விக்ரம் பிரபு ,ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷிரித்விக், ஹரிஷ் பெராடி, செல்வா, சௌந்தரராஜா, டேனியல், வேலு பிரபாகரன் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி உள்ளார். வசனங்களை முத்தையா எழுதியுள்ளார்.கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் .எம் ஸ்டுடியோஸ் ,ஓபன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ,ஜி பிக்சர்ஸ் தயாரித்துள்ளன.
விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரபாகரன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.படம் தொடங்கியதுமே அவர் ரவுடிகளையும் போக்கிரிகளையும் வரிசையாக என்கவுன்ட்டர் செய்வதைக் காட்டுகிறார்கள். எதற்கும் பணியாமல் சமரசத்துக்கு உட்படாமல் இப்படி தாதாக்களின் ரவுடிகளை போட்டுத் தள்ளுவதால் அந்த தாதாக்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார். அவர்கள் இவரைப் போட்டுத் தள்ள அலைகிறார்கள். இந்த நீயா நானா யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை.இதைச் சொன்னால் இது போல் பல படங்கள் வந்திருக்கிறதே என்று நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மைதான் .அப்படி ஒரு பழைய கதை தான் இது.
இது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றி பெற்ற ‘தகரு’ படத்தின் மறு உருவாக்கம்.’ரெய்டு’ படம் சாதாரண கேங்ஸ்டர் போலீஸ் மோதல் கதை தான். இதுபோல் தமிழில் நிறைய படங்கள் வந்துள்ளன. எந்த அம்சத்தைப் பிடித்து போய் கன்னடத்தில் இருந்து இறக்குமதி செய்தார்கள் என்று தெரியவில்லை.
மனித மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் படியான நுணுக்கமான நடிப்பை விக்ரம் பிரபு வெளிப்படுத்தி அண்மையில் இறுகப்பற்று என்ற படம் வந்து, அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .இந்த நிலையில் அவரிடம் துப்பாக்கி கொடுத்துப் படம் முழுக்க சுட வைத்துள்ளார்கள். வித்தியாசமான முகபாவனைகளுக்கு வாய்ப்பு இல்லாத கதை. இந்தப் படத்தில் அந்தக் காட்சிகளில் கூட அவரிடம் சரியாக இயக்குநர் திறமையாக வேலை வாங்கவில்லை.சிவாஜி பேரனுக்கு நடிக்கத் தெரியாதா என்ன? அவரிடம் அப்படிப்பட்ட நடிப்பை வாங்காமல் தனது முதிர்ச்சியின்மையைக் காட்டியுள்ளார் இயக்குநர் கார்த்தி.
கதாநாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா இரண்டாம் பாதியில் தான் வருகிறார்.அவருக்கு மேலும் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.இன்னொரு கதாநாயகி போல் வரும் அனந்திகாவுக்கும் அய்யோ பாவம் நிலை.
நடிப்புத் திறமை மிக்க, களம் அமைத்தால் புகுந்து விளையாடக் கூடியவர்களான ஹரிஷ் பெராடி, சௌந்தரராஜா, டேனியல்,
வேலு பிரபாகரன் போன்றவர்களிடமும் நடிப்பு வேலையைச் சரியாக வாங்கவில்லை.ஏனென்றால் அந்த அளவிற்கு திரைக்கதையும் காட்சிகளும் பலவீனமாக உள்ளன.விக்ரம் பிரபு, செல்வா, ஸ்ரீ திவ்யா, அனந்தி கா என எல்லாருமே ஆதரவற்றவர்களாகவே காட்டப்படுகிறார்கள் அது ஏன்?
முதலில் விக்ரம் பிரபு ரவுடிகளை வரிசையாக என்கவுன்ட்டர் செய்வதைக் காட்டி, பிறகு அதன் பின்னணிக் கதைகளைக் காட்டுகிறார்கள். அதைப் பெரிய புதுமையாக நினைத்து செய்துள்ளார் இயக்குநர்.இப்படி நடந்த கதையைச் சொல்லும் போது காலக் குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.ஒரு பலவீனமான கதையில் பெரிய ரகசியம் போல இரண்டாவது பாதியில்தான் கடைசி அரை மணி நேரத்தில் தான் கதையைச் சொல்வது போல் பாவனை காட்டுகிறார்கள்.
படத்தில் வரும் ரைமிங் வசனங்கள் சிறுபிள்ளைத்தனமானவை. காலம் கடந்தவை; பழைய வாசனையடிப்பவை..ஒளிப்பதிவு,இசை இரண்டுமே என்னதான் முயன்றாலும் இயக்குநரின் தெளிவின்மையால் அவை எடுபடவில்லை.
இப்படிப் பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் அசுர நடிப்புக் கலைஞர்கள் இருந்தும் அவர்களைச் சரியாகப் பயன்படுத்தாமல் இயக்குநர் திணறி இருக்கிறார். அதனால் முடிவில் படம் மிகச் சுமாராக வெளிப்படுகிறது.படம் முழுக்க துப்பாக்கிக் குண்டுகளைத் தெறிக்க விடும் விக்ரம் பிரபு பாத்திரம் புதிதாகத் தோன்றலாம்.முரட்டுத்தனம் மாறாத விக்ரம் பிரபுவைக் காண விரும்பினால் இந்தப் படம் அவர்களுக்குப் பிடிக்கும்.