அன்று 1986ல் வெளிவந்த ‘விக்ரம்’பேசப்பட்ட அளவுக்கு பொருள் ஈட்டவில்லை. ஏனென்றால் அது பலருக்குப் புரிய வில்லை எனக்கூறப்பட்டது. அந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாகவும் ’கைதி’ படத்தினை நினைவூட்டும் வகையிலும் அதன் தொடர்ச்சியாக யூகிக்கும் வகையிலும் உருவாகியிருக்கும் படம் தான் ‘விக்ரம்’
இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். ஒரே இரவில் கதை சொல்லும்படியும் இரவுக் காட்சிகளில் பரபரபடங்களைக் கொடுக்கும் வகையில் தனது முந்தைய படங்களின் மூலம் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் இவர்.
தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாக எப்போதும் முதல் ஆளாக நிற்கும் கமலஹாசனுடன் இணைந்து இருக்கிறார். கேட்கவா வேண்டும்?
இந்தப் புதிய கூட்டணியின் புதிய பரிமாணம் முதல் காட்சியிலேயே தெரிகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரையிலும் படம் முடியும் தருவாயில் தான் நாயகனையோ அல்லது எதிர் நாயகனான வில்லனையோ சாகடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் கமல்ஹாசன் பட ஆரம்பத்திலேயே கொல்லப்படுகிறா,அதுவும் கொடூரமாக. இப்படித்தான் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இந்தப் படத்தைக் கமல்ஹாசன் படம் என்று சொல்வதை விட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படம் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவிற்கு இயக்குநரின் படமாக உருவாகி இருக்கிறது அதற்குச் சுதந்திரம் அளித்த கமலஹாசனும் பாராட்டுக்குரியவர்.
போலீஸ் அதிகாரிகள் ஹரிஷ் பெரடி, காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கொலை செய்கிறது.
போலீஸ் அதிகாரிகள் கொலைகளைப் பற்றி விசாரிக்க அன்டர்கவர் வேலை செய்யும் பகத் பாசில் அழைக்கப்படுகிறார்.
அந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறியும் போது அக் கொலைகளின் பின்னணியில் 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளின் மூலப் பொருள் இருப்பதும்,அதன் பின்னணியில் விஜய் சேதுபதி இருப்பதும் தெரிகிறது.
தொடர்ந்து மேலும் சிலர் கொல்லப்படலாம் என்கிற பதற்றமான நிலையையும் அறிகிறார் பகத் பாசில். முகமூடி அணிந்து கொலை செய்பவர்களை அவர் நெருங்குகிறார். அப்போது அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அது என்ன ?அடுத்தடுத்து என்ன ?என்பதுதான் விக்ரம் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.
படத்தின் இன்னொரு கதாநாயகன் போல் ஆதிக்கம் செலுத்துவது திரைக்கதை. அந்தளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. நீளமான வசனங்கள் எதுவும் இன்றி காட்சிகள் மூலமே அனைத்தும் சொல்லப்படுகின்றன.
படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திறமையான மூன்று நடிகர்கள். மூவருக்கும் முக்கியத்துவம், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு என சுமார் மூன்று மணி நேரம் ஓடுவதே தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கான ஒரு புதிய திசையை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.
கமல்ஹாசன் வயது அறுபதைத் கடந்தவரா என்பதை நம்பமுடியாத ஃபிட்டாகியிருக்கிறார்.
அவரது துள்ளலுக்கும் துடிப்புக்கும் ஆரம்பத்திலேயே வரும் பத்தல பாடல் காட்சியே சாட்சி.
ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது ஆதிக்கம் தொடர்கிறது.கமல்ஹாசனை வைத்து தான் இந்த படத்தின் வியாபாரம் என்கிறபோது உடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பிற்கும் சரியான இடங்களை அளித்து அவர்களையும் பெருமைப் படுத்தி உள்ளார்.விஜய் சேதுபதி, பகத் பாசில் என அவரவருக்கும் என காட்சி உச்சமுண்டு.அது மட்டுமல்ல கமல் வீட்டில் பணியாளர் போல் நடிக்கும் அந்தப் பெண்மணிக்கு கூட உச்சம் என ஒரு நடிப்பு வாய்ப்பு கிடைத்து திரையரங்கில் கைத்தட்டல்களப் பெறுகிறார்.
