பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன் ,சாய் பிரசன்னா, லீலா சாம்சன்,டெல்லி கணேஷ், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வர் , லோகி , அஜய் நடித்துள்ளனர் . ஹரி மகாதேவன் இயக்கியுள்ளார்.அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசை கிளிஃப்பி கிறிஸ் மற்றும் ஆனந்த் காசிநாத்.கோவை ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்துள்ளார்.
பணத்தைத் துரத்திக் கொண்டே ஓடும் காதலனுடன் இணைந்து பயணிக்க முடியாமல் பூர்ணிமா ரவிக்கு காதலில் முறிவு ஏற்படுகிறது . நாயகி பூர்ணிமாவின் தந்தை டெல்லி கணேஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.குடும்பம் தந்தை என்ற பாச உணர்ச்சியை விட்டுப் பணத்தை மட்டும் துரத்த முடியாது என்று நினைப்பதால் அந்தக் காதல் தோல்வியில் முடிகிறது.
காதலன் அடுத்த பெண்ணை நிச்சயித்து திருமண அழைப்பிதழும் கொடுக்கிறார்.
இதனால் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.இருந்தாலும் தந்தை டெல்லி கணேஷ் மகளுக்கு அறிவுரை கூறுகிறார்.தன்னைப் பற்றி கவலைப்படாதே என்றும், யாருக்கும் தெரியாமல் செய்யும் தவறுகள் மூலம் மறக்க முடியாத மகிழ்ச்சியை அடைய முடியும் .உனது மகிழ்ச்சியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள் என்றும் கூறுகிறார். ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருந்த பூர்ணிமா ரவி திடீரென வீட்டை விட்டுச் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகிறார். பழைய நினைவுகளைத் தேடிச் செல்லும் பயணமாக அது மாறுகிறது.தாங்கள் வாழ்ந்த ஊர் ,பழைய நண்பர்கள் என்று தேடிச் செல்கிறார்.அந்தப் பயணத்தில் சந்திக்கும் வைபவ் முருகேசன் வழித்துணையாக உடன் வருகிறார்.இணைந்து இருவரும் தேடுதலில் இறங்கி நினைவுகளில் கைவிடப்பட்ட மனிதர்களைத் தேடுகிறார்கள்; சந்திக்கிறார்கள்.அந்தப் பயணம் காலப்பயணமாகப் பரிணமித்து நல்லதொரு உணர்வுப் பயணமாகவும் மாறுகிறது .அவர்கள் தேடிச் செல்லும் அனைவரையும் சந்தித்தார்களா ?அந்தப் பயணம் அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன?அதன் முடிவு என்ன என்பதுதான் ‘யெல்லோ’ படத்தின் மீதிக் கதை.
யூடியூப் பிரபலமாக இருக்கும் பூர்ணிமா ரவி, ஏற்கெனவே சில படங்களில் முகம்காட்டி இருந்தாலும் இதில் கதைநாயகியாகக் கதையைச் சுமக்கும் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.நடுத்தர வர்க்கத்துத் தோற்றம் நடிப்பு உடல் மொழி என்று குறை சொல்ல ஒன்றும் இல்லை.அந்த ஆதிரை பாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார்.
பூர்ணிமா ரவி தற்செயலாகச் சந்திக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வந்து பயண வழித் தோழனாகப் பயணித்திருக்கும் வைபவ் முருகேசன்,தான் ஏற்றுக்கொண்ட சாய் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.சுமாரான தோற்றமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் பார்வையாளர்களைக் கவர்ந்து அழகாகி விடுகிறார்.
டெல்லி கணேஷ்,சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது அனுபவ நடிப்பை வெளிக்கொண்டு வந்து திரைக்கதைப் பயணத்தில் பிரதான பாத்திரத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தத் திரைப்படமே ஒரு பயண அனுபவத்தைத் தருகிறது என்றால், அதற்குப் பெரிதும் காரணியாக இருப்பது ஒளிப்பதிவு. கதை நகர்ந்து கேரளாவுக்குச் சென்ற போதே இயற்கைக் காட்சிகளின் குளுமையான தரிசனமும் நிலக்காட்சிகளின் விரிந்த அழகும் மன நிறைவு தருகின்றன.அந்தப் பின்புலமே உள்ளாதிக்கம் செலுத்தும் ஒரு கதாபாத்திரம் போல் வருகிறது.பாத்திரங்கள் நிறையவே பேசினாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு பின்புலக் காட்சிகள் ஈடு செய்கின்றன.அந்த வகையில் காட்சிகளை கண் முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பாராட்டுக்குரியவர்.
இசையமைப்பாளர் கிளிஃப்பி கிறிஸ் இசையில் பாடல்கள் இனிமை. செயற்கையான திருப்பங்கள் இல்லாத நீரோட்டம் போன்ற கதைக்கு ஏற்ற வகையில் ரீங்காரமாக ஒலிக்கிறது இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை.
இரண்டு கதாபாத்திரங்களின் பயணத்தைச் சலிப்பூட்டாத வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீவத்சன்.
வாழ்க்கையின் அடுத்த நொடியில் ஒளிந்து கொண்டிருக்கும் புதிரை அனுபவிப்பதே மனித வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்ற வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன்.பிரதான பாத்திரத்தின் தன்னைத்தேடும் பயணமாகவும் இக்கதை அமைந்துள்ளது.தொலைந்த மனிதர்களைத் தேடுவதும் தேடும் மனிதர்கள் எதிர்பாராத வகையில் கண்ணாமூச்சி காட்டி விட்டுக் கடந்து போவதும் என வரும் காட்சிகள் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை வெளிப்படுத்துகின்றன. இப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நாஸ்டால்ஜியா அனுபவத்தைத் தருகிறது.
ஓர் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு இனிமையான பயணமாக மாற்றி மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு நிறைவளிக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் ‘யெல்லோ’ உணர்வுகளின் வர்ணஜாலம்.


