கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், கருணாகரன், ராமன், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், நிழல்கள் ரவி,யார் கண்ணன், நிவாஸ் ஆதிதன், பி. எல். தேனப்பன்,வித்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நலன் குமாரசாமி,ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC,இசை : சந்தோஷ் நாராயணன்,கலை இயக்கம் : டி. ஆர். கே. கிரண்,படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன்,சண்டை: அனல் அரசு,
இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா,ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பு : கே. ஈ. ஞானவேல்ராஜா.
புகழோடு வாழ்ந்த ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்ததும் வரலாறு ஆகிறான். பிறகு நினைவுகளில் தங்குகிறான். பிறகு தெய்வமாகப் பார்க்கப்படுகிறான். அதன்பின் தொன்மமாக மாறிவிடுகிறான்.அப்படி மாறிய பிறகு அவனைப் பற்றிய கதைகள் நிறைய கற்பனையாகவே எழுந்து வரும். அவற்றின் பரவலைத் தடுக்கவே முடியாது.அப்படி எம்ஜிஆர் என்ற பிம்பம் தொன்மமாக மாறிய விதத்தில் இந்தக் கதை உருவாகி இருக்கிறது. ஒரு மனிதர் மீது பல தெய்வங்கள் அருள் கிடைத்து அதுவாக மாறுவதாக படங்கள் பார்த்திருக்கிறோம் அப்படி எம்ஜிஆர் அருள் பெற்ற ஒரு பாத்திரத்தைப் பற்றிய கதைதான் இந்த ‘வா வாத்தியார் ‘.
சிலம்பப் பிரியரான ராஜ்கிரண் ஒரு எம்ஜிஆர் பக்தர்.வெறும் ரசிகராக இருப்பது மட்டுமல்லாமல் எம்ஜிஆரைப் போல நெறியோடு வாழ முயற்சி செய்கிறார்.தன் பேரன் வாங்கிய லாட்டரி சீட்டில் பரிசு விழுந்த போது உழைக்காமல் கிடைக்கும் காசு தேவையில்லை என்று அந்த லாட்டரி சீட்டைக் கிழிக்கும் அளவிற்கு நேர்மையானவராக இருக்கிறார்..அப்படிப்பட்டவருக்கு எம்ஜிஆர் மறைந்த தினத்தன்று ஒரு பேரக் குழந்தை பிறக்கிறது. எம்ஜிஆரின் அம்சம் என்று சொல்லியே அதை வளர்க்கிறார்.அந்தப் பேரன் தான் கார்த்தி.சிறு வயதில் தாத்தா பேரனை ஒரு எம்ஜிஆர் என்று நம்பினாலும் பேரனோ நம்பியார் ரசிகராக எதிர்மறை சிந்தனைகளோடு இருக்கிறார்.அப்படிப்பட்ட கார்த்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அனைத்து முறைகேடுகளும் செய்யத் தயாராகிறார்.பெரிய பண முதலைகளின் கைக்கூலியாக மாறுகிறார்.சத்யராஜ் உடன் இணைந்து மக்கள் விரோத பணிகளுக்குத் துணை போகிறார்.தன் பேரன் இப்படி வழி மாறியதில் மனம் நோகிறார் ராஜ்கிரண்.ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார்.அதன் பிறகு தாத்தாவின் நினைவு கார்த்தியைத் தொந்தரவு செய்கிறது.அவரை அறியாமல் அவருக்குள் எம்ஜிஆரின் உணர்வு அல்லது அருள் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவிக்கிறது. அதாவது மனிதர் மீது சாமி வந்து மலையேறுவது போல் இவர் பாத்திரத்தின் மீது எம்ஜிஆர் அருள் வந்து மலையேறுகிறது.அது பல்வேறு சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் கலகலப்பு களுக்கும் திருப்பங்களுக்கும் வழிவகுக்கிறது. அதன் பின் நடப்பது என்ன என்பதே படத்தின் மீதிக் கதை. இப்படி அதீத கற்பனை கொண்ட கதையை எடுத்துக்கொண்டு பேண்டஸி ரகத்தில் ஒரு முழு நீளப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.அதுவே ‘வா வாத்தியார்’.
