’வல்லவன் வகுத்ததடா’ விமர்சனம்

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.விநாயகக் துரை எழுதி தயாரித்து இயக்கியுள்ளார்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,வினை விதைத்தவன் வினை அறுப்பான் போன்ற பொன்மொழிகள் நமது வினைக்கு எதிர் வினை உண்டு என்று சொல்கின்றன.

இந்தக் கருத்தை மையக் கருவாக வைத்துக்கொண்டு, ஆறு கதாபாத்திரங்களைவைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதை தான் ‘வல்லவன் வகுத்ததடா’.இவர்களை வைத்து நடக்கும் கதையை ஹைப்பர் லிங்க் பாணியில் சொல்வதுதான் ‘வல்லவன் வகுத்ததடா’.

பணத்திற்காக எதுவும் செய்யலாம் எதுவும் தவறில்லை என்ற கொள்கை கொண்ட ஐந்து பேர் ,அதே வழியில் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.நெறியோடு வாழ வேண்டும் என்று செயல்படும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழக்கிறார்.தொடர்ந்து துன்பங்கள் அனுபவிக்கிறார்.
இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை என்றாலும் பணம் என்கிற வழியே விதி அவர்களை இணைக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரசியமாக சொல்கிற படம் தான் வல்லவன் வகுத்ததடா.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை.

இப்படத்தில் நடித்துள்ள நடிப்புக்கலைஞர்கள் வெவ்வேறு படங்களில் சிறு அறிமுகம் கொண்டவர்கள் என்றாலும் இதில் அழுத்தமான வேடங்களை ஏற்று உள்ளார்கள்.
அனைவரும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வுதான். அவர்களும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி உடல் மொழி காட்டி நடித்துக் கவனம் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து தயாரிப்பாளரின் நிலை புரிந்து, கதை செல்லும் வட்டத்திற்குள் தனது கேமராவை சுழல விட்டு தனது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியருக்கு பாடல்களுக்கு மெட்டமைக்க வாய்ப்பில்லை என்றாலும், காட்சிகளுக்கு உயிரோட்டம் தரும் வகையில் பின்னணி இசையை வழங்கி  உள்ளார்.

ஆறு கதாபாத்திரங்களைச் சுற்றிச்சுழலும் இக்கதையை எவ்வித குழப்பமும் இன்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் அஜய்.

இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பதால் சில தடைகள் உண்டு. அதை மீறி இந்தப் படத்தை நேர்த்தியாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் தயாரிப்பாளர் விநாயக் துரை.பெரிய கேன்வாஸ் உள்ள கதையை பட்ஜெட்டில் அழகாகக் கொடுத்துள்ளார்.எளிய கதையை சுவாரஸ்யமான திரைமொழில் கொடுப்பதுதான் இயக்குநர்களுக்கு முன் உள்ள சவால் .அதைச் சரியாகவே எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

மொத்தத்தில், இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ சினிமா ரசிகர்களைக் கவரும்.