‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட விமர்சனம்

கீர்த்தி சுரேஷ் ,ராதிகா சரத்குமார் ,சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்ராயன், அகஸ்டின் ,பிளேடு சங்கர், ராமச்சந்திரன் ,அக்ஷதா அஜித், குகாசினி, காயத்ரி ஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கிருக்கிறார் ஜே. கே .சந்துரு. ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்,இசை – ஷான் ரோல்டன் ,படத்தொகுப்பு – பிரவீன் கே எல்,தயாரிப்பு பேஷன் ஸ்டுடியோஸ் – தி ரூட்.

டிராகுலா பாண்டியன் என்கிற சூப்பர் சுப்பராயன் பாண்டிச்சேரியின் பெரிய ரவுடி. அவர் சபலத்தில் விலைமகள் வீட்டைத் தேடிச் செல்கிறார். ஆனால் தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார். பதறிப்போன கீர்த்தி சுரேஷும் அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் அவரை வெளியே போகுமாறு விரட்டுகிறார்கள். ஆனால் சூப்பர் சுப்பராயன் துப்பாக்கியை எடுக்கிறார்.அம்மாவும் மகளும் பயந்து பதற்றத்தில் அவரைத் தட்டி விட சூப்பர் கீழே விழுகிறார்.
கீழே விழுந்தவர் தலையில் அடிபட்டு இறந்து போகிறார். செய்வதறியாது விழிக்கிறார்கள் கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் . ராகுலா பாண்டியனின் மகனான ஜூனியர் தாதா சுனில், காணாமல் போன தந்தையைத் தனது அடியாட்களுடன் தேடுகிறார்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இருந்து போன சூப்பர் சுப்பராயனின் தலையைக் கொண்டு வந்தால் ஐந்து கோடி தருகிறேன் என்று ஒரு ஆந்திர ரவுடி விலை வைக்க,அந்தப் பணத்தை அடைய வேண்டும் என்று ஒரு கும்பல் தலையைக் கைப்பற்றச் சில கும்பல் முயற்சி செய்கிறது .இதற்கிடையே,இறந்து கிடக்கும் சூப்பர் சூப்பராயனின் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஈடுபடுகிறது. கீர்த்தியால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், அவரைப் பழிவாங்க அலைகிறார். இப்படிப் பணத்தை கைப்பற்றவும் கீர்த்தி சுரேஷைச் சிக்கவைக்கவும் ஆடுகிற கண்ணாமூச்சி ஆட்டம் தான் ‘ரிவால்வர் ரீட்டா’.


கதையின் நாயகியாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.பயம் பதட்டம் கோபம் தைரியம் என்று பல்லேர்விதமான முகபாவனைகளைக் காட்டி கவர்கிறார்.அவரது அழகான தோற்றமும் இளமையும் பெரிய திரை பங்களிப்பாக அமைந்து படத்திற்குப் பலம் சேகரித்துள்ளது.

ராதிகா,கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வருகிறார்.அவர் செய்யும் தத்துப் பித்துத் தனங்களால் சிரிக்க வைக்கிறார்.

இதுவரை அசட்டுத்தனமான நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் புதிய தோற்றத்தில் வந்து வில்லத்தனம் காட்டுகிறார்.

அவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி வழக்கம்போல அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார்.

அஜய் கோஸ் வில்லனாக மிரட்டாமல் நகைச்சுவை நடிகராக சிரிக்க வைக்கிறார். வில்லத்தனமும் இன்றி, நகைச்சுவையும் இன்றி, ஜான் விஜய் மிகை நடிப்பில் வழக்கம் போல் தன் வேலையைக் காட்டுகிறார்.

கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

ஒரு வணிகப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கலந்து இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் .

காட்சிகளை பிரமாண்டமாக மாற்றி உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

திரைக்கதைக்குக் குந்தகம் விளைவிக்காமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் .

எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, இந்தப் படத்திற்காக எடுத்துக் கொண்ட கதை பழகியது போல் தோன்றினாலும் புது விதமான கோணத்தில் சொல்லிச் சிரிக்க வைக்கும் அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’வின் துப்பாக்கியில் சிரிப்புத் தோட்டாக்கள்.