‘மைலாஞ்சி’ திரைப்பட விமர்சனம்

ஸ்ரீராம் கார்த்திக் , கிரிஷா குரூப், முனீஷ்காந்த், செந்தி,சிங்கம் புலி நடித்துள்ளனர்.

அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.பாடல்கள் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செழியன். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் . கலை இயக்கம் லால்குடி இளையராஜா. டாக்டர் அர்ஜுன் தயாரித்துள்ளார்.

ஒரு மலைப் பிரதேசத்தில் ‘மைலாஞ்சி’ என்கிற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிற ,அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கிரிஷா குரூப்.சித்தியின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.
கிரிஷாவுக்கு குடிகாரனான தன் தம்பியைக் கட்டி வைத்தால் சொத்துக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறார் சித்தி. கிரிஷா ,பிடிக்காத அந்த திருமணத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறார். எனவே தன் வீட்டில் குடி இருந்த ஒருவர் மீது அன்பு கொண்டு அவரை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்.அவரோ சென்னை சென்று விட்டார் இந்நிலையில் அங்கே பறவைகள் படம் எடுக்க வந்த ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா இருவரும் ஆறுமுகம் ஆகிறார்கள். ஸ்ரீராம் , கிரிஷா மீது காதல் கொள்கிறார்.நண்பராக எண்ணி ஸ்ரீராமிடம் சென்னைக்குச் சென்ற தன் காதலனிடம் சேர்த்து வைக்கும்படி கிரிஷா கூறுகிறார். தன் காதலை மறைத்துக் கொண்டு இவர் அதற்கு உதவுவது போல் நடிக்கிறார். மின்னஞ்சலில் காதலனுடன் தொடர்பு கொள்வது போல் பாசாங்கு செய்கிறார். வருவேன் வருவேன் என்று காதலன் சொல்வதாக இவர் கூற ரயில்வே நிலையத்தில் காத்திருக்கிறார்கள். வரவில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் நெருங்குகிறார்கள் .அந்த நேரத்தில் பழைய காதலன் தேடி வருகிறார். முடிவு என்ன என்பதுதான்  ‘மைலாஞ்சி’  படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான தோற்றம் நடிப்பு என்று வருகிறார். அவர் ஏற்றுள்ள சூர்யா பாத்திரம் ரசிகர்களை ஈர்க்கும்படி உள்ளது.

துறுதுறு கண்கள் தோற்றம் என்று சாரு பாத்திரத்தில் வரும் கிரிஷா குரூப் தனது தோற்றம் நடிப்பு என்று பார்ப்பவர் மனதில் அமர்ந்து கொள்கிறார் .

ஸ்ரீராம் கார்த்திக்கின் மாமாவாக டிரைவராக எத்திராஜ் பாத்திரத்தில் வரும் முனின்காந்த் வழக்கம் போல தனது பாணியில் நடித்துள்ளார்.

நாயகனின் அம்மாவாக செந்தி வருகிறார்.நாயகியின் சித்தியாக இருப்பவரும் அடையாளம் தருகிறார். ஆர்வக்கோளாறு பறவை ஆராய்ச்சியாளர் குலாம் நபி பாத்திரத்தில் வரும் சிங்கம் புலி வழக்கம் போல வந்து கிச்சு கிச்சு முட்டுகிறார்.குடிகார மாமாவாக வரும் கலையரசன் கண்ணுச்சாமி தன் இருப்பை உணர்த்துகிறார். ஜூடு பாத்திரத்தில் வரும் சிறுவன் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கலகலப்பு.

மலையும் மலை சார்ந்த இடங்களிலும் இந்த எளிய கதை பயணம் செய்வதால் ஒவ்வொரு காட்சியும் போட்டோ பிரேமில் கண்களை ஒற்றிக்கொள்வது போல் அழகாகப் படம் பிடித்து தனது கேமரா மூலம் அழகோவியம் வரைந்து உள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன்.
சிலவினாடி காட்சியைக் கூட கண்களை விட்டகலாமல் ஒளிவண்ணம் காட்டி உள்ளார்.
காட்சிகளுக்குத் தனது எளிமையான இசையின் மூலமும் பாடல்கள் மூலமும் செழுமை செய்து ஒரு படி மேலே உயர்த்தி உள்ளார் இளையராஜா.இருந்தாலும் அந்த எளிமையான கதையின் திரைக்கதையில் ஒரு போதாமை உணர முடிகிறது.

படத்தின் கதை பெரும்பாலும் ஸ்ரீராம் கார்த்திக் – கிரிஷா என்ற இரு பாத்திரங்களைச் சுற்றியே நகர்கிறது .அவர்கள் அடிக்கடி மலை வாழிடங்களில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் .

ஸ்ரீராம் அரியதொரு பறவையைப் படம் எடுக்க வந்திருப்பதாக கூறுகிறார்.ஆனால் அது பற்றிப் பெரிதாக அவர் முயற்சி செய்யவே இல்லை .காதலியை மட்டுமே வலம் வருகிறார்.
படத்தின் பெரும் பகுதியாக மலையின் அழகையும் இயற்கை எழிலையும் காட்டுகிறார்கள். காதை மூடிக்கொண்டால் கூட காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

எளிமையான காதல் கதையை அழகான ஒளிப்பதிவு இனிமையான இசை கொண்டு உருவான படமாக ‘மைலாஞ்சி’  இருக்கிறது.