சில படங்களைப் பார்க்கும்போது இதையெல்லாம் திரையரங்கில் பார்ப்பார்களா என்று நினைப்போம். ஓடிடியில் வெளிவரும் சில நல்ல படங்களைப் பார்த்தால் இவையெல்லாம் ஏன் திரையரங்குகளுக்கு வரவில்லை என்று தோன்றும். அப்படித் திரையரங்கத் தகுதியோடு வந்துள்ள படம் தான் ‘வான் மூன்று’.
சினிமாகாரன் சார்பில் அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில் வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 11 – ல் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மூன்று பேரின் முக்கியமான வாழ்க்கை பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.அந்த மூன்று வாழ்க்கையும் வானம் போல் விரிகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம்,நீர்க்குமிழி படங்களைப் போன்று மருத்துவமனைப் பின்னணியில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் பின்னே ஒவ்வொரு கதை இருக்கும். அப்படி ஒரு மருத்துவமனையில் மூன்று முக்கிய கதைமாந்தர்கள் சந்திக்கும் சிக்கல்களை அடிப்படையாக வைத்துக் கதை நகர்கிறது.மனைவியின் உயிரைக் காப்பாற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் டெல்லி கணேஷ், காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அம்மு அபிராமி, வீட்டு எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்த ஒரு ஜோடி என மூன்று வகை மனிதர்களை வைத்துக் கதைபின்னப்பட்டுள்ளது.
இந்த மூவரும் ஒருவரிடம் இன்னொருவர் தங்களது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.ஒருவரிடம் ஒருவர் இப்படிப் பகிர்ந்து கொள்வது நம்மையும் அவர்களில் ஒரு பாத்திரமாக உணர வைத்து கதைக்குள் ஈர்க்கிறது.படம் பார்ப்பவரையும் பாத்திரமாக மாற்றிடும் இந்த உணர்வுடன் காட்சியை வடிவமைத்த இயக்குநரைப் பாராட்டலாம்.
பிரச்சினைக்கான தீர்வுகள் சக மனிதர்களிடம்தான் உள்ளன என்று அப்படிப் பேசிக் கொள்ளும் காட்சிகள் உணர வைக்கின்றன.
காதல் தோல்வி தவிர்த்து மற்ற இரண்டு கதைகளுமே உயிருக்கு உயிரானவர்களை இழக்க நேரிடும் துயரம் தரும் வலியைப் பேசுபவை.காதல் தோல்வி ஜோடி ஆதித்யா பாஸ்கர்- அம்மு அபிராமி, முதுமையில் கனிந்த காதலுக்கு டெல்லி கணேஷ் – லீலா சாம்சன், இளம் கணவன் மனைவிக்கு வினோத் கிஷன்- அபிராமி வெங்கடாசலம் என, இந்த மூன்று இணைகளும் முப்பரிமாணம் போல் மாறுபட்ட உணர்வுகளைக் கடத்துகின்றன. காதலுக்கு வயதில்லை என்று அவர்களில், முதிர்ந்த காதல் ஜோடி நம்மைக் கூடுதலாக வசப்படுத்துகிறது.
டெல்லி கணேஷ் தனது பாத்திரத்தில் கரைந்து போய் உள்ளார். அந்த வயதான கணவராக வாழ்ந்திருக்கிறார். தனது மனைவி காப்பாற்ற பணத்துக்காகப் பரிதவிக்கும் போது கலங்க வைத்து விடுகிறார். லீலா சாம்சன் நம் வீட்டில் இருக்கும் பாட்டியை நினைவூட்டுகிறார். அம்மு அபிராமியோ எதுவும் கடந்து போகும் என்பது போல் வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து நடித்துள்ளார்.
அஜய் மனோஜின் எடிட்டிங்கில் தெளிவாகச் செல்கிறது கதை.
கதை மருத்துவமனையில் குறிப்பிட்ட லொகேஷன்கள் என்று நகர்ந்தாலும் கதை சொல்கிற போக்கில் உயிரோட்டமான பாத்திரங்களின் மூலம் சலிப் பூட்டாமல் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஏ எம் ஆர் முருகேஷ்.
படத்திற்குப் பக்க பலமாக மட்டுமல்ல பக்கா பலமாக இருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ் மற்றும் இசையமைப்பாளர் ஆர் 2 பிரதர்ஸ்.
அருகருகே வீடுகள் இருந்தாலும் மனங்களால் தூரமாக இருக்கிறோம்.என்பதே இன்றைய அவசர யுகத்தின் கசப்பான உண்மை. உள்ளங்கைக்குள் உலகத்தை தரிசிக்கும் நாம், உலகத்துடன் தொடர்பு கொள்ளும் நாம் சக மனிதர்களைக் கண்டு கொள்வதில்லை. கண்டுகொள்ள வேண்டும் என்கிற கருத்தை அழகாகச் சொல்லி உள்ளது படம்.சிற்சில இடங்களில் நாடகீயத் தருணங்கள் இருந்தாலும் நல்ல கருத்துக்காக இந்தப் படத்தை நிச்சயம் வரவேற்கலாம்.