‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம் 

கிஷோர், சுபத்ரா ,ஜார்ஜ் மரியான் ,ஹரிஷ் உத்தமன்,ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா வர்ஷினி நடித்துள்ளனர் .எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திரவ். ஒளிப்பதிவு தேவராஜ் புகழேந்தி, இசை சங்கர் ரங்கராஜன்..
கிஷோர் ஒரு உடற்கல்வி ஆசிரியராகத் தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்.நல்ல வீடு மனைவி மக்கள் என்று அழகான குடும்பம், சிக்கலற்ற வாழ்க்கை என்று பயணிக்கிறார். இருந்தாலும் ,அவருக்கு இசையின் மீது ஆர்வம் உண்டு. ஒரு பாடகராக வேண்டும் என்பது அவரது கனவு. எனவே அவருக்குள் ஒரு ஏக்கமும் கவலையும் இருந்து கொண்டே இருக்கிறது. அதன்படி தனியாக டிவியில் பாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார் .அடுத்தடுத்த நிலைக்கு மேலே செல்கிறார்.இது அந்த பள்ளியின் முதல்வருக்குப் பிடிக்கவில்லை கிஷோரை வேலையை விட்டு நீக்குகிறார். ஆனாலும் அவருக்கு மனைவி மகன் மகள் நண்பர்கள் என்று அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் கிஷோர் வென்றாரா?அவரது கனவை அடைந்தாரா? அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பதை பாசம் நேசம் அன்பு நட்பு என்று நேர்நிலை எண்ணங்கள் கலந்து உணர்வு பூர்வமாகச் சொல்லும் படம் தான் ‘மெல்லிசை’ .
தேர்ந்த நடிகராக இருக்கும் கிஷோர் பல படங்களில் எதிர்மறை முகம் காட்டியவர். இதில் நேர்நிலை நாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் ராஜன் என்கிற அந்தக் கதாபாத்திரமாகவே  தோன்றி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .அவர் குடும்பத்தினர் மீது காட்டும் பாசம், நண்பர்களிடம் உள்ள உறவு பள்ளியில் நிராகரிப்பையும் அவமானங்களையும்  சந்திக்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என ப பல இடங்களில் அவர் தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வேலை இழப்பு அனைத்தையும் தாங்கி போட்டியில் பங்கேற்பது குடும்பத்தினருடன் பழகுவது குடும்பத்தினருக்காக அவர் செய்கிற வேலைகள் மனைவியிடம் செல்லமாய் காதல் என்று அவர் அந்த மிடில் கிளாஸ் குடும்பத் தலைவராகவே வாழ்ந்திருக்கிறார்.
சுபத்ரா இக்கதையில் கிஷோரின் மனைவியாக வருகிறார். ஆசிரியை கதாபாத்திரத்தில் வருபவர்,குடும்பத்தின் சுமூகத்திற்காக அனுசரித்துப்  போகும் ஒரு மனைவியாக வந்து, அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். கணவருக்காக அவர் பேசுவது வீட்டில் அவர் நடந்து கொள்வது போன்றவை எதார்த்தமாக மனதில் நிற்கின்றன. கிஷோரின் மகனாக ஜஸ்வந்த் மகளாக தனன்யா நடித்துள்ளனர். அவர்களது நடிப்பில் எதார்த்தம் வெளிப்பட்டுள்ளது. அந்த பிரின்ஸ்பால் பார்ப்பவர்களிடம் வசவுகளைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு அந்த பாத்திரமாகவே மாறி உள்ளார் . வில்லனாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார்.அந்த வீடு சம்பந்தப்பட்ட உச்சகட்ட காட்சி பார்ப்பவர்கள் அனைவருக்கும் தங்களது வீட்டு நினைவுகளை கிளறக் கூடியதாக இருக்கும்.
  
ஓர் இயல்பான கதையை எடுத்துக்கொண்டு எதார்த்தமான நடிப்புக் கலைஞர்களைப் பயன்படுத்தி குடும்பம், பள்ளி பகுதிகளை உயிரோட்டமாக எடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் அரசியலை பள்ளியின் பின்னணியில் காட்டியிருக்கிறார்.
முன் கதையாகச் சொல்லும் கதையை நேரடியாகத் தொடர்ச்சியாகக் காட்டி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.பாட்டுப் போட்டியில் மேலும் சுவாரஸ்யங்களைக் காட்டி இருக்கலாம்.
படத்தில் ஒலிக்கும் பல பாடல்கள் சற்று மாற்றப்பட்டு வருகின்றன, காப்புரிமை பிரச்சினைக்காக அப்படி மாற்றி இருக்கிறார்கள்.
ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்ற எந்த செயற்கை சந்தோஷங்களும் படத்தில் இல்லாமல் எதார்த்தத்தைக் காட்டும் வகையில் காட்சிகள் உள்ளன.
பலகோடி ரூபாய் செலவிட்டு விட்டு போதை, பழிவாங்கல், வெட்டு ,குத்து என்று வரும் கதைகள் மத்தியில் மெல்லுணவுர்களைக் கூறும் இந்தப் படம் ஒரு தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
‘மெல்லிசை’ பார்ப்பவர்களைத் தாலாட்டும்.