யாரோ தன்னைப் பின் தொடர்வது போலவும் யாரோ தன்னை உற்றுக் கவனிப்பது போலவும் தன்னைக் கண்காணிப்பது போலவும் பயந்து நடுங்குகிறான் கதாநாயகன்.
தான் விபத்தை சந்திப்பதைப் போலவும் தன்னை யாரோ கொலை செய்ய வருவதைப் போலவும் கனவு வருகிறது. நடுங்கிக் கொண்டிருக்கிறான் நாயகன்.இப்படித்தான் தொடங்குகிறது படம்.
போகப்போக ஒரு சீரியல் கொலைகாரன் கதையாக மாறுகிறது .அந்த சீரியல் கொலைகாரன்தான், அந்த பயந்த சுபாவம்கொண்டவன் என்று மாறுவது திருப்பம்.
அவனுக்குச் சிறு வயதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவன் மாறுகிறான் என்று செல்கிறது கதை .
மிகச் சில பாத்திரங்களை வைத்துக்கொண்டு மிகக் குறைந்த அளவிலான லொகேஷனில் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் சாய்.
இப் படத்தின் நாயகன் வெங்கட் ரெட்டி படத்தின் பெரும்பகுதியில் வருகிறார்.அந்தப் பாத்திரத்தைச் சுற்றிக் கதை நகர்வதால் மொத்த எடையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
கனவு கண்டு பயந்து நடுங்கும் பாத்திரமாக இருக்கும் அதே நபர் மற்றவர்களை துணிந்து கொலை செய்யும் போது வேறுவிதமான முகம் காட்டுகிறார்.
நாயகி உபாசனா வழக்கம்போல தமிழ் நாயகியாக வந்து நாடகத்தனமாக நடித்துள்ளார். துப்பறிய வரும் அந்தப் போலீஸ் அதிகாரியாக வருபவரும் அலட்டல் இல்லாமல் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
குறைந்தபட்ச பாத்திரங்களை வைத்துக்கொண்டு
விறுவிறுப்பு குறையாமல் ஓர் உளவியல்ரீதியான கதையை எடுத்துக் கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.பாடல்கள் நகைச்சுவைக் காட்சிகள் போன்ற வழக்கமானவை இல்லாமல் படம் எடுக்கத் துணிந்தததற்கு ஒரு சபாஷ்.
மர்மமும் திகிலும் இணைந்து பயணித்தாலும் கதை சொன்ன விதத்தில் இரண்டாவது பாதியில் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் காட்சிகளை அமைத்திருந்தால் பூடகங்களைக் குறைத்திருந்தால் இன்னும் தரம் கூடியிருக்கும்.
படத்திற்கான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அந்தக் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றன. மொத்தத்தில் யாரோ ஒரு சிறு புதிய முயற்சி.