‘வேடுவன்’ இணைய தொடர் விமர்சனம்

கண்ணா ரவி ,சஞ்சீவ் வெங்கட், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா நடித்துள்ளனர். பவன் குமார் இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு -சீனிவாசன் தேவராஜ். பின்னணி இசை – விபின் பாஸ்கர்,படத்தொகுப்பு – சூரஜ் கவி,தயாரிப்பு ரைஸ் ஈஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சாகர் பென்டெலா ,வெளியீடு ஜீ5.

வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள்.சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று மோதி வீழ்த்துவது போல் தீயவர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடம் சென்று வேட்டையாடும் போலீஸின் கதை இது.

சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைகின்றன.சமூக ஊடகங்கள் கேலி பேசுகின்றன. அவற்றின் தாக்கத்தால் மன அழுத்தத்தில் இருக்கிறார். கதையில் அவர் தலையிடுவதாகப் புகாராகப் பேசப்படுகிறது. இது பற்றி வாதப் பிரதிவாதங்கள் சமூக ஊடகங்களில் ‘றெக்கை’ கட்டிப் பறக்கின்றன.அதில் மனம் கலங்கிப் போகிறார்.அடுத்த படத்தையாவது வெற்றிப் படமாகக் கொடுக்க நினைக்கிறார்.

ஒரு புதுமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அது ஒரு போலீஸ் கதை. சூரஜுக்கு அந்தக்கதை பிடித்துப் போகிறது.கதை சொல்லச் சொல்ல அவர் மனதில் காட்சிகளாக விரிகின்றன.

அந்தக் கதையில் அண்டர்கவர் காப் ஆக வருகிறார்.அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார். துறையின் மேலிடம் கூறும் சமூக விரோதிகளை அவர்களது இருப்பிடத்திற்கு சென்று தீர்த்துக் கட்டுவதுதான் வேலை. அதற்காக தன் உடலை வருத்திக்கொண்டு பல மாறு வேடங்கள் போட்டுச் சம்பந்தப்பட்ட கயவர்களை வேவு பார்க்கிறார், கண்காணிக்கிறார்.சமயம் வரும் வரை கூர்மையாக கவனத்துடன் காத்திருக்கிறார்.

அந்த வகையில் முதலில் சென்னையின் பிரபல ரவுடி காடை குப்பம் குணாவை கடற்கரையில் போட்டுத் தள்ளுகிறார். அடுத்து சிவகங்கை மாவட்டத்தில்  மருதுபாண்டிபுரம் ஆதிநாதனை போட்டு தள்ள வேண்டும். அவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் ,மிரட்டல் என்று கொடிகட்டிப் பறக்கிறான்.எல்லா ரவுடிகளைப் போலவே அவன் தன்னைச் சுற்றி இருக்கும் மக்களிடம் ஒரு பரோபகாரியாக வேடமிட்டு அதை நம்ப வைக்கிறான். அவன் ஊரை அடித்து உலையில் போடும் அவன் சிலருக்கு உதவிகளும் செய்வதால் அவனை அவர்கள் நாயக வழிபாடு செய்கிறார்கள்.அவனைக் கண்காணிப்பதற்காக அந்த ஊரில் போய் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலைக்குச் சேர்கிறார்.

ஒரு கட்டத்தில் அவனது மனைவி இவரது முன்னாள் காதலி என்று தெரிகிறது.அவளும் அவரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். அவளது பிள்ளைகளும் இவரிடம் ஒட்டிக்கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் தன்னைத் தீர்த்து கட்ட வந்திருக்கும் போலீஸ்கார் என்று ஆதிநாதனுக்குத் தெரிகிறது.அந்த என்கவுண்டர் சரியாக முடிக்கப்பட்டதா?காதலி, அவள் பிள்ளைகளின் அன்பு போலீஸ் மனத்தை மாற்றியதா என்பதே மீதிக்கதை.கதை கேட்கும் நடிகர் சூரஜ் , கதையில் சில கேள்விகள் கேட்கிறார்.படத்தில் சிலவற்றை மாற்ற நினைக்கிறார் .அதனால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது. தயாரிப்பாளர் பதற்றம் ஆகிறார்.அது முடிந்ததா? அந்த படம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதைச் சொல்வதே இந்தத் தொடர்.