சற்றே’மாஸ்டர்’ படத்தின் நடிப்புச் சாயல் இதில் விழுந்தாலும், வாய்மொழியிலும், உடல் மொழியிலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.
படத்தின் முதல் பாதி வரை நம் மனதை ஆக்கிரமிக்கிறார் பகத் பாசில். அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.வழக்கை அவர் துப்பறிந்து விசாரிக்கும் விதம், தனது குழுவினருக்கு இடும் கட்டளைகள், காதலி காயத்ரியுடனான அவசர ரொமான்ஸ் என இடைவேளை வரை அவரது பகுதிகள் ரசிக்க வைக்கின்றன.
மற்ற கதாபாத்திரங்களில் நரேனுக்கு மட்டுமே கொஞ்சம் அதிகமான காட்சிகள். காவல் துறையில் ஒரு கறுப்பு ஆடு கதாபாத்திரத்தில்
செம்பன் வினோத் ஜோஸ் வருகிறார்.கமலின் பேரனாக வரும் அந்தக்குழந்தையும் பேசாமலேயே பேசு பொருளாகிவிடுகிறது.
உச்சக்கட்ட காட்சியில் யாரும் எதிர்பாராத இடத்தில் சூர்யா.சிறிதளவே வந்தாலும் சுரீரென பதிகிறார். அவரது கதாபாத்திரத்துடன் ‘கைதி 2’ ஆக வருமா, ‘விக்ரம் 3’ ஆக வருமா என்கிற கேள்வி ரசிகர்களுக்குள் அப்போதே முளைத்து விடுகிறது.
படத்தில் விஜய் சேதுபதியின் குடும்பம் ஓர் ஊர் அளவிற்குப் பெரிதாக உள்ளது.
விஜய் சேதுபதிக்கு 3 மனைவியர்கள். ஒரு மனைவி மகேஸ்வரி, மற்றொரு மனைவி மைனா நந்தினி , இன்னொரு மனைவி ஷிவானி நாராயணன்.மூவருமே காட்சிப்பொருளாக வந்து போகிறார்கள்.
இந்த மூன்று மனைவியர்களை வைத்து நகைச்சுவைக் காட்சிகள் எடுக்கத் திட்டமிட்டு இருந்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.படம் போகிற வேகமான போக்கில் அவரது குடும்பத்தையே காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு அதில் பெரிதாக இடமில்லை.
படத்தில் கமல் பேசும் சிறுசிறு வசனங்கள், சில பார்வையாளன் நேரடியான பொருள் கொள்ளும் வகையிலும் ,சிலவற்றைத் தானாக பொருள் கொண்டு நிரப்பிக்கொள்ளும் வகையிலும் உள்ளன. அனிருத் பின்னணி இசையிலும் சோடை போகவில்லை. இடைவேளையில் இளையராஜாவின் இசையில் 36 வருடங்களுக்கு முன் ஒலித்த ‘விக்ரம்…விக்ரம்’…இசையைக் கேட்கும் போது தனி மகிழ்ச்சி.
பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகளையே எடுத்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் குழுவின் உழைப்பு தெரிகிறது.
அவருக்கடுத்து சண்டை இயக்குநர்கள் அன்பறிவ். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் சபாஷ் போட வைக்கிறது.சில நேரம் நாம் பார்ப்பது ஹாலிவுட் படமா என்று எண்ணத் தோன்றும் வகையில் சண்டைக் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எந்தக் குழறுபடியும் இல்லாமல் கதையோட்டம் கெடாதபடி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் பரபரப்பான கமர்ஷியல் த்ரில்லர் படமாக விக்ரம் படம் வியக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.