
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் படம் “ரேசர்”. இப்படத்தில் நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் லாவண்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன் ,பார்வதி, சரத் நிர்மல், சதீஷ், அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சதீஷ் (எ) சாட்ஸ் ரெக்ஸ் இயக்கியிருக்கிறார்.
பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசை அமைத்திருக்கிறார்.
எல்லோருக்குமே அடைய வேண்டும் என்கிற கனவு ஒன்று இருக்கும்.அது சிறுவயதில் இருந்து தொடர்ந்து வரும். ஆனால் குடும்ப சூழ்நிலையாலும் பொருளாதார பிரச்சினைகளாலும் அந்தக் கனவு அடைய முடியாமல் சராசரி வாழ்வினை வாழ்ந்து முடிப்பதுண்டு. அப்படி ஒரு சிறுவனுக்கு பைக் மீதும் பெரிய மோகம். குறிப்பாக ரேஸ் பைக் ஓட்ட வேண்டும் என்பது அவனுக்கு கனவாக இருக்கிறது.அப்படியே கனவோடு வளர்கிறான். ஆனால் நடுத்தர வர்க்க குடும்பப் பின்னணி இதற்குத் தடையாக இருக்கிறது .அது மட்டுமல்ல பைக் ரேஸ் ஆபத்துள்ளதாக இருப்பதால் அவன் தந்தை அதில் இறங்க அனுமதிக்க மறுக்கிறார். அதையும் மீறி வீட்டுக்குத் தெரியாமல் பயிற்சி பெற்றிருக்கிறான். ஒரு ரேஸ் பைக்கும் சொந்தமாக வாங்கி விடுகிறான். இதற்கு இடையே
காதலிக்கவும் செய்கிறான். ரேஸ் மோகம் இருந்தாலும் குடும்பக் கட்டுமானத்தை மீறி வெளிவர முடியாத சாந்தமான குணம் கொண்டவன்.இருந்தாலும் குடும்பத்தை மீறி சிறு சிறு பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறும் அவன் பெரிய போட்டிகளில் இறங்கும் கனவோடு இருக்கிறான் .அவன் கனவு கனவு நனமானதா? காதல் என்னவானது ? பெற்றோரை அவன் எப்படிச் சமாளித்தான்?என்பது தான் கதை செல்லும் பாதையும் பயணமும்.



நடுத்தர வர்க்கத்திலிருந்து வரும் கனவுகள், பைக் ரேஸ் பற்றிய விவரங்கள், நாயகனின் ரேஸ் காதல் காதல் பற்றி எல்லாம் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஒரு தந்தையின் உணர்வும் தன் மகனின் ஆசையை புரிந்து கொண்டாலும் ஆபத்து நிறைந்தது என்று தயங்கும் ஒரு தந்தையின் கவலையும் படத்தில் அழகாக பதிவாகியுள்ளது.
பைக் ரேஸ் பற்றிய கதை பின்னணியில் ஒரு சுவாரசியமான படத்தை கொடுக்க வேண்டுமென இயக்குநர் முயன்றுள்ளார்.
நாயகன் அகில் சந்தோஷும் தன்னால் முடிந்த அளவு குறையில்லாமல் நடித்துள்ளார் .அது மட்டும் அல்ல நாயகனின் அப்பாவாக வரும் சுப்பிரமணியன் ஒரு பொறுப்புள்ள பாசமுள்ள தந்தையாகத் தனது உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல லாவண்யா வந்து போகிறார்.
நாயகன் நாயகி சேர்ந்து ஒரு டிராவல் ஆப் கண்டுபிடித்ததாக காட்சி வருகிறது. அதன் தொடர்ச்சியையே காணோம்.
இயல்பாகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் ஆங்காங்கே சிறு பொறி பறக்கும் யதார்த்த வசனங்களும் படத்திற்குப் பலம். இயக்குநர் சதீஷ் தனக்கு அமைந்த பட்ஜெட்டில் ஆபாசம் இல்லாமல் ஒரு சுவாரசியமான படத்தை கொடுக்க முயன்றுள்ளார்.அவருக்கு ஒலிப்பதிவும் இசையும் கை கொடுத்துள்ளன.வழக்கமாக வெளியாகும்
எவ்வளவோ பார்முலா மசாலா குப்பைகளில் இருந்து இந்தப் படம் ஆறுதல் அளிக்கும் ஒரு சிறு முயற்சி எனலாம்.