விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி, யோகி பாபு, இளவரசு, சுதா, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, ஷாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இசை பரத் தனசேகர். தயாரிப்பு விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.
மலேசியா சென்று சம்பாதித்து திரும்பிய விஜய் ஆண்டனிக்கு திருமண வயதைத் தாண்டி விட்டது.பெற்றோர்கள் திருமணப் பேச்சு எடுக்கும் போது தனக்குக் காதல் வந்தால் மட்டுமே திருமணம் என்று இருக்கிறார்.அப்படிப்பட்டவருக்கு மிர்ணாளி ரவியை ப பார்த்ததும் மனதில் காதல் மலர்கிறது.
அவருக்கு மிர்ணாளினியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் மிர்ணாளி ரவிக்கு சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது தான் கனவாக, லட்சியமாக உள்ளது.
தனது லட்சியத்தை நோக்கி மிர்ணாளினி பயணிக்க, அவரை ஒருதலையாக விஜய் ஆண்டனி காதலிக்கிறார். இறுதியில், விஜய் ஆண்டனியின் காதல் ஜெயித்ததா?, மிர்ணாளினியின் லட்சியம் என்ன ஆனது? என்கிற முடிவைத் தேடிச் செல்லும் திரைக்கதையின் பயணம் தான் ‘ரோமியோ’ திரைப்படம்.
சைலன்ட் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்த விஜய் ஆண்டனி, இதில் காதல் கதாநாயகனாக அறிவு என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பரபரப்பு ஆக்சன் போன்றவற்றைத் தவிர்த்து காதல் வெளிப்படுத்தும் இடங்களில் ரசிகர்களைக் கவர்கிறார்.இப்படத்தில் அவர் தனது மாறுபட்ட முகத்தைக் காட்டியுள்ளார்.
நடனம் மற்றும் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
நாயகியாக லீலா பாத்திரத்தில் நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி, ஏற்கெனவே மூக்கும் முழியுமாக இருப்பவர். கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கண்களையும் முகபாவங்களையும் பேசவிட்டு கவனம் ஈர்க்கிறார். பல்வேறுபட்ட நடிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி உள்ளார்.அவரது தோற்றமும் நடிப்பும் திரை ஆக்கிரமிப்பு செய்துள்ளன.
யோகி பாபு கதாநாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு மத்தாப்புகள்.நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு.விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் பாணியில் தங்கள் பங்கினை ஆற்றியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜே.பாட்ஷா காட்சிகளை ரங்கோலி போல் வண்ணமயமாகப் படமாக்கியிருக்கிறார்.வணிக ரீதியான படத்துக்குத் தேவையான காட்சிகளாக அவை உள்ளன.இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு ரகத்தில் அமைந்து படத்துக்கு உதவி உள்ளன.பின்னணி இசையும் குறை இல்லை.
விருப்பமில்லாத திருமணத்தின் விளைவுகளைப் பற்றி பேசும் படங்கள் ஏற்கெனவே பல வந்திருந்தாலும் இந்தப் படம் திருமணமான பெண்களின் கனவுகள் எப்படி இருக்கும்?திருமணத்தோடு அந்தக் கனவுகள் முடிவதில்லை என்பதைப் பற்றிப் பேசுகிறது.அந்த வகையில் கதாநாயகனைச் சுற்றிச் சுற்றி வரும் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் மாறுபட்டு உருவாக்கி உள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன்.படம் பார்க்கும் பெண்கள் அறிவு போன்ற ஒரு கணவர் அமைய வேண்டும், என்று நினைக்குபடி நாயகன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ரோமியோ’ வணிகப்பட ரசிகர்களை மட்டுமல்ல பெண்களையும் கூடக் கவரும் ஜாலியான படம்.