கொரோனாத் தொற்று அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இன்றுடன் 120 நாட்கள் மக்கள் முடங்கியுள்ளனர். ‘வால்டர்’ , ‘அசுரகுரு’ படங்களுக்குப் பிறகு எந்தப் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்.
இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ வெளியானது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’ படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
பி.ஜி.மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையாவும், தீபாவும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம்தான் ‘டேனி’.இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கொரோனா தாக்குதலுக்கு முன்பாகவே திரைக்கு வரத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் திரையரங்குகள் மூடப்பட்டதால் புதிய முயற்சியாக ஓ.டி.டி. என்னும் இணையத் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று ‘ZEE-5’ என்னும் ஓ.டி.டி. தளத்தில் இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.படம் பற்றி தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா பேசும்போது, “தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்திlஃதான் இந்தக் கதை நடக்கிறது.அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் ‘பிங்கி’ என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர்தான் ‘டேனி’. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதுதான் இந்த ‘டேனி’ படத்தின் கதை.இந்த வழக்கை விசாரிக்கும்போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும்…” என்றார்.
இத்திரைப்படம் பற்றியும் தனது கதாபாத்திரம் பற்றியும் படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் பேசும்போது, “நாய் என்ன நம்மைவிட குறைவா…? அந்த டேனி என்கிற நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ. இதில் நான் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக்கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இ்ந்தப் படத்தின் கதை. தேவையில்லாமல் ஒரு காட்சிகூட படத்தில் இருக்காது.நாய்க் குட்டியுடன் நடித்ததுதான் இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம். படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப் பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்றுதான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியோ பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்து கொடுத்தது…” என்று மிகவும் ஆச்சரியத்துடன் பேசினார். இப்படத்தில் வேல.ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாடல் இசை – சந்தோஷ் தயாநிதி, பின்னணி இசை – சாய் பாஸ்கர், ஒளிப்பதிவு – பி.ஆனந்த்குமார், படத் தொகுப்பு – எஸ்.என்.பாசில், கலை இயக்கம் – தினேஷ் மோகன், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், நடனம் – டி.ரகுவரன், வசனம் – சந்தானமூர்த்தி, பாரதி தம்பி, மதன் குமார், பாடல்கள் – ரா.தனிக்கொடி, சதீஷ்குமார், சாய் பாஸ்கர், தயாரிப்பு நிர்வாகம் – உமா மகேஸ்வர ராஜூ, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – டி.அருண்ராஜா, நிர்வாகத் தயாரிப்பு – செளந்தர் பைரவி.