‘ராட்சசி’ விமர்சனம்

 

ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி ?

அரசு பள்ளிகளின் அவல நிலையையும், பள்ளி கல்வித் துறையின் அவல நிலையையும்  மக்களின் அக்கறையின்மையையும் சொல்வது தான் ராட்சசியின் கதை.

 சீர்கெட்டு ஒழுங்கு தவறிக் கிடக்கும் அரசுப் பள்ளி ஒன்றையும், அதில் படிக்கும் மாணவர்களையும் அழிவில் இருந்து மீட்க அப்பள்ளிக்கு புதிதாக வரும் தலைமை ஆசிரியரான மிலிடரி ரிடர்ன் ஜோதிகா பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்குகிறார். அதனால் அவருக்கு  எதிர்ப்புகள் வருகின்றன. அவற்றை ஜோதிகா  எப்படி சமாளித்து அப்பள்ளியைச் சாதனைப் பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ‘ராட்சசி’ யின் கதை.

தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் ஜோதிகா, நடிப்பிலும் ராட்சசிதான்.மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்தாமல், சக ஆசிரியர்கள், ஜாதி கட்சி தலைவர்கள்,அரசியல்வாதிகள் என அனைவரிடமும் மூன்று கேள்விகளை கேட்டு அதிர வைக்கிறார்.இப்படித் தன்  கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

முழுப் படமும் ஜோதிகாவை சுற்றியே நகர்வதால் பிற  எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. 

ஆசிரியர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் நாம் மின்பே பல படங்களில் பார்த்தவர்கள் .

உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் சத்யனின் சில காமெடிக் காட்சிகள் சிரிக்க வைப்பது போல, ஆட்டோ ஒட்டுநராக நடித்திருக்கும் இயக்குநர் மூர்த்தியும் தனது வசனம் மூலம் கவனிக்க வைக்கிறார்.

இப்படம் சாட்டைபடத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, ‘இது தவறு, இப்படிச் செய்யலாம்’ எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர்.இது ஒரு பலவீனம்.இவ்வளவு ஆளுமை மிக்க அவருக்கு ஒரு முன்கதை காதல் கதை சொல்வது அப்பாத்திரத்தின் கம்பீரத்தைக் குலைத்துவிடுகிறது 

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு மற்றும் ஷான் ரோல்டனின் இசை இரண்டுமே கதையுடனே பயணிக்கிறது. 

படத்தின் கதை என்னவென்று ஆரம்பத்திலே தெரிந்துவிடுவதோடு, படம் எப்படி முடியும் என்பதை ரசிகர்கள் முன் கூட்டியே யூகித்துவிடுவதால் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் திரைக்கதையை வசனங்கள்தான் காப்பாற்றுகின்றன.உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட்டும் படியாக  வாட்சப் ,முகநூல் உதவியுடன் பாரதி தம்பியின் வசனங்கள் உதவினாலும்,  சில இடங்களில் அவை திரைப்படமென்ற கட்டமைப்புக்குள் இருந்து விலகி பிரச்சார பாணியாகிவிடுகின்றன .

இதுபோன்ற ஒரு படம் ஏற்கனவே வந்திருந்தாலும், அதைவிட பலகாட்சிகள் இதில் சிறப்பாக உள்ளன.

ஜோதிகாவை பிரதானப்படுத்த சில காட்சிகளை  சினிமாத்தனமாக சொல்லியிருப்பது தான் இப்படத்தின் மிகப்பெரிய குறை. அதிலும், ஜோதிகாவுக்காகவே வடிவமைத்தது போல சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதும் படத்துடன் ஒட்டாமல் போகிறது. 

மொத்தத்தில், குறைகள் சில இருந்தாலும், இந்த ‘ராட்சசி’ யை ரசிக்கலாம்.