வாழ்க்கையில் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. அப்படி தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக் கொண்ட கதைதான் ‘மூணே மூணு வார்த்தை’.இயக்குநர் மதுமிதா இயக்கும் இப்படத்தை கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கிறார்.
“பெரியதாக சாதிக்க என்னும் இரு இளைஞர்கள், அவர்கள் எடுத்து வைக்கும் முதல்படி அதை தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இளைஞர்களைக் கவரும் வகையில் காமெடியோடு சொல்லியிருக்கோம். இப்படத்தில் எதையும் பெரிதாக நினைக்காத, சோம்பேறித்தனத்தின் உருவாக அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’ புகழ் வெங்கி,அதிதி என இளமை பட்டாளத்துடன் எஸ்.பி..பாலசுப்ரமணியம் சார், லக்ஷ்மி மேடம் நடிக்கிறார்கள்.எஸ்.பி.பி சார், லக்ஷ்மி மேடம் தமிழில் இணையும் முதல் படம் இது. சுருக்கமா மூன்று வார்த்தைல சொல்லனும்னா “படம் உங்களை மகிழ்விக்கும்”.என்கிறார் மதுமிதா.
“ படத்தில் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் அறிமுகமே. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கியது மிகவும் புதுமையான அனுபவமாய் இருந்தது.
மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது என்பது நான் அறிந்த உண்மை. இதையே நான் தலைப்பாக வைத்திருக்கிறேன்”
“சமீபமாக, கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் படத்தின் மூலம் அவர்கள் தங்களது மூணே மூணு வார்த்தை அனுபவத்தை வீடியோ பதிவாக அனுப்பினால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம். இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்து தரவும் தயாராக உள்ளோம் 2015 ஆண்டின் துவக்கத்தில் நாங்கள் உவகையோடு உச்சரிக்கும் மூன்றெழுத்து வார்த்தை ‘Happy New year’” என்கிறார் இயக்குநர் மதுமிதா.