உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.
இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாகக் கொண்டிருக்கும் இவர், தன்னைப் பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.



இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.