சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது நம்ம ஆளு படத்தில் பிரபலமான பலரின் வாரிசுகள் இணைந்துள்ளனர்.சிம்பு,குறளரசன்,மதன் கார்க்கி,ஸ்ருதி ஹாசன்,யுவன் சங்கர்ராஜா,ஸ்ரீராம் பார்த்தசாரதி எனப் பல வாரிசுகள் பங்கு பெற்றுள்ளார்கள்.
இப்படத்தின் மூலம் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், சிம்புவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் பாடல்களை வெளியிட்டனர். இந்த விழாவில் டி.ராஜேந்தர், குறளரசன் கலந்து கொண்டனர்.
இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘சிம்பு பிறந்தநாளில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் சிம்பு, குறளரசனுடன் நானும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதும், கதாநாயகனாக அறிமுகப்படுத்திய போதும் நீங்கள் கொடுத்த ஆதரவை போல, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் குறளரசனுக்குத் தரவேண்டும்.
இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. ஒரு பாடலை ஆண்ட்ரியாவை வைத்தும் மற்றொரு பாடலை பிரம்மாண்டமாகவும் படமாக்க இருக்கிறோம். மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது. சமீபத்தில் வந்திருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சட்டப்படி எதிர் கொளவோம் .இறைவன் அருளால் வெல்வோம்.’ என்றார்.
குறளரசன் பேசும்போது, ‘முதலில் என் குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் படத்திற்கு முதலில் இசையமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்திற்காக நிறைய டியூன்களை தயார் செய்தேன். அதில் சிறந்ததை தேர்வு செய்து இசையமைத்திருக்கிறேன். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஸ்ருதி ஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் இயக்குநர் பாண்டிராஜ்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பற்றி நிறைய செய்திகள் வந்தது. பாடல்களுக்கு இசையமைக்க லேட் செய்கிறேன் என்று. எல்லா பாடல்களும் நல்லதாகவும் சிறப்பாகவும் வரவேண்டும் என்பதற்காகத்தான் தாமதம் ஆனது. நான் இசையமைத்த பாடல்களை இயக்குநர் பாண்டிராஜ் கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.” இவ்வாறு குறளரசன் சொன்னார்.”
சிம்பு சர்ச்சைகள் கருதி இவ்விழாவைத் தவிர்த்து விட்டதால் கலந்து கொள்ளவில்லை.