விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ
வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”தமிழ்நாட்டின் இதழியல் துறையில் இமாலய சாதனை படைத்த, ஆனந்த விகடன் பத்திரிகையை தோற்றுவித்த சாதனையாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் அருமைத்திருமகன் விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்தபோது அதிர்ச்சியும், துக்கமும் மேலிட்டது.
கலைத்துறையான வெள்ளித்திரையில் வான்முட்டும் வெற்றிக்கொடி உயர்த்திய எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆனந்த விகடன் பத்திரிகையில்தான், கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கத்தில் தன் எழுத்துக் கருவூலங்களைப் படைத்தார். அந்த பத்திரிகையின் பொறுப்பினை தனது 21 ஆவது வயதில் ஏற்றுக்கொண்ட பாலசுப்ரமணியன் விகடனில் பல புதுமைகளைத் தந்தார். தமிழ் இதழியலில் அரசியல் சமூக புலனாய்வுத் துறையில் ஆச்சர்யம் கலந்த அதிர்வலைகளை வழங்கிய ஜூனியர் விகடனை தொடங்கியவர் இப்பெருமகனார்தான்.
பத்திரிகை சுதந்திரத்திற்காக சிறைப்பட நேர்ந்தபோது, நெஞ்சுரத்தோடும் போராடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பணியாமல் சரியான பாடம் கற்பித்தார். ஆனந்த விகடனில் எனது மாணவப் பருவத்தில் என்னைக் கவர்ந்த ஜெயகாந்தன் முத்திரைக் கதைகளை வெளியிட்டவரும் இவரேதான்.
விடுதலைப்புலிகளை நான் ஆதரித்ததற்காக வேலூர் மத்திய சிறையில் 19 மாத காலம் அடைக்கப்பட்டு வெளியே வந்தவுடன், ஆனந்த விகடன் பத்திரிகை ‘வைகோ ஓர் அரசியல் அதிசயம்’ என்ற தலையங்கத்தை ஆசிரியர் குழுவினரோடு கருத்துரையாடி வெளியிட்டவரும் இந்த உத்தமர்தான் என்று அறிந்தபோது, என் பொதுவாழ்வில் எனக்கு கிடைத்த மிக உயர்ந்த பட்டயமாக ஆனந்த விகடன் தலையங்கத்தை போற்றி வருகிறேன்.
உயிர் ஓய்ந்து உடல் மறைந்தாலும் பண்பாளர் பாலசுப்ரமணியன் புகழ் என்றும் நிலைத்திருக்கும். விகடன் வானத்தில் இருந்து அந்த விண்மீன் மறைந்தாலும், அது வழங்கிய ஒளி வெளிச்சம் என்றும் மறையாமல் இருக்கும். அப்பெருமகனாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், விகடன் குழுமங்களில் பணியாற்றும் அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ”விகடன் குழும நிறுவனங்களின் தலைவர் பெரியவர் பாலசுப்ரமணியன் அவர்கள் சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இதழியலில் நேர்மை, புதுமை, துணிச்சல் என்றால் பாலசுப்ரமணியன் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு எண்ணற்ற பணிகளை செய்திருக்கிறார். ஆட்சியாளர்களை அனுசரித்துச் சென்றால் தான் தொழில் நடத்த முடியும் என்னும் நிலைக்கு பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் வந்துவிட்ட நிலையில், விகடன் இதழில் வெளியான நகைச்சுவைத் துணுக்குக்காக தம்மை கைது செய்தது தவறு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அரசிடமிருந்து பெயரளவில் அபராதத் தொகை பெற்று நான்காம் தூணின் வலிமையை நிலை நிறுத்தியவர்.
இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிப்பது, விவசாயத்தின் மீது அக்கறை கொண்டிருந்தது, சிகரெட் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதிப்பதற்கு முன்பே, அதை விகடன் நிறுவனத்தின் கொள்கை முடிவாக எடுத்து செயல்படுத்தியது என பாலசுப்ரமணியத்தின் பெருமைகளை பட்டியலிடலாம். இறப்புக்குப் பிறகும் பிறருக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தமது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பாலசுப்ரமணியன்.
பல வகைகளில் முன்னுதாரணமாக திகழ்ந்த பாலசுப்ரமணியனின் மறைவு இதழியல் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், விகடன் குழும உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ” ‘ஆனந்த விகடன்’ தமிழ் வார ஏட்டின் நீண்ட நாள்கள் ஆசிரியராக இருந்தவரும், பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க நான் சிறை செல்லவும் தயார் என்று கூறி, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், துணிந்து சிறைவாசம் ஏற்ற தீரருமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் துயரமான செய்தியாகும்.
பத்திரிகை உலகில் நீண்ட காலமாக நகைச்சுவை, அரசியல் ஏடாக திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களது சீரிய தலைமையின்கீழ் வந்த ஏடு இன்று மூன்றாவது தலைமுறையின் ஆளுமையால் நடத்தப்படுவதாகும். திரு வாசன் அவர்கள், ‘பச்சை அட்டை’ குடிஅரசு நடந்த காலம் முதற்கொண்டே தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்பும், பற்றும் கொண்டவர்; அதுபோல், தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவரும்கூட.
நல்ல மனிதராக வாழுவது, தன் காலத்திலேயே தனக்கு அடுத்த தலைமையை உருவாக்கி செப்பனிடுவது என்ற தத்துவத்திற்கு திரு எஸ்.எஸ்.வாசனைப் பின்பற்றி, திரு பாலசுப்ரமணியன் அவர்களும் ஓர் நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டாவார்.
