வலிமையுள்ளவன் அதிகாரத்துக்கு வருவதைப் பற்றி வல்லான் வகுத்ததே வாய்க்கால், என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் பழமொழிகள் உள்ளன. ‘வலிமை உள்ளவன் தனக்கானதை எடுத்துக் கொள்வான்’ என்று நினைப்பவன் ஒருவன்.’வலிமை உள்ளவன் எளியவனுக்கு உதவ வேண்டும்,’ என நினைக்கும் இன்னொருவன்.இப்படிப்பட்ட இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கு இடையே நடக்கும் யுத்தம்தான் ‘வலிமை’.
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்குப் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது.அந்தக் கடத்தல் கும்பலில் ஒரு பிரிவு சென்னையில் கொலை, கொள்ளை எனப் பல குற்றச் சம்பவங்களை அரங்கேற்றுகிறது. இதற்குக் காவல் துறையில் சிலர் உடந்தை.
இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் ஓநாய்களை வலைவீசிப் பிடிக்கவும் யார் வரப் போகிறார் என்கிறபோது சூப்பர் போலீஸாக வரும் அஜித், இந்தக் கொள்ளை, கொலை கும்பலை என்ன செய்கிறார் என்பதே ‘வலிமை’ படம்.
உதவி கமிஷனர் அர்ஜுன் கதாபாத்திரத்தில் வரும் அஜித், இளமையான தோற்றத்தில் வருகிறார்.வழக்கமான தன் ஸ்டைலில் ஓப்பனிங்கில் மாஸ் என்ட்ரி கொடுப்பதில் இருந்து இறுதிக்காட்சி வரை ஒட்டுமொத்தப் படத்திலும் தனது நேர்த்தியான நடிப்பைக் காட்டியுள்ளார்.
குற்றவாளிகளின் கைகளுக்கு மாவுக்கட்டு போடவைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்தின் நிலை அறிந்து பண உதவிசெய்யும் போலீஸ் அதிகாரியாக ,குடும்பத்தின் பாரங்களைத் தன தோளில் சுமக்கும் ஒரு மகனாக, சகோதரனாக அவருக்கே உரிய அக் மார்க் அறிவுரை வசனங்கள், ஸ்டைல் என மாஸ் ஹீரோ தகுதியைத் தக்கவைக்கிறார்.
சண்டைக்காட்சிகளில், குறிப்பாக பைக் ரேஸ் போன்றவற்றில் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்த கடுமையாக உழைத்துள்ளார்.ஏற்கெனவே அவர் பைக் ரேஸர் என்பதால் பொருத்தமாகத் தெரிகிறார். ஆனால், அஜித் வரும் சில சென்டிமென்ட் காட்சிகள், அவருக்குப் பொருந்தவில்லை.மிகையாக உணரவைக்கிறது.
வில்லன் கார்த்திகேயாவுக்கு. அஜித்தை எதிர்க்கும் வில்லன் வேடம். அவரது தோற்றமும் உடல்மொழியும் நடிப்பும் நாயகனுக்கு நிகராக மனதில் பதிகிறது.
நடிகை ஹூமா குரேஷி ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக வந்து தனக்குக் கிடைத்த வாய்ப்பில் நன்றாக நடித்துள்ளார். அதேபோல் சுமித்ரா, அச்யுத் குமார், ஜி.எம். குமார், ராஜ் ஐயப்பன் என ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பலனைக் கொடுத்துள்ளனர்.
திலீப் சுப்பராயனின் கண்டைக் காட்சிகளும், அதைக் காட்சிப்படுத்திய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம் எனலாம்.
பின்னணி இசையில் ஜிப்ரானும், பாடல்களில் யுவன்சங்கர் ராஜாவும் கவனம் ஈர்க்கின்றனர்.
பைக்கர்களை கொண்டு சென்னையில் நடக்கும் குற்றங்கள் நடப்பதாக விறுவிறு காட்சிகளுடன் படத்தின் தொடக்கக் காட்சி விரிகிறது. பரபரப்பான பைக் சேஸிங், விசாரணை என முதல் பாதி இதே விறுவிறுப்பு குறையாமல் செய்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் அதைப் பராமரிக்கத் தவறிவிட்டார்கள்.படத்தின் நீளம்தான் , சற்று உறுத்தல்.இதில் சில குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் காட்சியமைப்புகள் மூலம் அதை ஈடுசெய்துள்ளார் வினோத்.
பைக் சேஸிங், பஸ் ஸ்ட்ண்ட் என ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுசெல்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இடைவேளை முடிந்து வரும் அந்த போலீஸ் வேன், பைக்கர்ஸ் சண்டையாகட்டும் ஓர் ஆவேசக் கதாநாயனாக அசத்தியுள்ளார் அஜித்.
படக்குழுவினர் சொல்லிக் கொண்டு இருந்ததைப் போல இது இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படம்தான்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற தன் முந்தைய படங்களில் குற்றத்தின் தன்மையை நுணுக்கமாகப் பதிவு செய்த இயக்குநர் ஹெச்.வினோத், இப்படத்தில் எல்லாவற்றையும் விட அஜித் என்ற கதாநாயக பிம்பம் உள்ள நட்சத்திரத்தின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவே முயன்றுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.அந்த சமரசத்தில் இப்படத்தை உருவாக்கி உள்ளது புரிகிறது.
‘வலிமை ‘தல ரசிகர்களுக்கான தலைவாழை இலை சாப்பாடு.