இப்படி ஒரு கற்பனைக் கதையை எடுத்துக் கொண்டாலும் மக்களிடம் தாக்கம் பெற்ற நாட்டு நடப்புகளையும் கலந்து கட்டி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே கூற வேண்டும்.
ராமேஸ்வரன்,ராமச்சந்திரன் என்று இருமுகம் காட்டும் கார்த்தி அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் எதிர்மறைக் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவருக்குள் எம்ஜிஆர் விளைவு நிகழும் போது எம்ஜிஆர் தோற்றம் காட்டி, உடல் மொழி, பேச்சு எல்லாமும் மாற்றி மாறி விடுகிறார்.சில நேரம் போலீசும் எம்ஜிஆரும் என மாறி மாறி முகபாவம் காட்டி நடிப்பில் புகுந்து விளையாடுகிறார்.எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டிக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அவர் போலியாக அலறும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.இளமையும் அழகும் கொண்ட அவரது திரைத்தோற்றம் படம் பார்ப்பவர்களுக்கு நிறைவைத் தரும்.
எம்.ஜி.ஆர் ரசிகராக பூமிப்பச்சை பாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண்,முரட்டுத்தனமான ரசிகராக முகத்தில் அப்பாவித்தனம் பூசிக் கொண்டு அசத்தியிருக்கிறார்.
பெரிய பல்லுடன் வித்தியாசமான தோற்றத்தில் பெரியசாமியாக- வில்லனாக வரும் சத்யராஜ்,அமைதிப்படை அமாவாசையை நினைவூட்டினாலும் தனக்கான பகுதியில் புகுந்து விளையாடியுள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன்,எதிர்பாராத தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹா என அனைவரும் தங்கள் இருப்பை உணர்த்தும் வகையில் வருகையைப் பதிவு செய்துள்ளார்கள்.
முன்னோக்கிய காலகட்டத்தைக் காட்டும் போதும் சரி வண்ணங்களை வாரி இறைக்கும் போதும் சரி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து பணியாற்றியுள்ளார்.சண்டைக் காட்சிகள், இரவு நேரக் காட்சிகளில் அவர்கள் ஒளி அமைப்பு பாராட்ட வைக்கிறது. 
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. .ஆனாலும் பழைய பாடல்களை உரிய இடங்களில் போட்டு படத்தை வேறொரு கால வெளியில் பயணிக்க வைத்துள்ள விதம் சிறப்பு.
குழப்பத்துக்கு இடமின்றி படம் தொகுப்பு செய்துள்ளார் வெற்றி கிருஷ்ணன்.
எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, புதிய திரைக் களம் புதிய பாதை புதிய பயணம் என்று இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு கற்பனையை எந்தக் தயாரிப்பாளரும் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்வது சிரமம் .அதை சாத்தியப்படுத்தி இருக்கும் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜாவுக்கும் சபாஷ் போடலாம்.
24.12.1987 ல் தொடங்குகிறது கதை. இந்தப் படத்திற்காக மாசிலா நகர் என்ற கற்பனை நகரை உருவாக்கி இருக்கிறார்கள். மாசிலா ஒளி என்று பத்திரிகை கூட வருகிறது.இப்படி எண்பதுகளை நினைவூட்ட நிறைய உழைத்து இருக்கிறார்கள்.மஞ்சள் முகம் ஹேக்கர்ஸ், பெல்கோ ஆலை போன்றவை சூசகமாக நாட்டு நடப்பைச் சொல்கின்றன.
கார்த்தி ரசிகர்களையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் வைப்பது ?ஆனால் அப்படி அவர்களை வைக்கும்படியான இந்தப் படத்தைக் கொடுத்து வியக்க வைத்துள்ளார் இயக்குநர் நலன் குமாரசாமி. பண்டிகை காலக் கொண்டாட்டமாக இந்த படம் அமைந்துள்ளது .இது ஒரு காவியம் அல்ல. ஆனாலும் திரையரங்கில் ரசிக்கத் தக்க அம்சங்கள் கொண்ட ஒரு முழு நீள வணிகப் படம் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ வெற்றி பெறுவார்.


