தனது புதிய படமான ’சவரக்கத்தி’யில் ’பார்பர் கீதம்’ எனும் பாடலை எழுதி, பாடி வெளியிடுகிறார் மிஷ்கின்.
தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது தினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எம் ஜி ஆர் நடித்த படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், விவசாயி படத்தில் வரும் கடவுள் எனும் முதலாளி, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன், அண்ணாமலை படத்தின் வந்தேன்டா பால்காரன் போன்றவை இதன் புகழ்பெற்ற உதாரணங்கள். வெளிவரப்போகும் சவரக்கத்தி திரைப்படம் இவ்வரிசையில் இணைகிறது.
முடிதிருத்தலை தொழிலாகக்கொண்ட பார்பர் சகோதரர்களைப் பற்றிய ’பார்பர் கீதம்’ இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழியாக மிஷ்கின் எழுதி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் இப்படத்தை அவரது இளைய சகோதரரும் மாணவனுமான ஜி ஆர் ஆதித்யா இயக்குகிறார். சவரக்கத்தி படத்தின் பார்பர் கீதம் ஆகத்து 4, 2016 அன்று வெளியிடப்படுகிறது.
’தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா’ என்று தொடங்கும் பாடலை ஆரோல் கொரேலியின் இசையில் மிஷ்கின் எழுதி பாடியிருக்கிறார்.
“தமது சவரக்கத்தியை பயன்படுத்தி நமக்கு தோற்றப் பொலிவை தருவதற்காக உழைக்கும் பார்பர் சகோதரர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சவரக்கத்தியைப்போல் கூர்மையான பல கத்திகளை மனிதன் மனிதனுக்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்துகிறான். ஆனால் சவரக்கத்தியோ மனிதனுக்கு அழகை தருகிறது. யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆகத்து நான்கு அன்றைக்கு இப்பாடல் வெளியாகும். எண்ணற்ற சாதாரண மக்களுடன் தமிழின் பல பிரபலங்களும் இப்பாடல் காணொளியில் தோன்றுகிறார்கள். இந்திய வரலாற்றில் பார்பர் சகோதர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படும் முதல் பாடலை உருவாக்கி வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பூரிப்புடன் சொல்கிறார் சவரக்கத்தியின் இயக்குநர் ஜி ஆர் ஆதித்யா.