நடிகர் வசந்த் ரவி,நடிகை ரவீனா ரவி,இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன்,இசை தர்புகா சிவா,
ஓளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்.
பாரதிராஜா ஒரு தாதா.ரவுடிசம் செய்து வரும் அவரிடம் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியைக் கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜாவின் மகனைக் கொல்கிறார்.
சிறை சென்று பல ஆண்டுகள் கழித்துத் திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியைக் கொலை செய்யத் துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியைக் கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் பழிவாங்கலை எப்படிச் சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கைப் பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேறுபாடு காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களிடம் தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.
பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவாக அவரைப் பார்க்க முடிகிறது. மகனைக் கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்களில் நடிகர்கள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து இருக்கிறார்கள்.
ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குநர். கொலைக்காட்சிகள் பதற வைக்கும். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றதுபோல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது.
கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.படத்தில் இவ்வளவு வன்முறை தேவையா என்பது ஒரு கேள்விக்குறி.
மொத்தத்தில் ‘ராக்கி’ வீரன்.