‘ராக்கெட் டிரைவர்’ திரைப்பட விமர்சனம்

விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார், ஸ்ரீராம் ஆனந்தசங்கர். ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில், அனிருத் வல்லப் தயாரித்துள்ளார். இசை – கௌஷிக் க்ரிஷ், ஒளிப்பதிவாளர் – ரெஜிமெல் சூர்யா தாமஸ்.

விஷ்வத் ஆட்டோ ஓட்டி வருகிறார்.அவர் நன்கு படித்தவர். ராக்கெட் விட வேண்டும் என்கிற அளவிற்கு விஞ்ஞானக் கனவோடு இருப்பவர்.ஆனால் எவ்வளவு படித்தாலும் பிழைப்பு தேடி ஏதாவது தொழிலில் முடங்கிக் கொள்ளும் இந்த சமூகத்தை நினைத்து குறிப்பாக அவரது தந்தையை நினைத்து அவருக்கு கோபம்.

இந்த உலகத்தில் அனைவரும் சராசரியாகவே பிறந்து சராசரியாகவே வாழ்ந்து மடிந்துவிட வேண்டியது தானா என்று அவருக்குள் வெறுப்பு நெருப்பு பற்றி எரிகிறது.யாரும் அவர்கள் படைக்கும் கனவை அடைய முடியாதா என்று குமுறிக் கொண்டுள்ளார்.இந்த விஷ்வத்துக்கு கலாம் என்றால் உதாரண புருஷன்.கலாம் கனவு காணச் சொன்னார் என்றால் இவர் கனவிலேயே கலாம் வருவார் கூடவே ராக்கெட்டும் வரும்.அந்த அளவிற்கு அறிவியலில் சாதிக்கத் துடிக்கிறார்.இவ்வளவு கனவையும் சுமந்து கொண்டு தான் ஆட்டோ ஓட்டி வருகிறார்.அப்படி ஒரு நாள் ஆட்டோ ஓட்டி வரும்போது,சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்து சிறுவனைச் சந்திக்கிறார். முதலில் நம்ப முடியாவிட்டாலும் பிறகு அது சிறுவயது அப்துல் கலாம் என்று புரிகிறது. நம்ப முடியாமலேயே அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு செல்கிறார்.போகப் போக அது தான் கலாம் என்று நம்பத் தொடங்குகிறார். மறைந்த அப்துல் கலாம், எதற்காக சிறு வயது தோற்றத்துடன் வந்தார் என்பதே ‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் அதீத கற்பனை கொண்ட கதை .அது சொல்லும் பாதை, முடிவுதான் படம்.

படிப்புக்கேற்ற வேலையும் வாய்ப்பும் இல்லை என்கிற வெறுப்பும் கசப்பும் கொண்ட இளைஞனாக விஷ்வத் பாத்திரமறிந்து நடித்துள்ளார்.சிறு வயது அப்துல் கலாமாக நடித்திருக்கும் நாகா விஷாலின் தோற்றம், போகப்போக அது சிறுவயது கலாம் என்று நம்ப வைக்கிறது.அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

போக்குவரத்து போலீசாக வரும் சுனைனாவிற்கு சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் படத்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திட உதவியுள்ளார்.கலாமின் நண்பர் சாஸ்திரி கதாபாத்திரத்தில் ‘காத்தாடி’ ராமமூர்த்தி வருகிறார். தனதுஅனுபவமுள்ள நடிப்பின் மூலம் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார். அவரும், நாகா விஷாலும் தோன்றும் காட்சிகள் ரசனை ரகளை. முதல் பாதியில் மெதுவாக சென்று கொண்டிருந்த திரைக்கதையில் ‘காத்தாடி’ ராமமூர்த்தி வந்த பிறகு வேகமும், சுவாரஸ்யமும் கூடுகின்றன.

சந்தோஷம் என்பது சாதனைகளில் மட்டுமல்ல சின்ன சின்ன அனுபவங்களிலும் உள்ளது என்பதை அழகாகக் கூறி யிருக்கிறார், இயக்குநர் , ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.
புதிய பாதையில் கதை சொல்ல ஆரம்பித்து அவர் இழுத்துச் செல்லும் பாதையில் நம்மை அழைத்துச் சென்று நடக்க வைத்து நம்ப வைத்து ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர்,திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி சுவாரசியமும் திருப்பமும் கூட்டியிருந்தால் படம் மேலும் நன்றாக இருந்திருக்கும்.