
சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றம்-23 படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ‘under cover agent’ என்றும், அவர் புலன் விசாரணை செய்யும்முறை பரபரப்பாகஇருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர் ஜெபிஆர். “இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்பு முனையாக அமையும்” என்றும் சொல்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. ‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.