதி என்ன செய்தார் என்று சொல்கிறது’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதையை தொடங்குதல், வளர்த்தல், பிறகு உச்சத்தை நோக்கி கதை செல்லுதல் என்கிற பாணியில் இருந்து விலகி மாறுபட்டு எடுத்தவுடன் திடுதிப்பென வங்கிக் கொள்ளையிலிருந்து படம் தொடங்கி பரபரப்பை தொடங்கி வைக்கிறது.வெற்றிமாறன் வழிகாட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தில் வரும் டார்க் ஹியூமர் அப்படி நம்ப வைக்கிறது.
படத்தின் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பு கடைசி வரை குறையவே இல்லை. படத்தில் கதாபாத்திரங்கள் சித்தரிப்புகளும் நன்று.பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்து கொண்டு சமூக சேவகி என்ற போர்வையில் ஆண்ட்ரியாவின் இன்னொரு முகம் தெரியவரும் காட்சி, நடுத்தர வர்க்கத்து முகத்தை அணிந்து கொண்டு அமைதியானவராக வரும் சார்லி, வேறொரு மனிதராக முகம் காட்டுவது திருப்பமான காட்சிகள். ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ,இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இருவரும் படத்தின் உள்ளாதிக்கம் செலுத்தும் கதாநாயகன்கள் போல் தங்கள் பங்களிப்பை ஆற்றி உள்ளார்கள் என்று சொல்லலாம்.ராஜசேகரின் ஒளிப்பதிவில் ஒளி அமைப்புகளும் கோணங்களும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.ஜி.வி இசையில் ‘கண்ணுமுழி’ பாடல் மீண்டும் கேட்கத் தோன்றும் கமர்சியல் மெட்டு.’இதுதான் எங்கள் உலகம்’ ரீமிக்ஸ் ரீங்காரமிடுகிறது.
எம் ஆர் ராதாவின் முகமூடியும் அவரது குரலும் இன்றும் ரசிக்க வைக்கிறது.சுறுசுறுப்பாக இயங்கி தனது சாகசத்தைக் காட்ட நினைக்கும் கவின், அமைதியாக இருந்து எரிமலை போல் வெடிக்கும் ஆண்ட்ரியா இருவரும் தங்கள் பாத்திர வெளிப்பாடுகளில் போட்டி போட்டுக் கொண்டு நிரூபித்துள்ளனர். இந்த இரு பாத்திரங்களின் வெளிப்பாடுகள் இந்தப் படத்தில் பெரிய பலமாக அமைந்துள்ளன.
படத்தில் ஆங்காங்கே தெறித்து விழும் வசனங்களும் சமகாலத்தைப் பேசுபவை.குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய பொது மனதில் உள்ள இளக்காரமான சிந்தனைகளையும் அவர்கள் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதையும் வசனங்களில் வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர்.
ஒரு வித்தியாசமான கலகலப்பான திரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில் நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் பங்குபெற்று இருக்கிறார்கள். மொத்தத்தில் ஜாலியான பொழுதுபோக்கு நோக்கில் உருவாகி இருக்கும் திரில்லர் படம் என்று இதைக் கூறலாம்.


