இது ஒரு சைக்கோ கொலையாளிகளின் சீசன் போலும்.
ஊட்டியில் சைக்கோ ஒருவனால் தொடர் கொலைகள் நடக்கிறது. அதில், அசோக் செல்வனின் கண்முன் அவருடைய காதலி ஐஸ்வர்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார். சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித துப்பும் கிடைக்காததால் கொலையாளி யார்? என்பதைப் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொலை நடந்த இடத்தில் கேட்ட ஒரே ஒரு குரல் ஒலியை மட்டுமே வைத்துக்கொண்டு கொலையாளியைத் தேடி வரும் அசோக் செல்வன், கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பலவித திருப்பங்களோடு பரபரப்பாகச் சொல்வதே ‘வேழம்’.
வேழம் என்றால் யானை. யானைக்கு இருக்கும் குணங்களில் ஞாபக சக்தி மிக முக்கியமானது. அந்த வகையில் குரல் ஒலியை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு கொலையாளியை அசோக் செல்வன் தேடுவதால் இந்த படத்திற்கு வேழம் என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
மென்மையான பாத்திரங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், முதல் முறையாக அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கிறார். தாடியுடன் கரடுமுரடான தோற்றத்தில் வலம் வரும் அசோக் செல்வன் ஆக்ஷனிலும் தன்னால் சோபிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.
ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரண்டு நாயகிகள். இருவரும் கதையுடன் பயணிக்கிறார்கள்.நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் சுந்தர், அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
அபிஷேக், கிட்டி, பி.எல்.தேனப்பன் என்று படத்தில் வரும் மற்ற பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் பொருத்தமான தேர்வுகள்.
ஜானு சந்தரின் இசையமைப்பில் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கின்றன.
சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
சைக்கோ கொலைகளுடன் தொடங்கும் படம் அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்ப்பார்க்காத திருப்புமுனைகளோடு சுவாரஸ்யமாக நகர்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் வரை என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாதபடி சஸ்பென்ஸோடு கதை சொன்ன இயக்குநருக்கு சபாஷ் சொல்லலாம்.
இப்படிப் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பலவித முடிச்சுகளோடு பயணிக்கும் படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது.
மொத்தத்தில், ‘வேழம்’ வேகம்.