எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் விரிவாக உருவாகியுள்ளது இந்தப் படம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் வசிக்கிறான் முத்துவீரன். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கருவேலங்காட்டில் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறான்.வெயிலும் வறுமையும் கருவேலங்காட்டு வெக்கையும் வாட்டி வதைக்கின்றன. கல்லூரி படிப்பு முடித்த முத்து வாலிபத் துடுக்கும் ஆவேசமும் நிறைந்த இளைஞனாக வளர்கிறான்.
அவனது துணிவும் துடிப்பும் தாய்க்கு அச்சமூட்டுகிறது.அவனுக்கு உள்ளூர் சரிப்பட்டு வராது என்று நினைக்கிறாள். இதற்குள் காட்டை கொளுத்தி விட்டதாக அவன் மீது பழி வந்து இழப்பீட்டுக்காக அவன் குடும்பத்தைக் கடனாளியாக்குகிறது ஒரு நில உடமையாளரின் அதிகாரம்.
குடும்ப சூழலும் உள்ளூர் மிரட்டலும் அவனை அச்சுறுத்துகிறது.ஒருவரின் உதவியில் மும்பையில் ஒரு பரோட்டா கடையில் வேலைக்குச் செல்கிறான். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது பரோட்டா கடையல்ல, கூலிப் படைகளின் முகாம் என்பது தெரிகிறது. முத்துவீரன் இருக்கும் கும்பலின் தலைவனுக்கும் எதிர் கும்பலின் தலைவனுக்கும் வகை தொடர்ந்து வரும் நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி முட்டல் மோதல்கள் நிகழ்கின்றன.
ஒரு கட்டத்தில் முத்துவீரனும் அதில் உள்ளிழுக்கப்படுகிறான். பிறகு என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.
வாழ்வின் அடுத்த நகர்வு தேடும் தாகத்தோடு இருக்கும் இளைஞனுக்கு ஏதாவது ஒரு பற்றுக் கோல் கிடைக்காதா என்று ஏங்குகிற சமயத்தில்
அவன் தாய்க்குத் தெரிந்தவர் மூலம் மும்பைக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. அன்று இரவு நடக்கும் ஒரு சம்பவத்தால் முத்து கையில் துப்பாக்கி வருகிறது. மும்பை செல்கிறவன்,அதை எடுத்து எப்போது சுடப்போகிறான் என்ற இடத்தை நோக்கி முதல் பாதிப் படம் நகர்கிறது.
சிறந்த உடம்போடு வேர்வை கசகசப்புடன் கருவேலமுள் வெட்டப் போராடும் முத்துவீர கிராமத்து இளைஞனாக சிம்பு அறிமுகமாகும் காட்சியுடன் தொடங்குகிறது படம்.
இந்த கதையில் இதுதான் நடக்க போகிறது என்பதை அடுத்தடுத்து யூகிக்க முடிகிறது. மேலும் முத்துவின் வாழ்க்கை மாற்றத்தை விரிவாக கூற காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர். மும்பையையும் அந்த புரோட்டா கடையின் வெப்பத்தையும் மும்பையின் வெளிப்புற காட்சிகளையும் நிழல் உலகத்தின் முகங்களையும் மிக அழுத்தமான காட்சிகளின் மூலம் கண்முன் நிறுத்தி முதல் பாதி படம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் படத்தில் அடியாட்கள் எப்படி உருவாகிறார்கள்? அவர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள்? அவர்களின் சூழல் மற்றும் மனநிலை என்ன? அவர்கள் வாழ்க்கை எங்கு எப்படி முடியும் என்பதை வாழ்க்கை செல்லும் பாதையில் இழுத்துச் சென்று காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் இடம்பெறும் ரொமான்ஸ் காட்சிகள் இதில் மிகவும் குறைவு. இருந்தாலும் அதன் போதாமை தெரியவில்லை.ஆனால் இருக்கும் பிற காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. வழக்கம்போல இந்தப் படத்திலும் தன்னை விட வயது அதிகமான பெண்ணையே காதலிக்கிறார் சிம்பு.
இப்படத்தில் சிலம்பரசன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் 21 வயது இளைஞன் தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் கேங்க்ஸ்டருக்கான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். காலையில் பரோட்டா கடையில் வேலை, அந்தி சாய்ந்ததும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடியிசம் என இரு வேறு புதிய உலகங்களுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.உடல் தோற்றம், உடல் மொழி, நடை உடை ,பாவனைகள், பேச்சு என அனைத்திலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபிக்கிறார்.சிம்பு ஒரு பச்சைமண். அவர் பிள்ளையாராவதும் குரங்காவதும் கையாளும் இயக்குநர் கையில் தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அவரைப் போலவே புதுமுக நாயகி சித்தி இத்னானிக்கு முதல் படம் போலவே தெரியவில்லை.கண்களால் பேசி அளவான நடிப்பை வழங்கிக் கவர்கிறார்.
சிலம்பரசனுடனான காட்சிகளில் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். சிம்பு தாயாக ராதிகாவும் மும்பைக்கு அனுப்பி வைக்க உதவி செய்பவராக பவா செல்லத்துரையும் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர கர்ஜி, குட்டி கதாபாத்திரங்களும் மனதில் பதிகின்றன. மேலும் ஒளிப்பதிவு, இசை ஆகியவை ரசிக்க வைக்கின்றன.பாடல்கள் பெரிதாக உதவவில்லை என்றாலும் அந்தக்குறை தெரியவில்லை.அந்த அளவுக்கு காட்சிகள் தொய்வின்றி உள்ளன.
முதல் பாதியில் ஒரு புதிய திசையில் புதிய கோணத்தில் புதிய அனுபவத்தை தரும் படம், இரண்டாவது பாதையில் அதைத் தொடரவில்லை.ஜெயமோகன் கதைகளில் வருவது போன்ற வீரியத்தை இரண்டாவது பாதியில் தொடராமல் சினிமாத்தனம் நுழைந்து விட்டது.சமரசப்பட்டு சில காட்சிகளை வைத்துள்ளது படத்தின் நீளத்தை அதிகரித்து அலுப்பைத் தருகிறது.
எல்லாவற்றையும் புறந் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது மொத்தத்தில் ஒரு கேங்ஸ்டர் படத்தில் இது ஒரு புதிய அனுபவம்.