‘ரைட்’ திரைப்பட விமர்சனம்

நட்டி சுப்பிரமணியம், அருண்பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணாறு ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், ஆதித்யா சிவகுமார் , யுவினா பார்த்தவி, தங்கதுரை நடித்துள்ளனர்.சுப்பிரமணியன் ரமேஷ் குமார் இயக்கியுள்ளார்.எம். பத்மேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் -தாமு, வசனம் – ஏசி கருணாமூர்த்தி, சுப்பிரமணியன் ரமேஷ் குமார் பாடல்கள் -அபிஷா.ஆர் டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பெருமாள் லட்சுமணன் மற்றும் டி. சியாமளா தயாரித்துள்ளனர்.

அருண் பாண்டியன் தனது மகனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார்.ஆனால் அங்கே அவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். பிரதமர் வருகை, பாதுகாப்பு என்கிற பரபரப்பில் இருக்கிறார்கள் .எனவே அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்.தான் அலட்சியப்படுத்தப்படுவதில் கோபமாக இருக்கிறார் . மறுநாள் மீண்டும் வருகிறார் .மீண்டும் அதே நிலை தொடர்கிறது உச்சகட்ட கோபத்துக்குள்ளாகிறார்.அங்கே இணைய வழித்தொடர்பில் ஒரு அனாமதேய அழைப்பு வருகிறது .அதன்படி அந்தக் காவல் நிலையத்திற்குள் வெளியேறும் வாசல்களில் எல்லாம் நிறைய குண்டுகள் வைத்திருப்பதாக ஒருவன் மிரட்டுகிறான். அது மட்டும் அல்லாமல் ரைட்டர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் கீழே குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறான் . குனிந்து பார்த்தால் அங்கே அவர் நாற்காலியின் கீழே குண்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் எழுந்தால் வெடித்து விடும் என்கிறான்.உள்ளே இருந்து சொல் பேச்சு கேட்காமல் வெளியேறியவர்கள் சென்ற வாசல்களில் குண்டுவெடிக்கிறது. ஆட்கள் படுகாயமடைகிறார்கள்.

இந்த நிலையில் காவல் நிலையம் களேபரமாகிறது. ஆனால் யாரும் வெளியே செல்ல முடியாது. காவல்துறையில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது.கோபமாகப் பேசியதால் அருண்பாண்டியனைச் சந்தேகிக்கிறார்கள் அவரைத் தாக்குகிறார்கள் .ஆனால் தான் ஒரு பாம் ஸ்குவாட் என்று அவர் கூறி பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் குண்டுவைத்தவன் இவன்தான் என்று போலீசார் ஒவ்வொருவராக ஆட்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இல்லை நான் தான் என்று ஒருவர் வருகிறார் .அதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி அடைகிறார்கள்.இப்படிச் செல்கிற கதையில் ,இரண்டாவது பாதியில் அவர் ஏன் இந்தக் கொடூர வேலையைச் செய்தார்? என்பதை விளக்கும் வகையில் முன் கதை வருகிறது .அதன் பிறகு இரண்டாவது பாதி படத்தில், வேறு திசையில் கதை பயணிக்கிறது .முதல் பாதியில் அச்சம், பரபரப்பு ஊட்டிய கதையில் இரண்டாவது பாதியில் கலங்க வைக்கிறார்கள் .அது என்ன என்பதுதான் 120.48 நிமிடங்கள் கொண்ட ‘ரைட்’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் அருண் பாண்டியன் சக்திவேல் என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார்.காணாமல் போன தன் மகனைத் தேடி வரும் அப்பாவாக வருகிறார். அடக்கமாகவும் பொறுமையாகவும் அவர் பேசுவது,நடந்து கொள்வதெல்லாம் அவர் ஏற்கெனவே ஏற்றிருந்த பாத்திரங்களில் வித்தியாசமானதாகத் தோன்றுகிறது.அவர் அப்பாவியாகவும் கோபப்படும் போது அவர்தான் குண்டு வைத்தவரோ என்று சந்தேகப்படும்படியாகவும் அவரது பாவனைகள் இருக்கின்றன.உரிய நடிப்பை அழகாக வழங்கி உள்ளார். நட்டி நடராஜ் ரகுராம் என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் வருகிறார். எதிர்மறை நிழல் படிந்த பாத்திரங்களில் இதுவரை வந்தவர் இதில் ஒரு பாசமுள்ள தந்தையாக வந்து தனது உணர்ச்சிகளைக் காட்டியுள்ளார். உதவி ஆய்வாளராக மேனகா என்கிற பாத்திரத்தில் அக்ஷரா ரெட்டி வருகிறார். தோற்றம், உடல் மொழி மட்டுமல்ல காக்கி கதாபாத்திரத்திற்குள்ளும் கலங்கும் பெண் மனம் உள்ளதை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

இதுவரை வில்லன் பாத்திரத்தில் நடித்து வந்த மூணாறு ரமேஷ் இதில் ரைட்டராக வந்து தனது மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

ஜெய்யாக ஆதித்யா சிவகுமார் வருகிறார் இளமை துறுறுப்பு என்று வருகிறார் .அவரது ஜோடி வர்ணிவாக யுவினா பார்த்தவி வருகிறார். சில காட்சிகளில் வந்தாலும் கலங்க வைக்கிறார்.வினோதினி வைத்தியநாதன் நீதிபதியாக வருகிறார். வழக்கம்போல டெம்ப்ளேட் நீதிபதியாக இல்லாமல் சில காட்சிகளில் தனது நடிப்பினையும் வெளிப்படுத்தியுள்ளார்.சில்லறைத் திருடன் பாத்திரத்தில் வரும் தங்கதுரை சிரிக்க வைக்கிறார்.

முதல் பாதி படம் சஸ்பென்ஸ் திரில்லர் என்று இருந்தாலும் இரண்டாவது பாதியில் முற்றிலும் மாறுபட்ட கதைக்குள் நுழைகிறது.பிறகு வரும் காட்சிகள் அன்பு, பாசம், காதல் போன்றவற்றின் கலவையான உணர்ச்சிக் குவியலாக உருவாக்கப்பட்டுள்ளன .

இந்தப் படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை வழங்கி உள்ளார் பத்மேஷ். அழகுணர்ச்சியுடன் காட்சிகளை உருவாக்க முயன்று இருப்பது சில காட்சிகளின் வழியாகத் தெரிகிறது.

குணா பாலசுப்பிரமணியன் இந்தக் கதைக்கேற்ற இசையை வழங்கி உள்ளார்.உணர்ச்சிகளின் உத்வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சட்டப்படி ‘ராங்’காக இருந்தாலும் அவர்கள் மனசாட்சிப்படி ‘ரைட்’டாக இருக்கிறது என்கிற ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைச் சித்தரிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. வழக்கமான பழிவாங்கல் காரணம் சலிப்பூட்டுகிறது.

மொத்தத்தில் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.