யுடியுப் உலகில் பிரபலமாக இருந்த கிஷன் தாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ’ஸ்சிங்’ (SYNC) என்ற திகில் படம்.
அறிமுக இயக்குநர் விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகொட்லா, செளந்தர்யா பாலா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ், நந்தினி வினோதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சுப்ரியா ராவ், ஜெ.கலையரசி, ஷீலா விஸ்வநாத், கார்த்திக் கிருஷ்ணா, ஹரி, சார்லர் வேளாங்கண்ணி, ஸ்ரீஜா, தனுஷ், பரணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
SYNC என்றால் ஷூம் போன்ற வீடியோ செயலி. அதன் மூலம் வீடியோ சாட் செய்யும் நான்கு பேர்களுக்கு இடையே நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. வெவ்வேறு இடத்தில் இருந்துக்கொண்டு வீடியோ செயலி மூலம் பேசிக்கொள்ளும் இந்த நான்கு பேரும் அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படுகிறார்கள். அது எப்படி நடக்கிறது? என்பதை அச்சப்படாதவர்களையும் அலற வைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்கள்.
இதுபோன்ற ஒரு திகில் படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருந்தாலும் இந்திய சினிமாவில் இது தான் முதல் முறை. அதிலும், சிறிய பட்ஜெட்டில் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் மிக தரமான திகில் படமாக உருவாகியிருக்கும் இப்படம் நிச்சயம் திகில் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதை படத்தின் டிரைலரே நிரூபிக்கிறது.
ஆஹா தமிழ் ஒடிடி தளத்தின் நேரடி திரைப்படமான ’ஸ்சிங்’ (SYNC) வரும் ஜூலை 21 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை தொடர்ந்து ’ஸ்சிங்’ (SYNC) படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், படக்குழுவினருடன் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கிஷன் தாஸ், “‘முதல் நீ முடிவும் நீ’ படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டு ஊக்கமளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. அப்படத்தை பார்த்தவர்கள் எனக்கு காதல் படங்கள் செட்டாகும் என்றார்கள். ஆனால், எனது இரண்டாவது படமாக எனக்கு வந்தது இந்த படம் தான். இயக்குநர் இந்த படத்தின் கதையை சொல்லாமல், முழு திரைக்கதையையும் கொடுத்து படிக்க சொன்னார். வீட்டியில் நான் தனியாக இருந்த பொழுது கதையை படித்துக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட, நான் பயந்துவிட்டேன். அதன் பிறகு என் அம்மாவுக்கு போன் செய்து, இரண்டு மணி நேரம் போனில் இருங்கள், என்று கூறினேன். அந்த அளவுக்கு திரைக்கதையில் திகில் காட்சிகள் டெரராக இருந்தது. அப்போதே இந்த படத்தில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக நிச்சயம் SYNC திரைப்படத்தை பார்ப்பவர்கள் பயப்படாமல் இருக்க மாட்டார்கள்.” என்றார்.
இயக்குநர் விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் பேசுகையில், “நண்பர்களின் கூட்டு முயற்சியாகத்தான் இந்த படம் உருவாகியுள்ளது. படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட போது, எங்கள் முயற்சி நல்லபடியாக பயணிக்கும், ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடும். இப்படியே பல வருடங்கள் ஓடியதால், இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது முதலில் பட்ஜெட்டை தான் முடிவு செய்தோம். நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, இதற்கு ஏற்றபடி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்படி தான் திகில் படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே சமயம், இதுவரை சொல்லாத ஒரு முயற்சியாக அப்படம் இருக்க வேண்டும், நமது பட்ஜெட்டுக்கும் ஏற்றபடி இருக்க வேண்டும் என்ற முயற்சியில் உருவானது தான் SYNC திரைப்படம்.
இதுபோன்ற படங்கள் சில ஹாலிவுட்டில் வந்திருக்கிறது. ஆனால், அவை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள். ஆனால், நாங்கள் சிறிய பட்ஜெட்டில் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு இந்த படத்தை எடுத்திருப்பது தான் ஹைலைட். இதுபோன்ற படங்களுக்கு செட் அமைத்து காட்சிகளை படமாக்கியிருக்க வேண்டும். ஆனால், எங்களிடம் பட்ஜெட் இல்லாததால், நடிகர்களை தனித்தனியாக நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கினோம். அது நடிகர்களுக்கு சவாலாக இருந்தாலும், அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துமே மிக தரமாக வந்திருக்கிறது.
ஒடிடி-யில் படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது ஆஹா படம் பார்க்க விரும்பினார்கள். அவர்கள் படத்தை பார்த்த உடன், நாங்கள் எப்படி இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கையோடு இருந்தோமோ அதேபோல் அவர்களும் படத்தின் மீது நம்பிக்கை வைத்தார்கள், அதுவே எங்களின் வெற்றியாக பார்க்கிறோம். நிச்சயம் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, திகில் பட ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.
ஆஹா தமிழ் ஒடிடியின் துணைத்தலைவர் கவிதா படம் குறித்து கூறுகையில், “இந்த படத்தை நாங்கள் பார்த்த உடன், இப்படி ஒரு படத்தை நழுவ விட கூடாது. இதை எப்படியாவது நமது தளத்தில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம். மிக சிறப்பான மேக்கிங்கில், வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள SYNC திரைப்படத்தில் உள்ள திகில் காட்சிகள் அனைவரையும் சீட் நுணியில் உட்கார வைக்கும். அதே சமயம், சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கும் இந்த இளைஞர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.” என்றார்.மங்கூஸ் ஸ்டியோஸ் சார்பில் வி.ஸ்ரீதரன், விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் ஆகியோர் தயாரிப்பில், கே.பத்மநாபன் இணைத்தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சிவராம் பி.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அபிஜித் ராமசாமி இசையமைக்க, ஆர்.மனு கதிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.