‘ராஜா சாப்’ திரைப்பட விமர்சனம்

பிரபாஸ், சஞ்சய் தத், ஜரினா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி , சத்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மாருதி எழுதி இயக்கியுள்ளார்.இசை மற்றும் பின்னணி இசை – தமன்,ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி,படத்தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்​,சண்டைக்காட்சிகள் – ராம்-லக்ஷ்மன், கிங் சாலமன்.

தயாரிப்பு – பீப்பிள் மீடியா ஃபேக்டரி,தயாரிப்பாளர்கள்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் .

தனது பாட்டி கங்கம்மாவுடன் வசிக்கிறார் ராஜு ஆகிய பிரபாஸ்.பாட்டிக்கு ஞாபகம் மறதிப் பிரச்சினை உள்ளது. திடீர் திடீரென மறந்து விடுவார்.அவர் தனது காணாமல் போன கணவன் சஞ்சய்தத் பற்றிய நினைவுகள் மட்டும் ஆழ்மனதில் பதிந்துள்ளது. அந்த நினைவுகள் கொண்ட ஏக்கத்தில் இருக்கிறார்.கணவர் பற்றிய கனவுகள் அடிக்கடி வருகின்றன. தனது கணவரைக் காண்போம் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது.அவர் தற்போது சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் பெரிய ஜமீனின் அரசி போல் வாழ்ந்தவர்.தனது கனவுகளில் தோன்றும் தனது கணவரை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக்கொண்டு திரும்ப அழைத்து வருமாறு பேரன் ராஜுவிடம் கேட்கிறார்.ராஜுவின் நண்பன் திருமண விசேடத்தில் அந்தத் தாத்தாவைச் சமீபத்தில் ஹைதராபாத்தில் பார்த்ததாக அறிகிறார் ராஜு. அந்தத் திருமணவிழா சார்ந்த புகைப்படத்திலும் பதிவாகியுள்ளது.தனது நண்பரிடம் பாட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தாத்தாவைத் தேடி ஹைதராபாத் செல்கிற ராஜு, ஒரு கன்னியாஸ்திரியை (நிதி அகர்வால்) சந்திக்கிறார்.கண்டதும் காதல் கொள்கிறார். பின்னர் பைரவி என்றர் பெண் (மாளவிகா மோகனன்) அவரது வாழ்க்கைப் பாதையில் நுழைகிறார். தனது தாத்தாவைத் தேடி, பைரவி உள்ளிட்ட தனது நண்பர்களுடன் நர்சாபூர் காட்டில் உள்ள ஒரு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டறிகிறார். இறந்து போன தாத்தா ஆவியாக இருப்பது உணர்கிறார்.அது மட்டுமல்ல அவர் பெரிய மந்திரவாதிக்குரிய மாய சக்தியோடு இருக்கிறார்.அவரது சக்தி மூலம் ராஜு பல ஆபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்.அவரது தாத்தாவின் கடந்த கடந்த காலம் என்ன?அவரது எதிர்மறை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன? ராஜு என்கிற ராஜா சாப்பின் வாழ்க்கையில் நுழையும் பைரவி (மாளவிகா மோகனன்), பிளெஸ்ஸி (நிதி அகர்வால்), மற்றும் அனிதா (ரித்தி குமார்) ஆகிய மூன்று பெண்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான பதில் தேடும் பயணம்தான் ’ராஜா சாப்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

பிரபாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வணிக ரீதியிலான கலகலப்பான படத்தில் நடிக்க வந்துள்ளார்.நகைச்சுவைக் காட்சிகளிலும் மாயாஜாலக் காட்சிகளிலும் அவர் முடிந்தவரை தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.குணச்சித்திர பகுதியையும் அவர் ஈடு செய்கிறார்.பாடல் காட்சிகளில் தோன்றி அவர் தனது ஏற்கெனவே விரிவுபடுத்தப்பட்ட தனது வணிக பிம்பத்தை தக்க வைத்துள்ளார்.