நடிகர் சூரஜ் பாத்திரத்தில் கண்ணா ரவி நடித்திருக்கிறார்.ஏற்று இருப்பது என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் என்றாலும் பெரும்பாலும் காக்கி சீருடை அணியாமலே இருக்கிறார்.இடத்துக்கு ஏற்ப அவர் அணியும் மாறு வேடங்கள் சிறப்பாக உள்ளன.பிச்சைக்காரன், பரோட்டா மாஸ்டர், கிராமத்து ஆள் போன்ற பல முகங்களைக் காட்டியுள்ளார்.அதில் பாத்திர நேர்மை பிசகாமல் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.அந்த வகையில் ஒரு தேர்ந்த நடிகராக மிளிர்கிறார் கண்ணா ரவி .

நடிகராக இருக்கும் போது அவர் மனைவியாக வரும் ஷ்ரவனிதா ஶ்ரீகாந்த்,நேர்முக உதவியாளர் போல அவருக்குச் சரியான வழிகாட்டியாக இருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்துக்குள் கண்ணா ரவி ஏற்றுள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசின் மனைவியாக வரும் லாவண்யா, தோற்றத்திலும் இயல்பான நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார்.அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் நன்று.

கண்ணா ரவியின் முன்னாள் காதலியாக வரும் வினுஷா தேவி, தன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று கணவனிடமே அறிமுகப்படுத்தி வைப்பதும் விருந்து வைப்பதும் பரபர ரகம்.படத்தில் வரும் இந்த மூன்று பெண்களில் வினுஷா தேவிதான் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறார்.

மருதுபாண்டிபுரம்  கட்டப்பஞ்சாயத்து வக்கீலாக சஞ்சீவ் வெங்கட் அலட்டிக் கொள்ளாமலேயே அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.கண்ணா ரவியை விழிகளாலேயே துழாவி அவர் கண்டுபிடிக்கும் விதம் சுளீர் .

மீனவ குப்பத்து தாதாவின் மனைவியாக வரும் ரேகா நாயர் மது குடிக்கும் காட்சிகள் ரகளை.போலீஸ் கமிஷனராக வரும் ஜீவா ரவிக்கு சின்ன பாத்திரம்தான் என்றாலும் நிறைவாக உணர வைக்கிறார்.

பல்வேறு நுட்பங்கள் கொண்ட உணர்வுகளை கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்த வைத்துள்ளார் இயக்குநர் பவன்.அதற்கேற்ற திரைக்கதை எழுதி கதை ஓட்டத்தை சுவாரஸ்யப் படுத்திருக்கிறார்.மூன்று வித அடுக்குகளில் நின்று இந்தக் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் .ஆனாலும் குழப்பம் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்.

தனது காதலியின் கணவனைத் தான் கொல்ல வந்திருக்கிறோம் என்று கண்ணா ரவி புரிந்து கொள்ளும் இடம்,அந்தக் குடும்பம் அவர் மீது காட்டும் பாசம் போன்றவை சரியான உணர்ச்சி விளையாட்டுக்கள். இப்படி இயல்பான கதை ஓட்டமே பெரிய பரபரப்பைக் கூட்டுகிறது.

விழிகளை விரிய வைக்கும் பிரம்மாண்டம், செலவு பிடிக்கும் காட்சிகள், செயற்கையான பின்புலங்கள் எதுவும் இல்லாமல் கதை செல்லும் போக்கிலேயே உருவாக்கி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.உள்ளாதிக்கம் செலுத்தும் கதை சரியாக இருக்கும்போது வேறு எந்தச் செயற்கை பூச்சுகளும் அலங்காரங்களும் தேவைப்படவில்லை .

காட்சிகளைக் கண்ணுக்கு முன் நேரடி அனுபவமாக உணர வைக்கும் ஒளிப்பதிவு சிறப்பு ஒளிப்பதிவு -சீனிவாசன் தேவராஜ். .கதை மாந்தர்களின் உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் செய்திருக்கும் பணியும் அழகு. சற்றும் பரபரப்பில் தொய்வு ஏற்படாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் – சூரஜ் கவி.

அடர்த்தியான கதைகளையும் வித்தியாசமான கோணத்தையும் கொண்ட படைப்புகளைத் தருவது ZEE5 நிறுவனம்.ZEE5 -ன் தயாரிப்புகளின் தர முத்திரையை இதில் இயக்குநர் தக்க வைத்துள்ளார் என்றை கூற வேண்டும்.

ஊடகங்களில் வரும் செய்திகளில், எழுதப்பட்டுள்ள வரலாறுகளில் இருப்பவற்றை அப்படியே நம்புகிறோம் .அதில் உண்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.ஏனென்றால், ‘உண்மைகளை யாரும் நம்புவதில்லை.எல்லாரும் எதை நம்புகிறார்களோ, அதுவே உண்மையாகிறது’ என்று முடிகிறது.
‘வேடுவன்’ ஒரு விறுவிறுப்பான இணைய தொடர் அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.