நாட்டுக்கான ஆபத்து, பின்னணியில் சர்வதேச சதிகாரர்கள், அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் அதிரடி நாயகன், அவனது மனைவி, குடும்பத்துக்கான மிரட்டல் ,நண்பனின் துரோகம் ,அதிலிருந்து மீண்டு பகை முடிக்கும் நாயகன் என்கிற பழைய சூத்திரம் கொண்ட கதைதான். ஆனால் அதை தொழில் நுட்ப ஜாலம் கொண்டு பளபளப்பாக்கிக் கொடுக்க முயன்றிருக்கிறார் சிவா!
சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி அஜித் குமார் . அவரது ஆசை மனைவி காஜல் அகர்வால் .அஜித் குமாரின் பணி முறை நண்பர்விவேக் ஓபராய்.
உலகின் அதிகார சக்திவாய்ந்த பெரும்புள்ளிகள் சர்வதேச நிழல் அரசாங்கம் ஒன்றை நடத்துகிறார்கள். அதன்படி உலகம் எங்கும் பல்வேறு ஆயுதவியாபாரம் செய்ய
செயற்கையான போர்களை உருவாக்கவும் விரும்பும் நேரத்தில் நிறுத்தவும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
பூமிக்கடியில் வெடி ஆயுதங்களை புதைத்து வெடிக்க வைத்து அதை இயற்கைப் பூகம்பம் போல காட்டும் அளவுக்கு படு பயங்கரமான திட்டங்களோடு செயல்படுகிறது அவர்களின் இலுமினாட்டி கும்பல் .
அப்படிப்பட்ட அழிவுவெடி ஒன்று டெல்லியில் புதைக்கப்பட்டு இருக்கிறது .
இதற்கு காரணமான நாசகார சக்திகளைக் கண்டு பிடித்து, குண்டுகளை செயலிழக்க வைக்கும் ஆபரேஷனில் அஜித்குமார் சகாக்களுடன் இறங்குகிறார் .
அந்த நிழல் அரசாங்கத்தின் ஆட்களுடன் தன் சகாக்களுக்கும் தொடர்பு உண்டு என்பது , ஒரு நிலையில் அஜித்துக்குப் புரிகிறது .
கர்ப்பிணி மனைவியைப் பிரிந்து பல பேராபத்துகளைச் சந்தித்து அவருக்கும் அவர் மனைவியின் உயிருக்கும் வரும் ஆபத்துக்களைக் கடந்து
தரை, ஆகாய, நீர் ,காற்று, தீ என பஞ்ச பூத மார்க்கமாக சாகசம் செய்து
எப்படி வெடிகுண்டு சதிகளை முறியடித்து இந்தியாவையும் உலகையும் காப்பாற்றினார் என்பதுதான் …. விவேகம் கதை.
செர்பியப் பனிப் பிரதேசங்களில் பூகம்ப வெடி வெடிப்புக்கான வன்பொருள் வட்டு ஒன்றை அஜித் கைப்பற்றும்
அதிரடியோடு தொடங்குகிறது படம் .
படப்பிடிப்பிடங்கள்,பட உருவாக்கத்தில் தொழில் நுட்ப அசத்தல்,ஒளிப்பதிவு எல்லாம் பிரமாதம். ஆனால் பிரதானமாக இருக்க வேண்டிய கதையைக்கோட்டை விட்டுள்ளார்கள்.
வெண்பனி சூழ்ந்த அயல்நாட்டில் வெள்ளைக்காரப் பிள்ளைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டு கணவனைக் காதலிக்கும் கதாநாயகி காஜல் அழகு.
.
கம்யூப்ட்டர் ஹேக்கராக வந்து பூகம்ப வெடிப்புக்கான பாஸ் வேர்ட் விவகாரத்தில் சிக்கி , நாயகனால் காப்பாற்றப்பட முயன்று அப்புறம் தாக்கப்பட்டு முடிக்கப்படுகிற
அக்ஷராஹாசன் பாத்திரம் நல்லதிருப்பம் என்றால் பொசுக்கென முடித்து விடுகிறார்கள்.
நிபுணத்துவ அறிவு கொண்ட கம்யூப்ட்டர் ஹேக்கராக வரும் அவரை ஹோலோக்ராம் உருவம் வைத்து ஏமாற்றமுயல்வது நம்ப முடியாத ஒன்று.
நண்பனின் சகாக்களை ரயில் ஓடும் சுரங்கத்தில் அஜித் போட்டுத் தள்ளும் பகுதி ஓடும் ரயிலில் உரசி உரசி பொறிபறப்பதை கத்திக்கு சாணைபிடிப்பது போன்று நினைக்கவைக்கும் காட்சிகள் மிகையோ மிகை..
அஜித் தனி மனிதராக கவர்கிறார் , வழக்கம் போலவே ! படத்தில் ஓடுகிறார்,பறக்கிறார்,குதிக்கிறார்,பாய்கிறார்,சாகசம் செய்கிறார். ஆனால் நுட்பமான உணர்வுகளைக்காட்டி நடிக்க வாய்ப்பு இல்லையே…!
விவேக் ஓபராய் அலட்டல் இல்லாமல்நடித்துள்ளார் . அக்ஷறா ஹாசன் கவனிக்க வைக்கிறார் .காஜல் கறிவேப்பிலை போல வந்து கண்ணீர்சிந்தி ..வழக்கமான ஆக்ஷன் படத்தில் நாயகிக்கு அதுவே அதிகம். அதனால் ஓகே.
கருணாகரன் வரும் காட்சிகளில் அவர் பேசுவது எல்லாம் அபத்தம் .
அஜித்தின் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகளும் காஜலின் செண்டிமெண்ட் காட்சிகளும் ரொம்ப பழைய அலுப்பு.
இவ்வளவு பெரிய அஜித்தை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் கூடிய ஒரு சிறப்பான கதையை சொல்லக் கூடாதா ?
வெறும் தொழில் நுட்பத்தை மட்டும் நம்பி படத்தை எடுத்திருக்கிறார் சிவா.அதனால் மனதைத்தொடும் படியான ஒருகாட்சிகூட இல்லாதது குறை.கண்களை மிரள வைத்தால் போதுமா? மனதைக்கவர வேண்டாமா?
உலகத்தரம் என்பது தொழில் நுட்பத்தில்தான் இருக்க வேண்டும். படம் உள்ளூர் உணர்வுடன் இருக்க வேண்டாமா ?