எப்பொழுதும் புதிய கதைத் தளங்களில் பயணிக்கும் சுசீந்திரன் இதில் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டுதிரில்லர் படம் போல் உருவாக்கியுள்ளார்.
ஜெய்யும், மீனாட்சியும் காதலிக்கிறார்கள். மீனாட்சியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள மீனாட்சி விரும்புகிறார். ஆனால், ஜெய்யோ பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும், என்று கூறி காதலியின் தந்தையிடம் சென்று, நடந்தவற்றைக் கூறுகிறார். அவரும் காதலை ஏற்று பச்சைக்கொடி காட்டி, திருமண ஏற்பாடுகளை செய்வதோடு,
திருமணத்திற்கு முன்பு ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், ஜெய் முந்திக் கொண்டு,அவரைக் கொலை செய்துவிடுவதோடு, அவருடைய தம்பிகளையும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஜெய் யார்? எதற்காக இந்தக் கொலைகள்? என்பதற்கான பதில்தான் மீதிக்கதை.
புதிய மொந்தையில் பழைய கள் போல பழைய வாசனை அடித்தாலும் ஏற்கெனவே வந்த கதை போல இருந்தாலும், அதை பலவித வணிக அம்சங்கள் திடுக்கிடும் திருப்பங்கள் என்று முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
நாயகனாக நடித்திருக்கும் ஜெய், முடிந்தவரை சமாளித்திருக்கிறார்.
நாயகி மீனாட்சி தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகவே செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஹான்ஷா சிங் பளிச் வேடத்தில் வந்து மனதில் நிற்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் சரத் லோகிதாஸ், முத்துக்குமார், அர்ஜய், சத்ரு ஆகியோர் வழக்கமான வில்லன்களாக மிரட்டுகிறார்கள்.ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் , பால சரவணன் ஆகியோரும் வருகிறார்கள்.
வேல்ராஜின் கேமரா இயக்குநர் காட்டிய பாதையில் பயணித்துள்ளது. இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜெய், வணிக ரீதியாகப் பாடல் போட்டுள்ளார்.
கதை பழையதாகத் தோன்றினாலும் சுசீந்திரனின் விறுவிறுப்பான திரைக்கதை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
ஜெய்யின் அறிமுகம் மற்றும் அவர் வில்லன் குடும்பத்திற்குள் நுழைந்து அவர்களை அழிக்க நினைப்பது, ஆகியவை பரபரப்பைக் கூட்டுகிறது.
மொத்தத்தில், ‘வீரபாண்டியபுரம்’ வணிக ரீதியான விறுவிறு படம்.