’யசோதா’ பற்றி சமந்தா!

கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் மூத்த தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் மூவிஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். ‘மெலோடி பிரம்மா’ மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார்.

வணக்கம் சமந்தா, உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?


உடல்நிலை பற்றி விசாரித்ததற்கு நன்றி! நன்றாக தேறி வருகிறேன். சீக்கிரமாக பரிபூரணமாக குணமடைந்து விடுவேன். ‘யசோதா’ படம் வெளியாவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

‘யசோதா’ படத்தின் டீசர் , ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்புக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


மகிழ்ச்சியாக இருக்கும் அதேசமயம் சிறிது படபடப்பும் இருக்கிறது. நீங்கள் ட்ரைலர் , டீசரில் பார்த்துள்ள காட்சிகளைத் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக படம் இருக்கும். ட்ரைலர் போலவே, படத்திற்கும் பார்வையாளர்கள் தரும் அன்பிற்காகக் காத்திருக்கிறேன்.

’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்? எந்த ஒரு விஷயம் இந்தப் படத்தை நீங்கள் விரும்ப வைத்தது?


’யசோதா’ போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக்கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி & ஹரிஷ் இருவரும் புதிய ஒரு கான்செப்ட்டோடு வந்திருக்கிறார்கள்.

புராண கால யசோதாவில் இருந்து இந்த ‘யசோதா’ எந்த அளவுக்கு வேறுபடுகிறார்?


இரண்டு பேரும் அம்மா, பெண் என்பதைத் தாண்டி இரண்டு பேரும் நிறைய பேரை காப்பாற்றுவார்கள். கிருஷ்ணரை வளர்த்தத் யசோதா தாய்தான். இந்தப் படம் பார்த்ததும் நான் சொல்வதை அனைவரும் நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள்.

வாடகைத்தாய் விஷயம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?


அதுபற்றி ஒரு வலுவான கருத்து எனக்கு கிடையாது. நான் புரிந்து வைத்துள்ள வரைக்கும் பெற்றோர் ஆக விரும்பும் அளவுக்கு அது ஒரு தீர்வு, நம்பிக்கை.

ட்ரைய்லர் பார்த்த போது வாடகைத்தாய் முறை பற்றி மட்டும் இல்லாமல், அதில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. அது பற்றி சொல்லுங்கள்?


நான் இப்போது படம் குறித்து எதாவது தெரியப்படுத்தினால் அது படம் பார்க்கும் மொத்த அனுபவத்தையும் கெடுத்து விடும். இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை இது எல்லாமே நீங்கள் பெரியத் திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.

பல வித்தியாசமான ஜானர்களில் நடித்துள்ளீர்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் எந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்திருக்கிறது?


ஒரு படம் முடித்து விட்டு அடுத்த கதை கேட்கும்போது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ‘யசோதா’வுக்கு முன்பு நான் செய்த ‘யூ-டர்ன்’ ஒரு த்ரில்லர் கதைதான். ஆக்‌ஷன் பொருத்த வரைக்கும், ‘ஃபேமிலி மேன்’ கதையில் நான் செய்த ராஜீதான் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஆக்‌ஷன் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.

‘யசோதா’ ஆக்‌ஷன் காட்சிகளுக்காக என்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்தீர்கள். இதற்கு முன்பும் நீங்கள் ஆக்‌ஷன் செய்திருந்தாலும் இந்த அளவிற்குத் தீவிரமாக செய்யவில்லை இல்லையா?


நானும் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் இருவரும் ‘தி ஃபேமிலிமேன்’ இணையத்தொடருக்காக இணைந்து வேலை செய்தோம். பாக்ஸிங், கிக் பாக்ஸிங் இதெல்லாம் அந்த கதாபாத்திரத்திற்காகக் கற்றுக் கொண்டேன். ஆக்‌ஷன் காட்சிகள் நடிப்பதற்கு நிறைய பொறுமையும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ’யசோதா’ படத்தில் நான் கர்ப்பிணியாக, ஒரு சாதரணமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆக்‌ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யானிக் மற்றும் வெங்கட் இருவரும் முடிந்த அளவிற்கு சண்டைக் காட்சிகளை இயல்பாக இருக்கும்படி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கேற்றபடி பயிற்சி எடுத்து நன்றாகவே செய்திருக்கிறேன்.

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் என படத்தில் இவர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


இவர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தது உண்மையில் நல்லதொரு அனுபவம். இது போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

ட்ரைய்லர் காட்சிகளைப் பார்க்கும்போது அதன் காட்சியமைப்புகள், தயாரிப்பு வேலைகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் சிவலெங்காவின் உள்ளீடுகள் பற்றி சொல்லுங்கள்?


நிச்சயமாக! இந்தக் கதைக்காக நிறைய ஹோட்டல்கள், மருத்துவமனைகள் எல்லாமே பார்த்தோம். ஆனால், சில நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக எல்லாமே செட் அமைத்து விட்டோம். படம் பிரம்மாண்டமாக வெளிவர வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.

பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்ற திட்டம் ஆரம்பத்திலேயே இருந்ததா அல்லது படம் ஆரம்பித்ததும் இந்த முடிவா?


இந்தக் கதை வலுவான உணர்வுகளைக் கொண்டுள்ளது மற்றும் பார்வையாளர்களையும் இது கட்டிப் போடும் விதமாக அமையும். இதை கதையின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் பார்த்தோம். அதன் பிறகு படம் ஆரம்பித்ததும் அதன் மீது எங்களுக்கு நம்பிக்கை அதிகம் ஆனது. அதன் பிறகு நாங்கள் ஐந்து மொழிகளிலும் வெளியிட முடிவெடுத்தோம். ‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக் கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் – இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளில் இருந்து வரும் பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸ் அனைத்தையும் கவனித்து வருகிறீர்களா?


ஆமாம்! உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மொழிகள் கடந்து இந்தப் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி தனிப்பட்ட ரசனை இருக்கிறது. மொழிகள் கடந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பலரிடமும் எடுத்து சென்ற என்னுடைய சக நண்பர்களான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர், ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் வருண் ஆகியோருக்கு நன்றி.

நீங்கள் இந்தப் படத்தின் டப்பிங்கை ட்ரிப் ஏற்றிக் கொண்டே செய்தீர்கள். எது உங்களை அப்படி செய்ய உந்தியது. வேறு ஒருவரை வைத்துக் கூட நீங்கள் டப் செய்திருக்கலாமே?


நானே இந்தப் படத்திற்கு டப் செய்ய வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும் போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப் செய்ததில் மகிழ்ச்சிதான்.

‘யசோதா’ தவிர்த்து வேறு யாருடைய கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?


வரலக்‌ஷ்மி சரத்குமாரின் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் எழுதிய விதமே எனக்கு பிடித்திருந்தது. இதற்கு மேல் நான் எதுவும் சொன்னால் அது ஸ்பாய்லர் ஆகிவிடும். அதை ஏன் நான் சொல்கிறேன் என படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.

உங்கள் உடல்நிலை பற்றி உங்களது ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


என் மீது நீங்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள்.