நடிகர் ஆர்.கே. நடித்து மக்கள் பாசறை நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘வைகை எக்ஸ்பிரஸ் ‘.
படத்தை இயக்கியுள்ளவர் பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ்.
படத்தின் கதை என்ன?
ஒரு நாள் இரவு வேளையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்கிறது வைகை எக்ஸ்பிரஸ் . அந்த ரயிலில் அடுத்தடுத்த கூபேக்களில் சினிமா நடிகை இனியா, அவரது அக்கா அர்ச்சனா, அக்காவின் கணவர்,துப்பாக்கி சுடும் வீராங்கனை நீத்து சந்திரா,போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், கன்னித்தீவு கார்மேகம் என்கிற எழுத்தாளர் மனோபாலா, நடனப் பெண் துளசி மணி ,மருத்துர் சுஜா வாருணி
குடும்பி சிங்கமுத்து , தொலைக்காட்சி பெண் நிருபர் கோமல் ஷர்மா,தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பயணிக்கிறார்கள்.
இந்த வெவ்வேறு குழுக்களும் மதுரைக்கு அவரவருக்கான வேறு வேறு காரணங்களுக்காகப் பயணிக்கிறார்கள். ரயில் சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் அருகில் 2 மணி நேர வண்டி நின்றிருந்த அந்த இடைவெளியில் ரயிலில் பயணம் செய்த 3 இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இவை ஒரே ரயிலில் ஒரே பயணத்தில் ஒரே இரவில் நடந்தாலும் மூன்று பெண்களின் மீதான கொலைத் தாக்குதலுக்குமான பின்னணி வேறு . காரணமான நபர்கள் வேறு .
இந்தக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் வேலையான துப்பு துலக்கும் பணி , திறமை வாய்ந்த காவல்துறை கமிஷனராக இருக்கும் சர்புதீன் என்னும் ஆர்.கே. வசம் வருகிறது.இந்தக் கொலை வழக்கை அவர் விசாரிக்கத் துவங்குகிறார்.
சந்தேகங்கள் சாட்சியங்கள் என பல திசைமாற்றங்கள் இடையே உண்மை எப்படி வெளியே வருகிறது என்பதே க்ளைமாக்ஸ்.
விசாரணை அதிகாரியாக வரும் ஆர்.கேயின் புலன் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்க.. கதையும், திரைக்கதையும் விறுவிறுப்பாக விரிகின்றன.
‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ ரயிலின் வேகத்தைவிடவும் வேகமாக செல்கிறது திரைக்கதை.
ஆர்.கே தனக்கான கதையைத் தேர்வு செய்து அதில் நடித்திருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவரை வெகுவாகப் பாராட்டலாம்.
பேசும் போதும் சண்டை காட்சிகளிலும் அனல் பறக்கிறது. தொழில் நுட்ப உதவியுடன் நடைபெறும் அனைத்து துரத்தல் காட்சிகளிலும் மெய் மறக்கச் செய்யும் விறுவிறுப்பு..
வழக்கமாக வரும் காதல் காட்சிகள் எதுவுமில்லை.நகைச்சுவை காட்சிகள்கூட ஆர்.கே.வை மையப்படுத்த வில்லை. எனவே படத்தில் மிடுக்கும் துடிப்பும் கொண்ட அதிகாரியாகப் பளிச்சிட்டுள்ளார். அந்தக் கமிஷனர் வேடத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.கே.
நீத்து சந்திரா முதல்முறையாக ராதிகா,ஜோதிகா என இரு வேடங்களில் நடித்துள்ளார். ஆவேசமான அக்கா வேடத்தை விட அமைதியான தங்கை வேடத்தில் பளிச்சிடுகிறார்.அனுதாபத்தையும் அள்ளுகிறார்.
இனியாவுக்கு நடிக்க இனிய வாய்ப்புகள் இல்லை.அவருடைய அக்காவாக வரும் டிவி புகழ் அர்ச்சனாவுக்கு நல்ல அறிமுகம். அர்ச்சனா இனி சினிமாவிலும் வலம்வருவார்.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் காமெடியில் தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். சீட்டுக் கட்டு பிரியராக வந்து கலக்குகிறார்.
அனூப் சந்திரன் என்னும் மலையாள நடிகர் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் நவரச நகைச்சுவையில் அனைவரையும் கவர்கிறார். அட.. போட வைக்கிறார்.
சின்னப்பாதேவர் பாணியில்“முருகா”, “முருகா” என்றபடி நாசரும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்.கேயுடன், நீத்து சந்திரா, கோமல் ஷர்மா, இனியா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமல்ல மனோபாலா, சுமன், ரமேஷ் கண்ணா, சித்திக், ஜான் விஜய், சுஜா வருணி, சிங்கமுத்து, அனுமோகன், அனுப் சந்திரன், அர்ச்சனா , இயக்குநர் . ஆர்.கே.செல்வமணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.
படத்தில் வரும் அனைவருமே குறிப்பிடத்தக்க அளவில் நடித்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பும் சம அளவில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானது.
சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவில் அழகுணர்ச்சிக்குக் குறைவில்லை. அனைவரையும் அத்தனை அழகாகக் காட்டியிருக்கிறார். ரயில் தொடர்பான காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.
எஸ்.எஸ்.தமணின் பின்னணி இசையில் மட்டும் சற்று ஒலி அளவைக் குறைத்திருக்கலாம்.
படத்தில் ஆர். பிரபாகரின் வசனங்கள் கூட பல இடங்களில் காட்சிகளின் தீவிரம் தாண்டி கவனிக்க வைக்கின்றன.
முடிவை யாராலும் ஊகிக்க முடியாத வகையில் கொண்டு போனதற்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ படம் பார்ப்பவர்களை ஏமாற்றாத நிச்சயமாகப் போரடிக்காத விறுவிறு பட அனுபவம்தான்.