கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் AGS Entertainment சார்பில் தயாரித்த, பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளை கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.
இப்படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து படக்குழுவினரை கௌரவிக்கும் விதமாக மிகப்பிரமாண்ட விழா நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னனி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு ஷீல்ட் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில்..
எடிட்டர் மோகன் கூறியதாவது…
“AGS உடைய புகழ் காலம் காலமாக நிலைத்து நிற்கும். தனித்துவமான படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். பிரதீப் முதல் படமும் வெற்றியை கொடுத்தார், இரண்டாவது படமும் இன்று வெற்றியை கொடுத்து நாயகனாக இருக்கிறார். இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குநரும் தொழில்நுட்ப கலைஞர்களும் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும், அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”
இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
“நூறு நாட்கள் விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. லவ்டுடே திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இயக்குநருடைய முதல் படமே எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக இருந்தது. இந்த படத்தை அதிக பொருட்செலவில், அதிக அர்ப்பணிப்பில், அதிக சிரத்தையில், அதிக உழைப்பில் உருவாக்கியுள்ளனர். பிரதீப் இன்னொரு தனுஷாக வருவார், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.”
இயக்குநர் மோகன்ராஜா கூறியதாவது…
“AGS எனது குடும்பம் போன்றது. AGS உடன் நான் 16 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். எனது வாழ்கையில் மிகமுக்கியமான தனி ஒருவன் படம், AGS-ஆல் தான் தயாரிக்கப்பட்டது. லவ்டுடே திரைப்பட வெற்றிக்கு படக்குழுவினர் மிகவும் தகுதியானவர்கள். இந்த படத்திற்காக இயக்குநர் பிரதீப்பிற்க்கு நன்றி கூறி கொள்கிறேன். பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசன். இதுபோன்ற பல படங்களை AGS-தர வேண்டும்.”
நடிகர் சதீஷ் கூறியதாவது…
AGS தொடர்ந்து இரண்டு புதுமுக கதாநாயகர்களை வைத்து திரைப்படம் எடுத்தார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இதுபோன்று அவர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். பிரதீப் உடைய இந்த வெற்றி உண்மையான வெற்றி. அவர் இதை தாண்டுவதற்கே அடுத்து கடினமான உழைப்பை கொடுக்க வேண்டும். மிகச்சிறந்த வெற்றியை அவர் பதிவு செய்து இருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.”
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…
“இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் எனது நன்றி. இந்த படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த படம் AGS-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது, அதற்கு வாழ்த்துகள். இதுபோன்ற பல வெற்றிகளை அவர்கள் அடைய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.”
Dr ஐசரி கணேஷ் பேசியதாவது…
சினிமாவில் பல ஆண்டுகளாக 100 நாள் நிகழ்ச்சி இல்லை. AGS இப்போது அதை செய்து இருக்கிறார்கள். அதில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பிரதீப் உடைய முதல் படத்தை நான் தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதுவும், நூறு நாள், இதுவும் நூறு நாள், இதுபோன்று தொடர்ந்து அவர் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். பிரதீபிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
நடிகை இவானா பேசியதாவது…
“இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி விழா மேடையில் நான் இருப்பது என் வாழ்கையின் மிகமுக்கியமான தருணம். இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்த படக்குழு கொடுத்த அரவணைப்பு எனது வாழ்கையின் மிகமுக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. என்னுடன் இந்த படத்தில் பணிபுரிந்தத அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.”





கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது…
“பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்த மேடை பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. லவ்டுடே கதையை கேட்கும் போதே நம்பிக்கையை கொடுக்க கூடிய வகையில் இருந்தது. அது தான் படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியாயின. லவ்டுடே போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள் என்று பலர் கெட்ட போது, இயக்குநர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.”
இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது…
“ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் AGS அதற்கு முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த AGS குழுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். அடுத்ததாக எனது தொழில்நுட்பக்குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள். அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி.”