சந்தானம் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சாமிநாதன்,சேசு, கூல் சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.வி. விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.
இது 70களில் நடக்கும் கதை. வடக்குப்பட்டி என்பது வடதமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் .அங்கு ஒரு வெள்ளம் வந்ததால் பாலம் உடைந்து ஊர் தெய்வம் கண்ணாத்தாவின் சிலை ஆற்றோடு போய்விடுகிறது. அதனால் ‘சாமி குத்தம்’ ஏற்பட்டுவிட்டதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள்.அதனால்தான் அவ்வப்போது அந்த ஊரில் காட்டேரி தாக்குவதாகவும் ஊரில் பீதி கொண்டிருக்கிறார்கள்.
சரியான விளைச்சல் இன்றி பிழைப்புக்கு வழியின்றி சுபிட்சமின்றி இருக்கிறது அந்தக் கிராமம். அதனால் மக்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.ஆனாலும் கண்ணாத்தாவை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சட்டி பானை வியாபாரம் செய்யும் சிறுவன் ராமசாமிக்கு கண்ணாத்தா மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒரு திருடன் வந்து ஒரு திருட்டு செயலைச் செய்து விட்டுக் தப்பித்து ஓடுகிறான் .ஊர்காரர்கள் துரத்தவே, தப்பிச் செல்வதற்கு முன் கொள்ளையடித்த நகைகளை ஒரு பானையில் போட்டுப் புதைத்து வைத்து விட்டு ஓடிவிடுகிறான். புதையலாக அதைப் பார்த்த ஊர்க்காரர்கள்,அது கண்ணாத்தாவின் அற்புதம் என்று நம்புகிறார்கள்.
இப்படி இருக்கும்போது அந்த நம்பிக்கையை வைத்து வணிகமாக மாற்றி காசு பண்ண நினைக்கிறார் ராமசாமி என்கிற சந்தானம்.பக்தி, அருள்வாக்கு என்று நல்ல வசூல் ஆகிறது.அதை வைத்துக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து பெரிய அளவில் சம்பாதிக்க நினைக்கிறார்.மூன்று நாட்களுக்குள் கும்பாபிஷேகம் என்று ஏற்பாடுகள். ஆனால் அதற்குத் தாசில்தார் குறுக்கே நிற்கிறார்.இது பற்றி அவர் தடுக்க நினைக்கும் போது, அனைவருக்கும் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோயைப் பரப்பி ஆத்தா கண்ணை குத்தி விட்டதாகக் கதை விடுகிறார் சந்தானம்.மக்களும் அதை நம்புகிறார்கள். இதற்கு எதிராக தாசில்தார் இந்தச் சதியை முறியடிக்க எதிர்க் களத்தில் நிற்கிறார்.
அந்த ஊரில் படித்த டாக்டர் ஆன மேகா ஆகாஷும் அந்த மூடநம்பிக்கைக்கு எதிராக இணைந்து கொள்கிறார்.மக்களின் நம்பிக்கையா? அறிவியல் எதார்த்தமா?எது ஜெயிக்கும் என்கிற சவால் எழுகிறது.இவர்களுக்குள் நடக்கும் போட்டோ போட்டியும் இடையில் நடக்கும் நகைச்சுவைக் களேபரங்களும் தான் 145.26 நிமிடங்கள் ஓடும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் கதை.நகைச்சுவை, சிரிக்க வைப்பது என்ற ஒரே நோக்கில் அனைத்து விதமான விதிகளையும் மீறி திரைக்கதையை உருவாக்கிச் சிரிக்க வைக்கிறார்கள்.
படத்தின் நாயகன் சந்தானம் வழக்கமான காதல், ஜோடி ,டூயட் எதுவும் இல்லாமல் தனியே நின்றே படத்தைத் தன் தோளில் தாங்குகிறார்.மேகா ஆகாஷ் டாக்டருக்குப் படித்த கயல்விழி பாத்திரத்தில் பாந்தமாக வந்து போகிறார்.வழக்கம்போல தனது கேலி, கிண்டல் ,நக்கல் பேச்சின் மூலம் கலக்குகிறார். அது மட்டும் அல்ல அவர் கூடவே கையாளாக நடிக்கும் மாறன் கூட நிறைய பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார்.நடிகர் சேசு இதில் பூசாரியாக வந்து அதகளம் செய்கிறார்.
இந்தக் கச்சேரியில் நடக்கும் நாடகீய தருணங்களில் ஜான்விஜய், ரவி மரியா, எம் எஸ் பாஸ்கர் ,கூல் சுரேஷ் என அனைவரும் நிலைய வித்துவான்களாக மாறிச் சிரிக்க வைக்கிறார்கள்.இப்படிச் சிரிக்க வைக்கும் பாத்திரங்களில் நடித்தாலும் மூக்கையன், காளையன்,பூசாரி,மேஜர் சந்திரகாந்த்,தன்ராஜ் என்று அந்தந்த பாத்திரத்திற்கும் ஒரு குணச் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திரைப்பட ஊடகத்தை ஒரு நாடகம் போல் மாற்றியிருந்தாலும் கூட படத்தில் தேவையற்ற அலங்காரங்கள் பிரம்மாண்டங்கள் எதுவும் இல்லாமல் அனைத்தையும் மறந்து சிரிக்க வைக்க முடிகிறது என்பதுதான் இயக்குநர் கார்த்திக் யோகியின் சாமர்த்தியம்.
சிரிப்பு ஒன்றே குறியாக நினைத்துப் படத்தை எடுத்து இருப்பதால் எந்தக் கேள்வியும் இல்லாமல் படத்தைப் பார்த்துச் சிரித்து விட்டு வரலாம்.
இயக்குநரின் இந்த நோக்கத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக், இசையமைத்திருக்கும் ஷான் ரோல்டன், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் பக்கபலமாக நின்றிருக்கிறார்கள்.
முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் நகைச்சுவையின் எடை கூடி உள்ளதால் மன இறுக்கம் தளர வேண்டும் என்று இளைப்பாறுதல் தேடித் திரையரங்கு செல்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.