‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ ( LSS ) திரைப்பட விமர்சனம்

ஆதவ் கிருஷ்ணா ,சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் ,ரோஹித், தனஞ்செயன், முத்து பவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆர் .மகாலட்சுமி முருகன் எழுதி இயக்கியுள்ளார். என்.எஸ். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பு செய்துள்ளார். ரஜினி சேகர் கலை இயக்கம். பி.ரகு தயாரித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த வசதியான வீட்டுப் பெண் நாயகி சிம்ரன். தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தந்தை அரவணைப்பில் வளர்கிறார்.அப்படிப்பட்ட சிம்ரன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை விரும்புகிறார். ஒரு புரிதலுக்குப் பிறகு அவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோருக்கு சிம்ரனைப் பிடித்து விடுகிறது. அவர்கள் இந்தக் காதலுக்குப் பச்சைக் கொடிகட்டிச் சம்மதிக்கிறார்கள்.ஆனால் சிம்ரனின் தந்தை கறுப்புக் கொடி காட்டுகிறார். எதிர்க்கிறார், இதைத் தனது கௌரவப் பிரச்சினையாகக் கருதுகிறார்.இந்த நிலையில் பிரிந்து சென்ற தனது தாயைச் சந்திக்க விரும்புகிறார் சிம்ரன்.அதை முன்னிட்டு காதலனை அழைத்துக் கொண்டு காசி செல்கிறார்.காதலர்கள் இருவரும் காசிக்குப் பயணம் செல்கிறார்கள். அங்கே தனது அம்மாவைத் தனியாகப் பார்த்து, தன் காதலைப் பற்றிக் கூறுகிறார் சிம்ரன்.ஒரு அசந்தர்ப்பத்தில் சிம்ரன் காணாமல் போய்விடுகிறார். இதனால் ஆதவ் கிருஷ்ணாவுக்குப் பல பிரச்சினைகள் ,மிரட்டல்கள், துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. சிம்ரன் எங்கே சென்றார் ? அவருக்கு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா என்பது தான்138.10 நிமிடங்கள் கொண்ட LSS என்கிற  ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ (Love, Share, Subscribe)திரைப்படத்தின் மீதிக் கதை.

சென்னையில் ஒரு காலத்தில் LSS ,என்பது பேருந்துகளில் பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையிலான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்.அதைக் குறிக்கும் வகையில் அதாவது Limited Stop Service என்பதைக் காட்டுவதற்காக LSS என்று பேருந்துகளில் போடப் பட்டிருக்கும்.இந்த LSS என்பது Love, Share, Subscribe என்பதைக் குறிக்கிறதாம்..(SSS என்பது Selected Stop Service. இவ்வகைப் பேருந்துகள் சில குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும்)

இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆதவ் கிருஷ்ணா புதுமுக நடிகராக இருந்தாலும்  நம்பிக்கையோடு நடித்துள்ளார். மிதமான துள்ளல் தோற்றம் நடிப்பு என்று அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்பட்டுள்ளார்.நாயகியாக நடித்துள்ள இந்தப் புதிய சிம்ரன் எளிமையான தோற்றத்தில் வந்து பார்ப்பவர் மனதில் அமர்ந்து கொள்கிறார் .அவர் தனது நடிப்புப் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார்.கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் படவா கோபி, தாயாக நடித்த வினோதினி ஆகியோருக்கு அந்தப் பாத்திரங்கள் பொருந்தியுள்ளன. இருந்தாலும் அவர்களுக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை.

சிம்ரனின் தாயாக வருபவர் வட இந்தியரின் தோற்றத்தில் நடித்துள்ளார்.அவர் பிரிந்து சென்ற பின்புலம் சரியாக விளக்கப்படவில்லை.

நாயகியின் தந்தை மணிப் பாலாக பெப்பர்சால்ட் தலையுடன் நடித்திருக்கும் நடிகர் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கிறார். பிற்பாடு தான் பேச ஆரம்பிக்கிறார். ஏன் இந்த முரண் தெரியவில்லை.நாயகனுக்கு டூவீலரில் லிப்ட் கொடுத்து போலீஸில் மாட்டிக் கொள்ளும்
ஜாவா சுந்தரேசன் சிரிக்க வைக்க முயல்கிறார்.ரோஹித், தனஞ்ஜெயன், முத்து பவன் போன்றவர்கள் துணைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என் .எஸ் . சதீஷ்குமார் சென்னையையும் காசியையும் பின்புலக் காட்சிகளாகப் படப் பதிவு செய்துஅழகாகப் பதிய வைத்துள்ளார்.

அஸ்வமித்ரா இசையில் பாடல்களில் காதல் மணம் வீசுகிறது .பின்னணி இசையிலும் பிழையில்லை.

படத்தில் வேகத்தடை உணராத வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீகாந்த்.

சமகாலத்து இளைஞர்களின் காதல் கதையாக இதைக் கூறி இருக்கிறார்கள். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர். மகாலட்சுமி முருகன் காதல் கதையோடு பெற்றோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளார். 

சிம்ரனின் தாயார் பற்றிய ஒரு முன் கதை சரியாகச் சொல்லப்பட்டிருக்கலாம் .பின்புலக் காட்சிகளுக்காகவே காசி சென்றிருக்கிறார்கள் போலும். கதையைக் காசிக்குக் கொண்டு சென்றது ஏன் என்பதற்கான காரணங்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை.

முதல் பாதியில் காதல் என்றும் இரண்டாவது பாதியில் பிரிவு, பெற்றோர்களின் உணர்வலைகள், காதலர்களின் நம்பிக்கை போன்றவற்றையும் திரைக்கதையில் கொடுத்துள்ளார்.
ஆனாலும் காதலர்களுக்கு இடையே அழுத்தமான காட்சிகள் இல்லாமல் மேலோட்டமாக உள்ளது. எனவே ஏதோ ஒரு போதாமையை உணர வைக்கிறது படம்.காதலிக்க இருவர் மட்டும் போதாது பெற்றோர், குடும்பம், சுற்றியுள்ள சமூகம் போன்றவற்றின் பங்கு என்ன என்பதற்கான காட்சிகளும் இதில் உள்ளன. எனவே இந்தப் படத்தை இளைஞர்கள் மட்டுமல்ல பெரியோர்களும் பார்க்கலாம்.