பொதுவாக நினைவுகள் என்றால் கடந்த காலத்தில் நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுகள் பகிரப்படும்.மலரும் நினைவுகளாக பிற்காலத்தில் அது பற்றிப் பேசி மகிழ்ச்சியடைவது என்று இருக்கும். ஆனால் இந்த ‘மெமரீஸ்’ திரைப்படம் , சிலரது கடந்த காலக் கொடுமையான குரூரமான இருட்டான பக்கங்களைப் புரட்டி காட்டுகிறது.
அலைபேசியில் சிம் கார்டில் எந்தத் தகவலையும் நீக்க முடியும் எந்தத் தகவலையும் புதிதாகச் சேர்க்க முடியும். இந்த அடிப்படையில் மனித மூளைக்குள்ளும் ஏற்கெனவே இருக்கும் தகவல்களை நினைவுகளை அனுபவங்களை அழித்துவிட்டு புதிதாக நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்ய முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகி இருக்கிறது.
ஒருவன் தான் செய்த தவறை மறைப்பதற்கும், தான் செய்த குற்றங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் ஏதும் அறியாத இன்னொருவன் மூளையில் தனது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிவு செய்கிறான். இதனால் குற்றங்கள் சம்பந்தப்படாதவன் தண்டனை அனுபவிக்கிறான். இதில் உண்மைக் குற்றவாளி யார்? அவன் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டானா? தண்டனை பெற்றானா? என்பது தான் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார். அவர் வழக்கமான நாலு பாட்டு நாலு பாடல் என்ற ஃபார்முலாவில் இல்லாத ஒரு நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர். அதே பாணியில் தான் இந்தப் படத்திலும் நடித்துள்ளார் .
அப்பாவியாக, குரூரக் குணம் கொண்டவராக, போலீஸ் அதிகாரியாக, மருத்துவ ஆட்சி செய்பவராக இப்படி பல தோற்றங்களிலும் குணச்சித்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு பெற்று , அதைச் சரியாகவும் பயன்படுத்தி உள்ளார்.
படம் முழுக்க அவர் இந்த வகை வித்தியாசமான நடிப்பில் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதே நேரம் இப்படத்தில் நடித்துள்ள ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர் என் ஆர் மனோகர், சஜில், டயானா ,பார்வதி போன்ற பிற நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுத்த நடிப்பு வாய்ப்பை சரியாகச் செய்துள்ளார்கள்.
ஷிஜு தமீன்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கதை எழுதி இயக்கி உள்ளனர் ஷியாம்_ பிரவீன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது போன்று தனது நினைவுகளை மீட்க போராடும் ஒருவரின் கதையாக தொடங்குகிற இந்தப் படத்தில், முதல் பாதியில் எடை குறைந்ததாகவும் உள்ளதுஇரண்டாம் பாதியில் மிகவும் அடர்த்தி மிக்கதாகவும் உணர வைக்கிறார்கள்.
படத்திற்கு அர்மோ, கிரன் நுபிடால் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.ஒரு திரில்லர் படத்திற்கான தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.இசை அமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் தனது நேர்த்தியான பின்னணி இசை மூலம் படத்திற்கு வேறொரு பரிமாணத்தைக் காட்டியுள்ளார் .அதேபோல் எடிட்டர் சான் லொகேஷும் குறை இல்லாத பணியைச் செய்துள்ளார்.
படத்தில் இரண்டாம் பாதியில் வரும் திடீர் திருப்பங்கள் சாமானிய ரசிகர்களை சற்றே குழப்ப வைக்கும். இறுதியில் தான் தெளிவு கிடைக்கும்.
மெமரீஸ் வித்தியாசமான திரில்லர் பட அனுபவம் என்பதில் சந்தேகம் இல்லை.