சஞ்சய் தத் ஏற்றிருந்த கனகராஜு பாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். பல்வேறு விஎஃப்எக்ஸ் அசத்தல்கள் நிறைந்தகாட்சிகளில் வெவ்வேறு வடிவங்களில் ஒரு பேயாகவே தோன்றி கதைக்குத் தேவையான தீவிரத்தை அளித்து அச்சமூட்டுகிறார்.

மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் படத்தின் வணிகவண்ண மயத்துக்கு உதவியிருக்கிறார்கள். பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. மாளவிகா ,ரித்தி குமார் மற்றும் நிதி அகர்வால், ஏறக்குறைய மூவரும் குறிப்பாகக் கவர்ச்சிக் காட்சிகளில் தாராளம் காட்டியுள்ளார்கள்.

பிரபாஸின் பாட்டியாக வரும் ஜரினா வஹாப், அந்த ஞாபக மறதி பாத்திரத்தில் தனது குணச்சித்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது முன் கதையும் அவரது பாத்திரத்திற்கு அழுத்தம் கூட்டுகிறது. போமன் இரானி ஏற்றுள்ள  கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடித்து பதிகிறார்.சத்யா, பிரபாஸ் சீனு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை, வழக்கமானதாக உள்ளது.சமுத்திரக்கனிக்கு நல்ல வேடம். ரங்கஸ்தலம் மகேஷ் மற்றும் சப்தகிரி போன்ற துணை நடிகர்களை மேலும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

தமனின் இசை மற்றும் பின்னணி இசை, கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு, இருவரும் தொழில்நுட்ப ரீதியாக திரைக்கதைக்குப் பெரிய பலமாகப் பங்காற்றி இருக்கிறார்கள்.ஆனால் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில், கறாராக கர்த்தரியைப் பயன்படுத்தி இருக்கலாம்.சில நீளமான காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகளில் கண்களை மிரட்டுகிறார்கள்.

காட்டில் உள்ள ஒரு அரண்மனைக்குள் நுழையும் காட்சியில் ஓரளவு சஸ்பென்ஸ் கொண்டு திகில் ஊட்டுகின்றன. இயக்குநர் மாருதி ஒரு வித்தியாசமான திகில் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக்கியுள்ளார்.

ரெபெல் ஸ்டார் பாடல், ராஜா யுவராஜா பாடல் என்று பிரபாஸை தூக்கிப் பிடிக்கும் பாடல்கள் உண்டு. அந்த பத்திரகாளி பாடலில் கோயில் ஆட்டம் பாட்டம் என பிரமாண்டமான திருவிழா விளைவைக் கொண்டு வந்துள்ளார்கள்.முதல் பாதி படத்தில் குறைந்த கால இடைவெளிகளில் பாடல்கள் ஒலிப்பது அயர்ச்சி.

முதல் பாதி செண்டிமெண்ட் கலகலப்பு நகைச்சுவை என்று  சென்றாலும் இரண்டாம் பாதியில் கதை அமானுஷ்யத்திற்குள் நுழைகிறது.கஜானா ரூம் மயானமாவதும் வீட்டை ஒட்டி ரயில் ஓடுவதும் மாயாஜாலத்தின் மகிமையை வெளிப்படுத்துகிறது.

காட்சிகளைப் பிரமாண்டமாக அமைக்க பாடுபட்ட அளவிற்கு திரைக்கதையில் அவர் நன்கு கவனம் செலுத்தி இருக்கலாம் .எனவே படம் பார்த்து விட்டு யோசித்தால் கதையைவிட காட்சிகளே நினைவில் மீதமுள்ளன.

மொத்தத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள தி ராஜாசாப் ஒரு நகைச்சுவை கலந்த திகில் கதையின் திரைப்பட வடிவமாகியுள்ளது. காட்சிகள் மிரட்டுகிற அளவிற்கு கருத்தில் மிரட்டவில்லை.