திராவிடர் கழகத்தின் சார்பிலும், ‘விடுதலை’ குழுமத்தின் சார்பிலும், அவரது மறைவினால் வாடும் வருந்தும், அவரது மகன் சீனுவாசன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ”பத்திரிகை உலகத்தின் பாரம்பரியப் பெருமை கொண்டவரும் அனுபவம் நிறைந்த அறிவுக் களஞ்சியமுமான அய்யா பாலசுப்ரமணியன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு துடித்துப் போனேன். தமிழ் வாசகர்களை ரசனையாளர்களாகவும், நல்ல புரிதல் நிறைந்தவர்களாகவும் மாற்றிய பெருமை விகடன் குழுமத்துக்கு உண்டு. ஆள்வோர் தவறு செய்தாலும் அதனை நெஞ்சத் துணிவோடு சுட்டிக்காட்டவும், நிறை குறைகளை உரக்கச் சொல்லவும் அய்யா பாலசுப்ரமணியன் அவர்கள் ஒருபோதுமே தயங்கியதில்லை. எம்.ஜிம்.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக சிறைக்குச் சென்று வந்த அய்யா பாலசுப்ரமணியன் அவர்கள், அப்போதைய அரசாங்கத்தையே அபராதம் கட்ட வைத்த துணிச்சல்காரர். பத்திரிகைத் தர்மத்தின் ஆகச்சிறந்த உதாரணமாக தன்னை இறுதிக் காலம் வரை நிலை நிறுத்திக் கொண்டவர்.
பத்திரிகை துறையில் மட்டும் அல்லாது திரைப்படத் துறையிலும் அய்யா வாசனின் வாரிசாக நிறைய சாதித்தவர். விருப்பு வெறுப்பற்ற செய்திகளை நடுநிலை தவறாமல் அதேநேரம் வித்தியாசமான விதத்தில் வாசகர்களுக்கு வழங்கிய அய்யா பாலசுப்ரமணியன் அவர்கள் நல்ல தமிழ் எழுத்தாளர்களை தன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியவர். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட எழுத்தாளர்கள் இன்றைக்கு தமிழின் அடையாளாமாக விளங்குகிறார்கள் என்றால், அவர்களின் எழுத்துப்புலமையை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை அய்யாவையே சாரும்.
மகத்தான பத்திரிகை நிர்வாகியாகவும், ஆகச்சிறந்த ரசனையாளராகவும் எவரிடமும் காணாத பெருங்குணம் நிறைந்தவராகவும் விளங்கிய அய்யா அவர்களின் மறைவு, தமிழ் இனத்துக்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பு.
எத்தகைய சார்பும் கொள்ளாத, எத்தகைய வளைப்புகளுக்கும் ஆட்படாத நெஞ்சத்துணிவையும், படைப்பின் மூலமாக வாசகனின் தரத்தையும் சமூக மேப்பாட்டையும் உயர்த்தக்கூடிய புரட்சிகரத்தையும் அய்யா கற்பித்த பாடங்களாக இன்றைய தலைமுறையினர் ஏற்று நடப்பதே அவர் மறைவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
அய்யா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து வாடும் கோடிக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு ஆறுதலையும் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ”பத்திரிகையாளரும், ஊடகவியலாளரும், விகடன் குழுமத் தலைவருமான திரு எஸ்.பாலசுப்ரமணியனின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
1987ல் ஆனந்த விகடன் அட்டை பட கேலிச்சித்திரம் பிரசுரித்தது தொடர்பாக, சட்டமன்ற உரிமை மீறல் குழு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்து அவரை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டது. மன்னிப்புக்கேட்க மறுத்து அவர் சிறை சென்றார். கடுமையான எதிர்ப்பினால் மூன்று நாட்கள் கழித்து அவரை விடுவிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது. தமிழக அரசின் இந்தச் செயல் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்ற திரு பாலசுப்ரமணியனின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தினார். மேலும் அவருடைய தலைமையிலான இதழ்கள் அரசு பற்றியும், அரசின் கொள்கைகள் பற்றியும் தயவுதாட்சண்யமின்றி விமர்சிக்கும் பண்பு உள்ளவை.
மாணவ பத்திரிகையாளர்களை ஊக்குவித்தது, என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவைத் தமிழில் கொண்டு வந்தது, பல்வேறு எழுத்தாளர்களை ஊக்குவித்தது போன்ற அவரது குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு பாராட்டுக்குரியது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், விகடன் குழுமத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன், ”விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) 19.12.2014 அன்று மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.
மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் தரவேண்டும் என்கிற அவரது விருப்பமே, அவரது மறைவுக்கு பின்னும் சமுதாயம் மீதான அவரது அக்கறைக்கு நிகழ் சாட்சி.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பத்திரிகை சுதந்திரத்திலும், ஜனநாயகத்தின் மீதும் பெரும் நம்பிக்கையும், மதிப்பும் கொண்டிருந்த பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியத்தின் மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சங்கம்
சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வி.அன்பழகன், ”விகடன் குழுமங்களின் தலைவர் பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு, அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை என்று கொள்கை முடிவெடுத்து, உறுதியுடன் செயல்படுத்தி, பத்திரிகை உலகில் சாதனை செய்தார்.
பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியத்தின் மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
நன்றி:விகடன்