ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பெராடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ரூட் நம்பர் 17 உருவாகியுள்ளது. ஒளசேப்பச்சான் இசையமைக்க பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் தொடக்கத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காக காதல் ஜோடி கார்த்திக் மற்றும் அஞ்சு தென்காசி அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு காரில் பயணம் செய்கின்றனர். அந்த நட்ட நடுக்காட்டுப் பகுதியில் அன்று இரவு தங்குகின்றனர். அவர்களை காட்டுவாசி ஜித்தன் ரமேஷ் பிடித்து குகையில் அடைத்து விடுகிறார். பின்பு அவர்களைத் தேடி போலீஸ் வருகிறது.இறுதியில் என்ன ஆனது? அந்த இரண்டு பேரையும் போலீசார் காப்பாற்றினார்களா? என்பதே ‘ ரூட் நம்பர் 17’ படத்தின் கதை.
காட்டுப்பகுதியில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.புலனாய்வு திகில் கதை ரகவரிசையில் இந்தப் படம் உருவாகி உள்ளது.தொழில்நுட்ப ரீதியில் படம் கவனிக்கும் வகையில் உள்ளது.
ஒரு த்ரில்லர் படத்திற்கு ஏற்றவகையில் படத்தின் தன்மையை வலுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என பிரதான தொழில் நுட்பங்கள் உதவியுள்ளன.படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜித்தன் ரமேஷ் அவரது சகோதரர் ஜீவா அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றொரு கருத்துள்ளது. ஜித்தன் ரமேஷின் கதாபாத்திரம் காட்டுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களை அவிழ்த்து, பல அடுக்குகளுடன் கதைக்களத்தை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக ஒரு புதிய தோற்றத்தை அளிக்கும்.அவரது நடிப்பு கவனிக்க வைக்கும்.
அஞ்சு பாண்டியா,படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் வருகிறார்.பாறைகளில் உருண்டு உடல் முழுக்க சேறு சகதி விழுவது, ஓடுவது, அடிவாங்குவது என்று என உழைப்பையும் நடிப்பையும் வெளிக்காட்டி உள்ளார்., வில்லன் ஹரிஷ் பெராடி, ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் ,போலீஸ் இன்ஸ்பெக்டர் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிள் அருவி மதன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளது காட்சிகளில் தெரிகிறது.ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படத்தின் முதல் பாதி அதிரடி.இரண்டாம் பாதி சற்று தொய்வுணர்வை ஏற்படுத்துகிறது. ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைப்பவை. சிலர் லாஜிக் மீறல்களை மறந்து இந்த த்ரில்லர் படத்தை ரசிக்கலாம்.