ஹோம்பாலே பிலிம்ஸ் | விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு: விஜய் கிரகந்தூர்,எழுதி இயக்கியவர்: சுமன் குமார்.கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் சுப்ரமணியம்,இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்,நிர்வாகத் தயாரிப்பாளர்: ரியா கொங்கரா,ஒளிப்பதிவு இயக்குநர் யாமினி யக்ஞமூர்த்தி,படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ்.
இந்தப் படம் ஒரு பீரியட் பிலிமாக உருவாகியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த அந்த அண்ணா காலத்தில் நடப்பதாகக் கதையை ஊகித்துக் கொள்ள முடியும்.
கயல்விழி பாண்டியன் என்கிற பாத்திரத்தை ஏற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் வள்ளுவண்பேட்டையில் வங்கி அலுவலர்.ஆண் பெயரில் கதைகளில் எழுதி வருகிறார்.சிறுவயதில் இருந்தே இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுபவர்.ஆண் பெண் சமத்துவம் பேசுபவர். இதன் அவருக்குப் பல இடையூறுகள் வருவதுண்டு.
ஆணாதிக்கத்தில் சிக்கிக் கொள்வோம் என்கிற அச்சத்தில் திருமணத்தைத் தவிர்த்து வருபவர்.தனித்து சிந்தித்து எங்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார்.அப்படிப்பட்டவரின் கதைகளின் ரசிகராக தமிழ்ச்செல்வன் அவருக்கு அறிமுகம் ஆகிறார் நட்பு காதலாகிறது.அவரது முற்போக்கு சிந்தனை ஆதரிப்பதாகவும் ஒப்புக் கொள்வதாகவும் அறிமுகமாகிறார்.அதனால் அந்த காதல் திருமணம் வரை செல்கிறது. ஆனால் அவர் உள்ளுக்குள் பிற்போக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார்.இதை அறிந்த கீர்த்தி சுரேஷுக்கு அவரிடம் ஒரு விலகல் ஏற்படுகிறது. அந்தத் திருமணத்தை நிறுத்த பார்க்கிறார் முடிவு என்ன என்பதுதான் கதை.
ரகு தாத்தா எம் எஸ் பாஸ்கர் என்றாலும், படம் அவரின் பேத்தி கயல்விழி பாண்டியனான கீர்த்தி சுரேஷைச் சுற்றித்தான் சுழல்கிறது. டைட்டில் ரோல் என்றால் அது கயல்விழி தான்.அந்த பாத்திரத்தில் ஒரு துடுக்கான பெண்ணாக அவர் பரிமளிக்கிறார்.
அவரது காதலன் தமிழ்செல்வனாக வரும் ரவீந்தர விஜயும் சோடை போகவில்லை.உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.
கயல்விழியின் தாத்தாவாக வரும் எம் எஸ் பாஸ்கர் இயல்பான தாத்தாவாக வருகிறார்.வாழ்வின் சிக்கலான கடினமான சந்தர்ப்பங்களில் பெண்களுக்குப் பெண்களே துணை என்பதாக வரும் செல்வாவின் தாயார் கதாபாத்திரமும் சிறப்பு.
முழுக்க முழுக்க ஒரு காமெடி கதையில் அரசியலையும், பெண்ணியத்தையும் உறுத்தாமல் கூறி ரகு தாத்தாவை எழுதி இயக்கியிருக்கிறார் சுமன். இவர் ஏற்கெனவே ஃபேமிலி மேன் தொடர் மூலம் கவனம் பெற்றவர். சீர்திருத்த கருத்துகளை ஒரு பெண்ணின் குரலாக கூற வேண்டியதை நகைச்சுவை முலாம் பூசி ரசிக்க வைத்துள்ளார்.
இந்தி தெரிந்த வங்கி ஊழியர் தமிழை தப்பும் தவறுமாக பேசுவது, குரல் ஏற்ற இறக்கங்கள் ,ஆங்காங்கே வசனங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன.”திடீர்னு வந்தா திணிப்பு, காலங்காலமா செஞ்சுட்டு வந்தா கலாசாரமா” என பெண்களுக்கு எதிரான போக்கு குறித்த சிலீர் வசனங்களும் உண்டு.
ஷான் ரோல்டனின் இசையில் குறை இல்லை.சில காட்சிகளில் உள்ள நீளத்தையும் நாடகத் தன்மையையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்தப் படம் குடும்பத்தினருடன் கண்டுக்களிக்க கூடிய பெண்ணியம் பேசும் நகைச்சுவைப் படம்.