உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பிரமாண்டமான இசை , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரை பிரபலங்கள் நிறைந்த நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் “விக்ரம் “ திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகின்றனர்.
கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டை நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகப்பெரும் விருந்தாக எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இந்த விழா தமிழ் திரையுலகிலிருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, சிலம்பரசன் டி.ஆர், அக்ஷரா ஹாசன், அனிருத் , ராதிகா சரத்குமார்,லிஸ்ஸி, சந்தான பாரதி மற்றும் சுந்தீப் கிஷன் முதலான திரையுலகின் முக்கிய பிரபலங்கள் இவ்விழாவினை அலங்கரித்தனர். இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் ஏற்கனவே ஒரு சார்ட் பஸ்டர் வெற்றி பெற்றிருந்தது மேலும் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் டிரெய்லரை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்ததாலும், இந்த நிகழ்வு ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இயக்குநர்கள் பா.ரஞ்சித், மகேஷ் நாராயண், ரவிக்குமார், பிரபு சாலமன் மற்றும் ஆர்.பார்த்திபன் போன்றோர்களும், தயாரிப்பாளர்களான ஐசரி கணேஷ், ஜி .என் அன்பு செழியன், ரவீந்திரன், ராஜசேகர் பாண்டியன் , ரெட் ஜெயண்ட் மூவீஸின் செண்பகமூர்த்தி மற்றும் அர்ஜுன் துரை ஆகியோரும் இந்த பிரமாண்டமான விழாவில், கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய , மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்களான கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.