‘மைக்கேல்’ விமர்சனம்

தமிழில் இதற்கு முன்னதாக `புரியாத புதிர்` மற்றும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்` ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. கரண் சி புரடெக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன.

`மாநகரம்` திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நடிகர் சந்தீப் கிஷான் தற்போது ஆக்‌ஷன் கதாநாயகனாக மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார்.

தந்தையைப் பழிவாங்கத் துடிக்கும் மகன் என்கிற அந்தமான் காதலி காலத்தின் கதை போன்றுதான் படம் தொடங்குகிறது பிறகு தான் ஆக்சன் பாதைக்கு மாறுகிறது.

தனது தாய்க்குத் துரோகம் செய்த தனது தந்தையைத் தேடி 13 வயதில் மும்பைக்கு வருகிறான் மைக்கேல் . மைக்கேல் , தாயை நம்பவைத்து ஏமாற்றியதற்காகத் தந்தையைக் கொன்று விடத் துடித்துத் தேடிக் கொண்டிருக்கிறான்.மனதில் வெறியோடும் கையில் கத்தியோடும் வரும் அவனுக்கு மும்பை டான் குருநாத்தின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த தாதாவைக் கொலை செய்ய வரும் ஒருவனிடமிருந்து மைக்கேல் அவரைக் காப்பாற்றுகிறான்.உடன் இருந்து வளர்கிறான்.பிறகு டானின் ஜோதியில் ஐக்கிய மாகிறான். வரும் கொலை முயற்சிகளில் இருந்து எல்லாம் எதிர்த்து அவரைக் காப்பாற்றுகிறான். டானின் நம்பிக்கைக்குரிய அடியாட்களில் ஒருவனாக மாறும் மைக்கேல்,கையில் மும்பையின் குறிப்பிட்ட பகுதி வருகிறது.தன்னைக் கொலை செய்ய முயன்ற ஆறு பேரில் 5 பேரை பிடித்து விடுகிற டான்,
மிஞ்சி இருக்கும் அந்த 6வது நபரையும், அவருடைய மகளையும் கொன்று விட்டு வரும்படி மைக்கேலிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
எதிரியைத் தேடி டெல்லி வரும் மைக்கேல் அந்த ஆறாவது நபரின் மகள் மீது காதல் கொள்கிறான்.அதனால் அந்தப் பெண்ணையும், பெண்ணின் தந்தையையும் கொல்லாமல் விட்டுவிடுகிறான்.
சொன்னதைச் செய்யாத மைக்கேலையும், அந்தப் பெண்ணையும், பெண்ணின் தந்தையையும் அடியாட்கள் வைத்துத் தூக்குகிறான் டானின் மகன்.
மைக்கேலைத் துப்பாக்கியால் சுட்டு, தண்ணீரில் தூக்கி எறிகிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்ட மைக்கேல் நிலை என்ன? கதாநாயகிக்கு என்ன ஆனது?மும்பைக்கு மைக்கேல் வந்த காரணம் இறுதியில் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

மைக்கேல் பாத்திரத்தில் டைட்டில் ரோல் ஏற்றுக் கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷன் படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும்அவரது உழைப்பு வெளிப்பட்டுள்ளது.இதற்காக அவரைப் பாராட்டலாம்.

கதாநாயகி திவ்யன்ஷா கௌஷிக் நடிப்பு வெளிப்பாட்டில் குறை வைக்கவில்லை.
மும்பை வில்லனாக வரும் கவுதம் மேனன் பட்டையைக் கிளப்புகிறார். ஆமாம் எத்தனை படத்தில்தான் அவரைத் தாதாவாகவே காட்டுவார்கள்? கௌரவ வேடத்தில் வரும் விஜய் சேதுபதி கதைக்குப் பலமாக நின்று உதவியுள்ளார்.அதே போல் வரலக்ஷ்மி சரத்குமார் தன் பாத்திரமறிந்து சோபித்துள்ளார். அய்யப்பா பி. ஷர்மா மற்றும் அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்துக்கொண்ட காதல் கலந்த ஆக்ஷன் கதைக்களம் ஓகே. ஆனாலும் அதனை அமைத்த விதத்தில் சற்று சறுக்கியுள்ளார்.மேலும் சுவாரஸ்யங்களைக் கூட்டி திரைக்கதையில் வேகம் காட்டியிருக்கலாம்.

அளவுக்கு அதிகமான வன்முறைகள், சண்டைகள் சோர்வூட்டுகின்றன. முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது ஓர் ஆறுதல்.

படத்திற்கு ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். கதைக்கு ஏற்ற நிறங்களையும், படம் நடக்கும் காலத்தையும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.  சாம் சி.எஸ். பாடல்களில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்லதொரு ஆக்ஷன் ட்ரீட் ஆக அமைந்து பிடிக்கும் எனலாம்.